Sunday, August 8, 2021

கடவுளால் செய்ய முடியாதவை.,

   
   கடவுளால் செய்ய முடியாதவை.

"ஏங்க, நான் ஒரு கேள்வி கேட்டால் கோபப்பட மாட்டீங்களே!"

", கேட்காவிட்டாலும் கூட கோபப்பட மாட்டேன்!''

"கோபப்பட்டாலும் பரவாயில்லை.
உங்களை ஒருவன் சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்லி திட்டினால் உங்களுக்கு என்ன வரும்?"

",ஒண்ணுமே வராது."

"கோபம் வராது?"

",எதுக்கு கோபம் வரணும்? திட்டுறது அவன். வலிக்கப்போறது அவன் வாயி. எனக்கு எதுக்கு கோபம் வரணும்?"

"சரி, நேரடியாகவே கேட்டுவிடுகிறேன்.

இயேசு சர்வ வல்லபர்தானே?"

", அதுல என்ன சந்தேகம்?"

"உலகில் வாழும் அனைவரும் அவரால் படைக்கப்பட்டு  பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

 ஆனால்  அவர்களில் ஒரு சிலர் அவரையும்,

அவரால் நிறுவப்பட்ட திருச்சபையையும்,

 அவரது பணியில் ஈடுபட்டிருக்கும் சீடர்களையும் தரக்குறைவாக வார்த்தைகளால் திட்டுகிறார்களே,

 அவருக்கு கோபமே வராதா?

தான் சர்வ வல்லபர் என்பதை அவர்களிடம் காண்பிக்க வேண்டாமா?"

", நீ கேட்பது ஒளி விளக்கிலிருந்து இருட்டே வராதா என்று கேட்பது போலிருக்கிறது.

பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

பானையில் ஒரே நேரத்தில் குளிர் நீரும், வெந்நீரும் இருக்க முடியுமா?

குளிரும், சூடும் எதிர் எதிர் குணங்கள்.

இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது.

அன்பு இருக்கும் இடத்தில் கனிவு, பரிவு, இரக்கம் ஆகிய பண்புகள் இருக்கும்.

அவை அன்பின் பிள்ளைகள்.

பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கோபம் வெறுப்பின் பிள்ளை.

அன்பு இருக்கும் இடத்தில் அதன் எதிர்க்குணமாகிய வெறுப்பு இருக்க முடியாது.

ஆகவே  அன்பு இருக்கும் இடத்தில்
வெறுப்பின் பிள்ளையாகிய கோபம் இருக்க முடியாது.

ஆகவே அன்பாகிய கடவுளிடம் கோபம் இருக்க முடியாது."

"ஆனால் கடவுள் கோபப்பட்டதற்கு ஆதாரம் பைபிளில் இருக்கிறதே. பைபிள் பொய் சொல்லுமா?"

" பைபிள் பொய் சொல்லாது. பைபிளைத் தவறாகப் புரிந்து  கொள்பவர்கள் பொய் சொல்வார்கள்.

பைபிள் இறை வாக்கு.
இறை வாக்குக்கு மனித மொழி கிடையாது.

மனித மொழி உலக சடப்பொருள் சார்ந்த பொருளைப் புரிந்து கொள்வதற்காக பயன்படுத்த  படுவது.

ஆன்மீகப் பொருளை உள்ளதை உள்ளபடியே விளக்க மனித மொழியால் முடியாது.

ஆனால் நாம் ஆன்மீகம் பேசுவதற்கும்  மனித மொழியைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

நமக்கு வேறு வழி இல்லை.

பைபிள் ஆன்மீகம் சார்ந்த இறைவாக்கு.

அது இறைவனுடைய வாக்காக இருந்தாலும் அதை நமக்கு எழுதித் தர கடவுள் மனிதனையே பயன்படுத்தினார்.

ஆன்மீகத்தை மனித மொழியால் விளக்கும்போது  அதை சடப்பொருள் சார்பாக புரிந்து கொள்ளாமல் ஆன்மிகம் சார்பாக புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் உருவம் இல்லாதவர்.

நாம் உருவம் உள்ளவர்கள்.

நம்மால் உருவம் இல்லாத கடவுளை அவர் உள்ள படியே நமது கற்பனையில் கூட பார்க்க முடியாது.

உருவம் உள்ள நாம் மனதில் உள்ள கருத்துக்களை வெளியே  பேசுவதற்கு வாயைப் பயன்படுத்துகிறோம்.

நமக்கு வேறு வழி இல்லை.

"கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார். "

நாம் வாயால்தான் உரைக்கிறோம்.

கடவுளுக்கு நம்மைப் போல் வாய் இல்லை, ஏனெனில் அவர் உருவம் அற்றவர்.

ஆகவே அவர் நம்மைப்போல் உரைக்க முடியாது.

ஆகவே கடவுள் உரைத்தார் என்று சொல்லும்போது, அவரை ஒரு வாயுள்ள ஆளாக கற்பனை செய்யக் கூடாது.

கடவுளால் நம்மை போல வாயைக் கொண்டு பேச முடியாது.

ஆனால் அவரால் விரும்ப முடியும். 
 மனதால் நினைக்க முடியும்.

"கடவுள்: ஒளி உண்டாகுக என்று நினைத்தார். ஒளி உண்டாயிற்று."

வசனத்தை இவ்வாறு தான் புரிந்துகொள்ள வேண்டும்.

" தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்."

என்று பைபிள் சொல்லுகிறது.

ஆனால் கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது.

கடவுள் நித்திய காலமாய் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

அவரால் இயங்காமல் இருக்க முடியாது.

ஒவ்வொரு வினாடியும் தன்னால் படைக்கப்பட்ட பொருள்களை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்.

அவர் ஒரு வினாடி கூட கண்காணிக்காமல் ஓய்வெடுத்தால் அவரது படைப்பு எல்லாம் ஒன்றும் இல்லாமைக்கு திரும்பிவிடும்.

உலகியல் ரீதியான ஒரு ஒப்புமை:

நமது உலகில் ஒரு வினாடி ஆக்சிஜன் இல்லாமல் போய்விட்டால் உலகம் என்ன ஆகும்?

ஆக்சிஜன் இல்லாமல் போய்விட்ட ஒரு வினாடியில் உலகம் முழுவதும் உள்ள கடல்களிலும், அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள தண்ணீர் இல்லாமல் போய்விடும்.

அதே விநாடியில் உயிர்ப் பிராணிகள் அத்தனையும், தாவரங்கள் உட்பட, இறந்து போய்விடும்.

ஆக்கிஜன் இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழ முடியாது.

படைப்பின் ஒவ்வொரு அணுவையும் அதைப் படைத்தவர்தான் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் இயங்காமல் ஓய்வெடுத்தால் ஒவ்வொரு அணுவும் இல்லாமல் போய்விடும்."

"அப்படியானால் 'ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்' என்பதன் விளக்கம்?"


",நாம் வாரத்தில் ஆறுநாட்களை நமது வேலைக்காக செலவழித்துவிட்டு 

ஏழாவது நாளை முழுக்க முழுக்க இறைவனுக்காக மட்டும் 
செலவழிக்க வேண்டும்.

ஏழாவது நாள் இறைவனுக்காக நாம் உலகு சார்ந்த வேலைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற இறைச் செய்தியை நமக்கு அறிவிக்கவே கடவுள் ஓய்வெடுத்தார் என்று பைபிள் கூறுகிறது."

"நீ நம்மை விட்டுவிடு, நமது கோபம் அவர்கள் மேல் மூண்டு அவர்களை அழித் தொழிக்கும்." ( யாத். 32:10)

கடவுளால் கோபப்பட முடியாது என்றால் மேற்கண்ட வசனத்திற்கு என்ன விளக்கம்?"

", இது போன்ற வசனங்களுக்கு  விளக்கம் கூறுமுன் முன்னுரையாக சில விஷயங்கள் கூற வேண்டும்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment