Wednesday, August 18, 2021

""வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு" (மத். 20:8)

""வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு" 
(மத். 20:8)


திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து கூலி பெற்ற வேலையாட்கள் பற்றிய
 உவமையில்,

ஆரம்பம் முதல் வேலை செய்தவர்களும்,

இடையில் வந்து வேலை செய்தவர்தவர்களும் சம கூலி பெறுகின்றனர்.

இதனால் காலை முதல் வேலை செய்தவர்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

 "அதிகமாக வேலை செய்தவர்களுக்கும் , குறைவாக வேலை செய்தவர்களுக்கும் ஒரே கூலியா" என்று முதலாளியிடம் கேட்கிறார்கள்.

ஆனால் அவரோ,

"அவரவருக்குப் பேசிய கூலியைத் தந்தாகிவிட்டது. வாங்கிக் கொண்டு போகலாம்.

மற்றவர் களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நான்."
என்றார்.
 
விசுவசித்து, ஞானஸ்நானம் பெற்று, தேவ கட்டளைகளை அனுசரிப்பவர்களுக்கு மீட்பு உண்டு, 

அதாவது, விண்ணரசு உண்டு.

எவ்வளவு காலம் அனுசரிப்பவர்களுக்கு என்று ஆண்டவர் சொல்லவில்லை.

 குழந்தையாய் இருக்கும்போது ஞானஸ்நானம் பெற்று, எண்பது ஆண்டுகள் விசுவாச வாழ்வு வாழ்ந்து மரிப்பவனுக்கு எந்த விண்ணகம் உண்டோ, 

அதே விண்ணகம்தான் ஞானஸ்நானம் பெற்றவுடன் மரிப்பவனுக்கும் உண்டு.

விண்ணகத்தைத் தீர்மானிப்பது .ஞானஸ்நானம் பெறும்போது நாம் இருக்கும் நிலை அல்ல. 

மரிக்கும்போது இருக்கும் நிலை.

நாம் வாழும்போது எப்படி வாழ்கிறோம் என்பதை விட,

 எப்படி மரிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒருவன் 60 ஆண்டுகள் பாவமே செய்யாமல் வாழ்ந்து மரிக்கிறான்.

இன்னொருவன் 60 ஆண்டுகளும் பாவ வாழ்க்கையே வாழ்ந்துவிட்டு உயிர் பிரியும் போது பாவங்களுக்கு மனஸ்தாபப் பட்டு மரிக்கிறான்.

இருவரும் விண்ணகத்திற்குத்தான் செல்வார்கள்.

60 ஆண்டுகள் பாவமே செய்யாமல் வாழ்ந்தவன் ஆண்டவரிடம் போய்,

"ஆண்டவரே நான் 60 ஆண்டுகள் உமக்குப் பிரியமாய் வாழ்ந்தேன்.

 ஆனால் இவன் ஒரே ஒரு வினாடி மட்டும் உனக்கு பிரியமாய் வாழ்ந்தான்.

   இருவருக்கும் ஒரே மோட்சமா?" என்று கேட்டால் ஆண்டவர் என்ன சொல்லுவார்?

"மகனே, உனக்கு கிடைத்ததற்காக சந்தோஷப்படு,

 அடுத்துவனுக்குக் கிடைத்ததற்காகவும் சந்தோஷப்படு"
என்றுதான் சொல்வார்.

தோட்ட வேலை காலையில் எட்டு மணிக்கு ஆரம்பித்து மாலையில் ஆறு மணிக்கு முடிவதாக வைத்துக்கொள்வோம். 

எட்டு மணிக்கு வேலைக்கு வந்த ஒருவன் மாலை 5.55க்கு வேலையை விட்டு போய்விட்டால்

 அவனுக்கு அன்றைக்கு பார்த்த வேலைக்கு கூலி கிடைக்காது.

 ஆனால் ஒருவன் மாலை 5.55 வேலைக்கு வந்து ஆறு மணி முடிய வேலை பார்த்தால் அவனுக்கு முழு கூலி கிடைக்கும்.

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்." (மத். 24:13)

ஒருவனது வாழ்க்கையில் முக்கியமான நேரம் பிறந்த நேரம் அல்ல.

பள்ளியில் சேர்ந்த நேரம் அல்ல.

'வேலையில் சேர்ந்த நேரம் அல்ல.

 திருமண நாள் அல்ல.

 குழந்தை பெற்ற நாள் அல்ல.

மரண நேரம்தான் வாழ்க்கையில் முக்கியமான நேரம்.

ஏனெனில் அதுதான் ஒருவனது நித்திய வாழ்வை தீர்மானிக்கிறது.

இயேசுவின் மடியில் தலையை வைத்து மரித்த புனித சூசையப்பர் தான் நல்ல மரணத்தின் பாதுகாவலர்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது அவரை நோக்கி செபிக்க வேண்டும்.


 "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லுங்கள்" 

தோட்டத்திற்கு உரிமையாளர் வேலை இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து கூறிய வார்த்தைகள் இவை.

கத்தோலிக்க திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தில் பணிபுரிபவர்கள் நாம்.

திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளராகிய இயேசு தோட்டத்தில் பணிபுரிய ஆட்களை சேர்க்கும் பணியையும் நமக்கு அளித்துள்ளார்.

பணி இல்லாமல் இருக்கும் ஆட்களைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வாக்கியம் ஞாபகத்துக்கு வரவேண்டும்.

"இதோ நான் அழைத்துவந்த உமது பணியாளர்கள்" என்று நாம் இயேசுவிடம் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

புனித கல்கத்தா தெரசம்மாள் சாலையோரங்களில் மரணித்துக்
கொண்டிருக்கும் தொழுநோயாளிகளைத் தனது கரங்களால் தூக்கி வந்து, அவர்களது புண்களுக்கு மருந்து போட்டு உபசரிப்பாள்.
 
எதற்காக?

அவர்கள் ஆண்டவரது திராட்சைத் தோட்டத்தில் கொஞ்ச நேரமாவது பணிபுரிந்து விண்ணரசில் நுழையாலாமே!

அன்னைத் தெரசா விண்ணரசுக்குள் நுழையும் போது அவளால் பணியமர்த்தப்பட்ட திராட்சை தோட்ட பணியாளர்கள் அவளை வரவேற்றிருப்பார்கள்!

நம்மையும் விண்ணரசில் வரவேற்க ஆள் சேர்க்கலாமே!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment