"இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்"
(மாற்கு. 9:7)
தாபோர் மலையில் இயேசு இராயப்பர், அருளப்பர், வியாகப்பர் ஆகியோர் முன் மறுரூபம் ஆனபோது விண்ணகத் தந்தையிடமிருந்து வந்த வார்த்தைகள்:
"இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்."
இயேசு நற்செய்தி அறிவித்த காலத்தில் சொன்ன அனைத்து வார்த்தைகளுக்கும் வானக தந்தையின் புத்திமதி பொருந்தும்.
இயேசு அறிவித்த நற்செய்தி முழுமையையும் நாம் ஏற்று,
அதன் வழி நடக்க வேண்டும் என்று தந்தை இறைவன் நமக்கு அறிவுறுத்துகிறார்.
செவிசாய்த்தல் என்றால் வெறுமனே கேட்பதை மட்டுமல்ல,
கேட்டபடி நடப்பதையும் குறிக்கும்.
மறுரூபம் ஆனதற்கு ஆறு தினங்களுக்கு முன்பு இயேசு
தான் பாடுகள் பட்டு மரிக்க போவது பற்றி கூறிய வார்த்தைகளும்,
இயேசுவின் திருச்சபைக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படவிருந்த இராயப்பர் இயேசுவின் பாடுகளுக்கு மறுப்பு தெரிவித்ததும்,
இயேசு அவரை கண்டித்ததும்
இப்போது நினைவுக்கு வருகின்றன.
இயேசு இராயப்பருக்கு இதுபற்றி ஒரு பாடம் புகட்ட விரும்பியிருக்க வேண்டும்.
அதனால்தான் இராயப்பரையும், அருளப்பரையும், வியாகப்பரையும் அழைத்துக்கொண்டு தாபோர் மலைமீது ஏறினார்.
அங்கே தனது மகிமையின் தோற்றத்தில் மறுரூபம் ஆனார்.
எலியாசும், மோயீசனும் தோன்றி இயேசுவோடு அவர் பட விருக்கும் பாடுகள் பற்றியும், மரணம் பற்றியும் உரையாடினர்.
அப்போது மேகம், ஒன்று வந்து அவர்கள்மேல் நிழலிட, "இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.
இயேசுவின் உரையாடலையும், விண்ணகத் தந்தையின் அறிவுரையையும் கேட்டபின் இயேசு பாடுகள் பட்டு மரிக்க வேண்டியது விண்ணகத் தந்தையின் சித்தம் என்பது இராயப்பருக்குப் புரிந்திருக்கும்.
இறைமகனின் வார்த்தைகளின் படி நடப்பது ஒன்றுதான் தங்களது கடமை என்றும் புரிந்திருக்கும்.
நாம் ஒழுங்காக நற்செய்தி வாசித்திருந்தால் நமக்கு இன்னுமொரு முக்கியமாக இறை உண்மை புரிந்திருக்கும்.
இயேசு அப்போஸ்தலர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது அவர்களிடம் சொன்ன வார்த்தைகளை பார்த்தால் நமக்கு ஒரு உண்மை புரியும்.
"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன்" (மத் 10:16)
மனிதர் உங்களை நீதிமன்றங்களுக்குச் கையளிப்பார்கள். தங்கள் செபக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.(17)
" உங்களை ஆளுநரிடமும் அரசர்களிடமும் இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு, அவர்கள்முன்னும் புறவினத்தார்முன்னும் சாட்சியாய் இருப்பீர்கள்." (18)
'' என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."(22)
" ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள்." (28)
இயேசுவின் இந்த வார்த்தைகளிலிருந்து நமக்கு புரிய வேண்டிய உண்மை:
வானகத் தந்தையால் பாடுகள் படும்படி இயேசு அனுப்பப்பட்டார் என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை இயேசுவும் தன் சீடர்களை பாடுகள் படும்படிதான் நற்செய்தி அறிவிக்க அனுப்பினார் என்பதுவும்.
"என் ஆடுகளை மேய்." என்ற வார்த்தைகளுடன் இராயப்பரைத்
திருச்சபையின் தலைவராக நியமித்த பின் இயேசு அவரிடம் கூறினார்:
"உண்மையிலும் உண்மையாக உனக்குச் சொல்லுகிறேன்:
நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு, உனக்கு விருப்பமான இடத்திற்குச் சென்றாய்:
வயது முதிர்ந்தபொழுதோ நீ கைகளை விரித்துக்கொடுப்பாய், வேறொருவன் உன்னைக் கட்டி உனக்கு விருப்பமில்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வான்" என்றார்.
இராயப்பர் எத்தகைய மரணத்தால் கடவுளை மகிமைப்படுத்துவார் என்பதைக் குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார்.
திருச்சபையை வழி நடத்துவது என்பது இஷ்டப்படி அல்வா சாப்பிடுவது போன்று இனிமையான விஷயம் அல்ல.
உலகின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு உழைத்து இறுதியில் இயேசுவுக்காகவே உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய பணி நற்செய்திப் பணி.
விண்ணகத் தந்தை தன்னை உலகிற்காக பாடுகள் பட்டு மரிப்பதற்காக அனுப்பியது போலவே
இயேசு இராயப்பரையும் திருச்சபைக்காகப் பாடுகள் பட்டு
மரிப்பதற்காகவே அனுப்பினார்.
இராயப்பரை மட்டுமல்ல
நற்செய்தி பணிக்காக அனுப்பும் எல்லோரையும் அதற்காகவே அனுப்புகிறார்.
உலகின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
இறுதியில் நற்செய்தி பணிக்காகவே உயிரை தியாகம் செய்ய வேண்டும்.
இன்றைய தினம் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இது. பொருந்தும்.
Evangelisation is not a bed of roses,
but of thorns.
நற்செய்தி அறிவிக்கப்பட ஆரம்பித்த ஆரம்ப காலத்திலிருந்தே நற்செய்தி அறிவிப்பாளர்கள்
அரசுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்கள் ரத்தத்தையும், உயிரையும் விலையாகக் கொடுத்தே கிறிஸ்துவை அறிவித்திருக்கிறார்கள்.
கான்ஸ்டன்டைன் போன்ற சில மன்னர்கள் கிறிஸ்தவத்திற்கு ஆதரவாகவும் இருந்திருக்கிறார்கள்.
நாம் நமது நாட்டில் கிறிஸ்தவ எதிர்ப்பு சூழ்நிலையில்தான் கிறிஸ்தவத்தை போதித்துக் கொண்டிருக்கிறோம்.
அரசியல் சாசன அடிப்படையில் நமக்கு நமது சமயத்தை அனுசரிக்கவும், பரப்பவும் உரிமைகள் இருந்தும்
நமது உரிமைகளை நம்மால் பயன்படுத்த முடியாத அளவிற்கு நம்மை சூழ்ந்துள்ள கிறிஸ்தவ எதிர்ப்பு சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
நமது உரிமைகளுக்காகப் போராட நமக்கு உரிமை இருப்பது உண்மைதான்.
ஆனால் கடந்தகால அனுபவத்தில் போராட்டங்களால் நமக்கு எதிர்விளைவுகளே ஏற்பட்டிருக்கின்றன.
ஆகவே போராட்டங்களில் நமது ஆன்மீக சக்தியை விரையமாக்குவதை விட்டு விட்டு
இறையன்பு, பிறரன்பு அடிப்படையில் கிறிஸ்தவத்தை வாழ்வதில் அதிக அக்கரை காட்டுவோம்.
தேவ திரவிய அனுமானங்களை முறையாகப் பெறுவதின் மூலம், நமது ஆன்மாவை பரிசுத்தமாக வைத்துக் கொள்வோம்.
கிறிஸ்துவின் போதனைப்படி,
நமது சமய அனுசரிப்பு உரிமைகளை மறுப்பவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
நமக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதோடு, அவர்களுக்கு நம்மால் இயன்ற நன்மைகள் செய்வோம்.
நமது உரிமைகளுக்காக போராடும்படி இயேசு சொல்லவில்லை,
ஆனால் நமக்கு தீமை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்மை செய்யும்படி போதித்திருக்கிறார்.
தனது சிலுவைப் பாதையின்போது இயேசு தனது உரிமைகளுக்காகப் போராடவில்லை.
மாறாக தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.
நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நாம் கொடுக்கும் கிறிஸ்தவ அன்பு அவர்களை காலப்போக்கில் மனம் திருப்பும்.
எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் நமது கிறிஸ்தவ கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவோம்.
வாயினால் மட்டுமல்ல வாழ்க்கையினாலும் மற்றவர்களுக்கு கிறிஸ்துவை அளிப்போம்.
சிலுவைப் பாதை தான் நமது வாழ்க்கைப் பாதை.
சிலுவைப் பாதை வழி நடந்து கிறிஸ்துவை அனைவருக்கும் அளிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment