"இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்." (மத்.18:20)
"மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்:
மண்ணுலகில் உங்களில் இருவர் தாங்கள் கேட்கும் எதைக்குறித்தும் மனமொத்திருந்தால் அது விண்ணுலகிலுள்ள என் தந்தையால் அவர்களுக்கு அருளப்படும்.
20 இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."
(மத்.18:19,20)
இரண்டு வகையில் நாம் இறைவனோடு ஜெபத்தில் ஒன்றிக்கலாம்.
நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர் என்ற முறையில் இறைவனோடு தனிமையில் ஜெபிக்கலாம்.
ஜெபத்தின் கருத்து எதுவாக இருந்தாலும் அதை நாம் தனிப்பட்ட முறையில் இறைவன் முன் சமர்ப்பிக்கிறோம்.
" செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு,
மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய்.
மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்." (மத். 6:6)
தன்னைத் தானே விளம்பரப் படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக,
மற்றவர்கள் பார்க்கும்படி, (பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக)
ஜெபிப்பது தவறு.
நாம் ஜெபிக்கும்போது நமது இதயம் இறைவனின் இதயத்தோடு ஒன்றிக்க வேண்டும்.
இந்த ஒன்றிப்புக்கு தனி ஜெபம் உதவியாக இருக்கும்.
நாம் தனிப்பட்ட மனிதப்பிறவி மட்டுமல்ல சமூகப் பிராணியும் கூட.
இறைவனோடு ஜெபத்தில்
ஒன்றிப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒன்று கூடும் போது இறைவன் இயேசு அவர்களிடையே இருக்கிறார்.
இயேசுவை மையமாகக்கொண்டு கூடி செபிக்கும் சமூகம் கேட்கும் கருத்தில் மனமொத்திருந்தால்,
அவர்கள் கேட்பது விண்ணக தந்தையால் உறுதியாக அருளப்படும்.
அந்த உறுதிக்கு காரணம்:
1.மகனோடு சேர்ந்து தந்தையை நோக்கி ஜெபிக்கிறோம்.
மகனுக்காக அவரோடு சேர்ந்தவர்கள் அனைவருக்கும் கேட்டது கிடைக்கும்.
2.மகனோடு சேர்ந்து ஜெபிப்பதால் நமது ஜெபக் கருத்து மகனுக்கு ஏற்றதாகத்தான் இருக்கும்.
மகனுக்கு ஏற்றதை நாம் அவரோடு சேர்ந்து கேட்கும்போது நமக்கு கேட்பது கிடைப்பது உறுதி.
3.நாம் கேட்கும் கருத்தில நமது அனைவர் மனமும் ஒத்திருந்தால்
நிச்சயமாக அக்கருத்து பிறரன்பிற்கு ஒத்ததாகவே இருக்கும்.
பிறரன்பு இறையன்போடு இணைந்ததாகையால்
பிறரன்புக்கு ஏற்ற கருத்து இறைவனுக்கும் பிடிக்கும்.
இறைவனுக்கு ஏற்றதை உறுதியாகத் தருவார்.
சமூக வழிபாடுகள்:
1 குடும்ப செபம்.
2. செபக் கூட்டங்கள்.
3.திருப்பலி.
1 குடும்ப செபம்:
குடும்பம் ஒரு சிறிய சமூகம்.
Mini society.
சமூக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை உள்ளவர்கள்தான்.
ஆனால் ஏதாவது ஒரு அம்சத்தில் எல்லோரும் இணைந்திருப்பர்.
உதாரணத்திற்கு தமிழ் சமுகம் மொழியால் இணைந்திருக்கிறது.
கிறிஸ்தவ சமூகம் இறையன்பில் இணைந்திருக்கிறது.
குடும்பத்தில். குறைந்தபட்சம் இருவர் இருப்பர். அவர்களோடு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருப்பர்.
மனிதர்கள் என்ற முறையில் ஒவ்வொருவரும் தனித்தன்மை உள்ளவர்கள்தான். ஆனாலும் எல்லோரும் குடும்ப அன்பில் இணைந்திருப்பர்.
அன்பு தனித்தன்மைகளை எல்லாம் ஒன்றிணைத்து விடும்.
ஒரு குடும்பம் ஜெபிக்க அமரும்போது இயேசுவும் உடன் அமர்ந்து விடுவார்.
குடும்பம் சேர்ந்து செபிப்பதால் செபக் கருத்து குடும்ப ஒற்றுமைக்கும் இறையன்புக்கும் ஒத்ததாகத்தான் இருக்கும்.
தந்தையை நோக்கி செபிக்கும்போது இயேசுவும் நம்முடன் சேர்ந்து செபிப்பார்.
தந்தை நாம் கேட்பதைக் கட்டாயம் தருவார். ஏனெனில் நமது செபம் மகனின் சிபாரிசோடு சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது.
தினமும் குடும்ப செபம் சொல்வோம்.
2. செபக் கூட்டங்கள்:
இறைச் சமூத்தினரின் ஆன்ம நலன் கருதி நமது ஆன்மீக மேய்ப்பர்கள் செபக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
ஆன்மீக நலன் விரும்பும் இறை மக்களாகிய நாம் இவற்றில் கலந்து கொள்கிறோம்.
நம்மோடும் இயேசுவும் கலந்து கொள்கிறார்.
ஒவ்வொரு செபக் கூட்டமும் ஏதாவது ஒரு ஆன்மீக கருத்தை மையமாகக் கொண்டிருக்கும்.
அதை மையமாகக்கொண்டு நமது மேய்ப்பர்கள் இறைச்செய்தி தருவார்கள்.
நமது செபமும் அந்த கருத்தை மையமாகக் கொண்டதாகவே இருக்கும்.
செபக் கூட்டத்தில் கலந்து கொள்வோர் அனைவரும் அக்கருத்தோடு இணைந்து செபிக்க வேண்டும்.
இப்போதெல்லாம் அநேக ஜெப கூட்டங்களில் ஆன்மிக கருத்தைத் தொடர்ந்து குணமளிக்கும் செபங்கள் சொல்லப்படுகின்றன.
மக்கள் உடலுக்கு குணமளிக்கும் செபங்களில் கலந்து கொள்வதை விட அதிக முக்கியமானது ஆன்மீக குணமளிக்கும் பாவசங்கீர்த்தனத்தில் கலந்து கொள்வது.
செபக் கூட்டத்திற்குச் சென்று பாவசங்கீர்த்தனம் செய்யாமல் வருவது குற்றாலத்திற்குச் சென்று குளிக்காமல் வருவதற்குச் சமம்.
மக்கள் அதிகமதிகமாக செபக் கூட்டங்களில் கலந்து நிரம்ப ஆன்மீகப் பலன் அடைய வேண்டும்.
நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான் இயேசுவும் செபக் கூட்டத்தில் நம்மோடு கலந்து கொள்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3.திருப்பலி :
திருப்பலிதான் தாய்த் திருச்சபையின் அதிகாரப் பூர்வமான செபம். (Official prayer)
மற்ற செபங்களில் நாம் கூடும் இடத்திற்கு இயேசு வருகிறார். திருப்பலியில் இயேசு இருக்கும் இடத்தில் நாம் கூடுகிறோம்.
"இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."
என்று அவர் சொன்னது போலவே அவர் நம்முடன் இருக்கிறார்.
மற்ற செப கூட்டங்களில் ஏதாவது ஒரு ஆன்மீக கருத்தை மையமாக வைத்து செபிப்போம்.
கருத்துக்களில் கூட்டத்திற்கு கூட்டம் மாறுபடலாம்.
ஆனால் திருப்பலியில் ஆண்டு முழுவதும் நாம் செபிக்கும் மையக்கருத்து ஆண்டவரின் சிலுவை மரணம்.
ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் நமக்காக மரணமடைந்த இயேசுவை, நம்மையும் சேர்த்து,
நமக்காக
பரம தந்தைக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
திருப்பலியின் மையம் இயேசு.
நமது பங்கு என்ன?
இயேசு .
நமக்காக பிறந்தார்,
நமக்காக வாழ்ந்தார்,
நமக்காக பாடுபட்டார்,
நமக்காக மரித்தார்.
இயேசுவை பொறுத்தமட்டில் நாம்தான் அவருக்கு எல்லாம்.
நாம்
இயேசுவுக்காக வாழ வேண்டும்.
இயேசுவுக்காக சிலுவையை சுமக்க வேண்டும்.
இயேசுவுக்காக மரிக்க வேண்டும்.
நம்மைப் பொறுத்தமட்டில் நமக்கு இயேசுவே எல்லாம்.
இயேசு நமக்காக, நாம் இயேசுவுக்காக.
அப்படி பார்க்கும்போது திருப்பலியின் மையமாகிப இயேசுவோடு
இணைவதுதான் திருப்பலியில் நமது பங்கு.
நாம் பரம தந்தைக்கு இயேசுவோடு நம்மையும் இணைத்து பலியாக ஒப்புக் கொடுக்கிறோம்.
இயேசுவின் பெயரால் நாம் கேட்பதையெல்லாம் தந்தை தந்திடுவார்.
இயேசுவின் பெயரால் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்கும் போது நம்மை ஏற்றுக் கொள்வார்.
இயேசுவோடு நம்மை இணைத்து ஒப்புக்கொடுக்கும் போது உறுதியாக நம்மை ஏற்றுக் கொள்வார்.
பரம தந்தைக்கு நம்மைப் பலியாக ஒப்புக் கொடுப்பதற்காகத்தான்,
பலிப் பொருளாகிய இயேசுவோடு நம்மையும் சேர்த்து கொடுக்கிறோம்.
நாம் திருப்பலிக்குச் செல்வது பார்வையாளராக அல்ல.
நம்மையும் இயேசுவோடு சேர்த்து பலியாக ஒப்புக் கொடுப்பதற்காகவே திருப்பலிக்குச் செல்கிறோம்.
நம்மையும் இயேசுவோடு சேர்த்து பலியாக ஒப்புக் கொடுத்த பின் நாம் நமக்குச் சொந்தம் அல்ல.
கடவுளுக்கு மட்டுமே சொந்தம்.
இப்போது யாரோ சொல்வது காதில் விழுகிறது.
நாம் ஒப்புக் கொடுத்தாலும், ஒப்புக் கொடுக்கா விட்டாலும் கடவுளுக்குத்தானே சொந்தம்.
உண்மைதான். ஆனாலும் நாம் நம்மையே ஒப்புக்கொடுக்கும் போது
இறைவனை நமது எல்லாமாக ஏற்றுக் கொள்வதோடு நம்மை முழுவதும் இறைவனின் பணிக்காக அர்ப்பணிகின்றோம்.
நாம் ஒப்புக்கொடுக்கும் ஒவ்வொரு திருப்பலியும் நமது அர்ப்பண வாழ்வை நினைவு படுத்திக்கொண்டேயிருக்கும்.
தினமும் திருப்பலியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் அர்ப்பண வாழ்வில் நிலைத்து நிற்பார்கள்.
திருப்பலியில் பங்கெடுப்பது வெறுமனே கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து கொண்டு பீடத்தைப் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமல்ல.
திருப்பலி ஒப்புக் கொடுக்கும் குருவோடு நாமும் இணைந்து பலியை ஒப்புக் கொடுக்கவே.
திருப்பலி நமது வாழ்வாக மாற வேண்டும்.
திருப்பலியை வாழ்ந்தால்தான் நாம் இயேசுவோடு சேர்ந்து நம்மையும் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தது முழுமையாகும்.
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் பலி வாழ்வாக இருக்க வேண்டும்.
அதாவது நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
நமது ஒவ்வொரு செயலும் சிலுவையாக மாறினால்
நமது மரணமும் சிலுவை மரணமாகவே இருக்கும்.
வெள்ளிக் கிழமைக்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமை வருவது உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment