"அம்மா, உன் விசுவாசம் பெரிது. உன் விருப்பப்படியே ஆகட்டும்"
(மத்.15:28)
நமக்கு எப்போதுமே ஒரு ஆசை:
நினைத்தது உடனே நடக்க வேண்டும்.
கேட்பது உடனே கிடைக்க வேண்டும்.
''கேளுங்கள், கொடுக்கப்படும்" என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்.
ஆண்டவர் சொன்ன சொல் தவற மாட்டார்.
அவரிடம் கேட்டது உறுதியாக கிடைக்கும்.
ஆனால் நாம் ஆசைப்படுவதுபோல உடனே கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
எப்போது கிடைக்கும என்பது நமக்குத் தெரியாது.
கிடைக்கவேண்டிய நேரத்தில்,
அதாவது
எப்போது கிடைத்தால் நமக்கு நல்லது என்று இறைவன் தீர்மானிக்கிறாரோ அப்போது கிடைக்கும்.
இயேசு தீர், சீதோன் நகரங்களின் பக்கம் சென்றபோது
அங்கே வாழ்ந்த கனானேயப் பெண் ஒருத்தி அவரிடம் வந்து,
"ஆண்டவரே, தாவீதின் மகனே!
என்மேல் இரக்கம்வையும். என் மகள் பேய்பிடித்துப் பெரிதும் துன்புறுகிறாள்" என்று கூவினாள்.
அவள் ஒரு யூத பெண்மணி அல்ல.
ஆயினும் அவள்
"ஆண்டவரே, தாவீதின் மகனே" என்று என்று கூறியதிலிருந்து
அவள் அவரை மெசியா என்று ஏற்றுக் கொண்டாள் என்பதையும்,
அவர் மீது அவளுக்கு விசுவாசம் இருந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
விசுவாசம் இறைவன் நமக்கு அளிக்கும் நன்கொடை என்பது நமக்கு தெரியும்.
ஒரு கனானேயப் பெண்ணுக்கு விசுவாசத்தைக் கொடுத்து, அவளை தன்னிடம் உதவி கேட்க வரும்படி தூண்டியவரும் இறைவன்தான் என்பதும் நமக்குத் தெரியும்.
அந்தப் பெண் செய்தது எல்லாம் ஆண்டவரது நன்கொடையை ஏற்றுக்கொண்டு அவரது தூண்டுதல்படி நடந்ததுதான்.
ஆனாலும் அவளது மன்றாட்டை உடனே ஏற்றுக்கொண்டதாக இயேசு காண்பிக்கவில்லை.
அவர் கொடுத்து அவள் ஏற்றுக் கொண்ட விசுவாசம் அவளிடம் இருந்தது என்பது அவருக்குத் தெரிந்திருந்தும் ஏன் அவளது மன்றாட்டை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை?
ஆழமான அசைக்கமுடியாத விசுவாசத்திற்கு இயேசு எவ்வளவு முக்கியம் கொடுக்கிறார் என்பதை
அவருடன் வந்தவர்களும்
இன்று நற்செய்தியை வாசிக்கும் நாமும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
அவளது மன்றாட்டை ஏற்றுக்கொண்டதாக காண்பிக்கவில்லை.
சீடர் அவரை அணுகி,
"இவள் நமக்குப்பின் கத்திக் கொண்டு வருகிறாளே, இவளை அனுப்பிவிடும்" என்று வேண்டிய பின்னர்தான்
அவர், "இஸ்ராயேல் குலத்தில் சிதறிப்போன ஆடுகளிடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
உலகத்தவர் அனைவருமே அவரது படைப்புகள்தான்.
அவர் மனிதனாகப் பிறந்தது உலகினர் அனைவருக்காகவும்தான்.
ஆனாலும் அவளது விசுவாசத்தை வெளிக்கொணர அவர் வைத்த பரிசோதனைக்காக இவ்வாறு கூறினார்.
ஆனாலும் அந்தப் பெண் அவரது செபத்தை விட்டுவிடவில்லை.
"ஆண்டவரே, எனக்கு உதவிபுரியும்"
என்று திரும்பவும் கேட்டாள்.
அவர் மறுமொழியாக, "பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.
இந்த வார்த்தைகள் பார்வைக்கு அந்தப் பெண்ணை இழிவு படுத்துவதுபோல் தோன்றும்.
ஆனாலும் ஆண்டவரின் நோக்கம் அது அல்ல.
அந்தப் பெண்ணின் தாழ்ச்சியை வெளிக் கொண்டு வரவும்,
அதுதான் புண்ணியங்களின் அரசி,
(Queen of all virtues) என்ற உண்மையை நமக்கு தெரியப்படுத்தவுமே இவ்வாறு சொன்னார்.
அந்த பெண்ணும் தாழ்ச்சியோடு,
"ஆமாம், ஆண்டவரே, நாய்க்குட்டிகளும் உரிமையாளரின் மேசையினின்று கீழே விழும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்று பதிலளித்தாள்.
அதன்பின் இயேசு,
"அம்மா, உன் விசுவாசம் பெரிது. உன் விருப்பப்படியே ஆகட்டும்" என்றார்.
அந்நேரமுதல் அவள்மகள் குணமாயிருந்தாள்.
இங்கு ஒரு உண்மையை நாம் நினைவு கூற வேண்டும்.
விசுவாசத்தை நன்கொடையாக அவளுக்கு அளித்தவர் அவர்.
அவள் செய்ததெல்லாம் தனது பரிபூரண சுதந்திரத்தை பயன்படுத்தி அவர் அறிவித்த நன்கொடையை ஏற்றுக் கொண்டதுதான்.
ஆனாலும் இயேசு விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட அவளை பெருமைப்படுத்தும் விதமாக,
"உன் விசுவாசம் பெரிது." என்றார்.
நமது ஆன்மிக வாழ்விலும் முற்றிலுமாக செயல் புரிபவர் இறைவன்தான்.
அவர் முற்றிலும் இலவசமாக நமக்குத் தரும் அருளை ஏற்றுக்கொண்டு அவர் சொன்னபடி நடப்பவர்கள் மட்டும்தான் நாம்.
ஆனாலும் அவரது வழிகாட்டுதலின்படி நடக்கின்ற நமக்கு அவரோடு வாழும் நித்திய பேரின்ப வாழ்வை பரிசாக அளிக்கிறார்.
நாம் அந்த நித்திய பரிசுக்காக சுயமாக எதுவும் செய்துவிடவில்லை.
அவர் அளித்த அருளை நமது சுதந்திரத்தை பயன்படுத்தி ஏற்றுக்கொண்டவர்கள்தான் நாம்.
நமது சுதந்திரத்தை இறைவனது விருப்பப்படியே பயன்படுத்தியதற்கு பரிசுதான் விண்ணக வாழ்வு.
சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தும்போது பாவம் நுழைகிறது.
இறைவன் விருப்பப்படி பயன்படுத்தும் போது விண்ணகம் நமக்கு உரிமை ஆகிறது.
இந்த உரிமையும் இறைவன் நமக்கு அளிக்கின்ற நன்கொடையே.
அவருக்காக வாழும்படி நமக்கு அழைப்பு விடுக்கும் அவர்,
நாம் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டவுடன்,
அவரே நம்மில் வாழ்ந்து நமக்கு நித்திய பேரின்ப பரிசையும் இலவசமாகவே அளிக்கிறார்.
நாமும் புனித சின்னப்பரோடு சேர்ந்து சொல்லுவோம்:
"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."
(கலாத்.2:20)
என்னில் வாழும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்காக எனக்குக் கிடைக்கப்போவது அவரோடு
நித்திய வாழ்வு!
வாழ்பவர் அவர், பரிசு எனக்கு. இது அவரது தாராள குணம். (Generosity)
கானானியப் பெண்ணின் மகளை இயேசு குணமாக்கிய புதுமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆன்மீகப் பாடம்.
1. நாம் இயேசுவை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தால்,
அவரே நம்முள் வந்து
விசுவாசம் உள்ளிட்ட அனைத்து வரங்களையும் இலவசமாகத் தந்து
நம்மை வழிநடத்தி,
நாம் அவர் வழி நடந்ததற்காக நமக்கு நிலைவாழ்வை அளிப்பார்.
2.நமது மன்றாட்டை கேட்க காலம் தாழ்த்துவார். அது நமது விசுவாசத்தில் நாம் உறுதியாக இருப்பதற்காக.
விண்ணப்பத்திற்கு விடையை மட்டுமல்ல நமது உறுதியான விசுவாசத்திற்கு நித்திய வாழ்வையும் பரிசாக அளிப்பார்.
3.கனானேயப் பெண்ணிடமிருந்து தாழ்ச்சி என்ற புண்ணியத்தின் மகிமையை கற்றுக்கொள்ளவேண்டும்.
இயேசு அவளிடம்
"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குப் போடுதல் நல்லதன்று"
என்று சொன்னபோது அவள் வருத்தம் அடைய வில்லை.
மாறாக தன்னை அதைவிட தாழ்த்தி
"ஆமாம், ஆண்டவரே, நாய்க்குட்டிகளும் உரிமையாளரின் மேசையினின்று கீழே விழும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே"
என்று கூறினாள்.
அந்த தாழ்ச்சிதான் இயேசு
"அம்மா, உன் விசுவாசம் பெரிது."
என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நம்மை நாமே தாழ்த்திக் கொண்டால் தான் விண்ணுலகம் செல்லும் அளவிற்கு உயர முடியும்.
4. நமது ஆன்மீக வாழ்வில் முற்றிலுமாக நம்மோடு இருந்து செயலாற்றி கொண்டிருப்பவர் இயேசுவே என்பதை நாம் உணர வேண்டும்.
இதை உணர்ந்தால் நமக்கு என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
5. உறுதியான விசுவாசத்தோடு கேட்போம். கேட்பதைப் பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment