Tuesday, August 10, 2021

கடவுளால் செய்ய முடியாதவை.(தொடர்ச்சி)

கடவுளால் செய்ய முடியாதவை.
(தொடர்ச்சி)

"கடவுளால் மாறவே முடியாது என்று சொல்கிறீர்கள்.

நினிவே நகரத்தையே அழிப்பதாகச் சொல்லி பிறகு அழிக்காமல் விட்டுவிட்டாரே,

அப்போது அவர் மாறவில்லையா?

கடவுளால் மாற முடியாது என்று எதைவைத்து சொல்கிறீர்கள்?''

",இப்போது உன்னுடைய வயது என்ன?"

"80."

".79 ஆண்டுகளுக்கு முன்பு உன் வயது?"

"ஒன்று."

",.அதாவது வயதில் நீ மாறியிருக்கிறாய்."

"ஆமா."

",உன்னைப் போலவே உலகில் இருக்கிற அனைத்து பொருட்களும் வயது உள்ளவை.

ஒரு பொருளின் வயதை எதைவைத்து கணக்கிடுகிறோம்?"

"அது தோன்றிய அல்லது பிறந்த நாளிலிருந்து கணக்கிடுகிறோம்."

", அதாவது, துவக்கம் உள்ள எல்லா பொருட்களுக்கும் வயது உண்டு. சரியா?"

"சரி."

", துவக்கமே இல்லாத பொருட்களுக்கு?"

"உலகப் பொருட்கள் அனைத்திருக்கும் துவக்கம் உண்டு.

உலகப் பொருட்கள் அனைத்திருக்கும் வயது உண்டு."

",உலகைப் படைத்த கடவுளுக்கு?"

"கடவுளுக்கு வயது இல்லை. ஏனெனில் அவருக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவர் நித்தியர்."


", அதாவது,....."

"அளவுள்ள நமக்கு வயது உண்டு. அளவு இல்லாத கடவுளுக்கு வயது இல்லை."

",அளவுள்ள பொருள்கள் தங்கள் வயதில் மாறிக்கொண்டே இருக்கும்.

அளவு இல்லாத கடவுளுக்கு வயதும் இல்லை, மாற்றமும் இல்லை.

அளவுள்ள பொருள்கள் தங்கள் வயதில் மட்டுமல்ல, தங்கள் உருவம், பண்புகள் போன்ற அனைத்திலும் ஒவ்வொரு வினாடியும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

சிறு குழந்தை ஒவ்வொரு வினாடியும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வயதை அல்லது வளர்ச்சியை எட்டியவுடன் ஒவ்வொரு வினாடியும் தளர ஆரம்பிக்கிறது.

அதேபோன்றுதான் அதன் பண்புகளிலும் வளர்ச்சியோ தளர்ச்சியோ ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

கடவுள் தன்னுடைய எல்லா பண்புகளிலும் அளவற்ற வராய் இருப்பதால் அவர் எந்த பண்பிலும் வளரவோ தளரவோ முடியாது.

நம் மீது அவர் கொண்டுள்ள அன்பு எந்த நேரத்திலும் எள்ளளவும் குறையாது. 

உலகில் உள்ள அத்தனை பாவங்களையும் செய்து நாம் மிகப்பெரிய பாவியாக மாறினாலும் 

நம்மீது அவர்கொண்டுள்ள அன்பு கொஞ்சம்கூட குறையாது. 

நாம் அவர் மீது கொண்டுள்ள அன்புதான் நம்முடைய பக்தியின் அளவின் அடிப்படையில் கூடும் அல்லது குறையும்.

சாவான பாவ நிலையில் கடவுளுடைய அன்பை புறக்கணிப்போர் நரக நிலைக்கு,  

 அவர்களது சுதந்திரத்தை பயன்படுத்தி, 

அவர்களாகவே போவார்களேயொழிய, 
கடவுள் அனுப்பி அல்ல.

கடவுளால் மாறவே முடியாது.

பட்டப்பகலில் நாம் கண்ணை மூடிக்கொண்டு சூரியன் தன் ஒளியை இழந்து விட்டது என்று கூறக் கூடாது."

"அதெல்லாம் புரிகிறது. அவர் நம்மை பராமரிக்கும்போது மாற மாட்டார் என்பது புரியவில்லை.

நாம் மனம் திரும்பும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. 

பாவங்களுக்காக நாம் மனம் வருந்தாதவரை பாவங்கள் மன்னிக்கப்படாமல்தான் இருக்கின்றன.

அதாவது நாம் பாவங்களுக்காக மனஸ்தாபப் பட்டு பாவசங்கீர்த்தனம் செய்யும்போதுதான்  கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார்.

அப்படியானால் அதுவரை மன்னிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.

நாம் மனஸ்தாபப் படும்வரை 
மன்னிக்காதவர் மனஸ்தாபம் பட்டவுடன் மன்னிக்கிறார் என்றால் அவர் மாறிவிட்டார் என்று தானே அர்த்தம்.

அதாவது அதுவரை மன்னிக்காதவர் இப்போது மன்னித்து விட்டார் என்றால் அது மாற்றம்தானே."

",நாம் அளவு உள்ளவர்கள். ஆகவே நமது கண்ணோக்கும் புரிதலும் அளவு உள்ளது.

 இதே விசயத்தை இறைவன் நோக்கிலிருந்து பார்த்தால் உண்மை விளங்கும்.

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர்.

அவரது படைப்புப் பொருள்கள் தாங்கள் இருக்கும் வரை எப்படி எல்லாம் இயங்கும் என்று

 அவற்றை படைப்பதற்கு முன்னாலேயே 

அதாவது நித்திய காலத்திலிருந்தே கடவுளுக்கு தெரியும். 

கடவுள் நித்தியர். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நித்தியமானது.

நாம் அப்பப்போ நமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்கிறோம்.

நாம் பிறந்த உடனே என்ஜினியராக வேண்டும் என்ற முடிவு எடுப்பதில்லை.

வளர்ந்து, படித்து என்ஜினியராக முடிவு எடுத்தாலும், 

நமது முடிவை இடையில் மாற்ற விரும்பினால் மாற்றவும் செய்வோம்.

நாம் அப்பப்போ முடிவு எடுப்போம்,அப்பப்போ எடுத்த முடிவை மாற்றவும் செய்வோம்.

ஏனெனில் நமது அறிவும் ஞானமும் அளவுள்ளவை.

கடவுள் தனது அளவற்ற ஞானத்தின் அடிப்படையில் நித்திய காலமாக எடுத்த முடிவை மாற்றவே மாட்டார்.

மனிதனை ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் படைக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு நித்தியமானது.

அவனை முழுமையான சுதந்திரத்தோடு தன் சாயலில் படைக்க வேண்டும் என்று எடுத்த முடிவும் நித்தியமானது.

மனிதனுடைய பரிபூரண சுதந்திரத்தில் தான் குறுக்கிடக்கூடாது என்று அவர் எடுத்த முடிவும் நித்தியமானது.  

ஆகவேதான் நமது முதல் பெற்றோர் தங்களது பரிபூரண சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியபோது கடவுள் குறுக்கிடவில்லை.

ஆனாலும் அவர்கள் தங்களது பரிபூரண சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பது அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

ஆகவேதான் அவர்களை பாவத்திலிருந்து மீட்க மீட்பரை அனுப்புவதென்று நித்திய காலமாகவே திட்டமிட்டு விட்டார்.

உலகில் இறுதி நாள் வரை வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவான் என்று கடவுளுக்கு நித்திய காலமாகவே தெரியும்.

ஆகவேதான் அவருக்கு உதவுவதற்கு என்று சத்திய திருச்சபையை நிறுவுவதென்று அவர் நித்திய காலமாகவே திட்டமிட்டு விட்டார்.

கடவுளது நித்திய ஞானத்தின் அடிப்படையில் நீ கேட்ட கேள்விக்கு விடை காண வேண்டும், அதாவது கடவுளின் கண்நோக்கிலிருந்து.
(From God's point of view)

பாவம் என்பது என்ன?

நாம் கடவுளது கட்டளையை மீறி, அவரை விட்டு பிரிந்து விடுவது. கடவுள் பிரித்துவிட்டு அல்ல.

பாவ நிலை என்பது என்ன?

நாம் கடவுளுடைய உறவை விட்டு வாழ்வது. கடவுளுடைய உறவில் மாற்றமில்லை. அவர் எப்போதும் போல் நம்மிடம் அன்பாகவே இருக்கிறார்.

மனஸ்தாபம் என்றால் என்ன?

நாம் இறைவன் உறவை திரும்பவும் ஏற்றுக்கொள்வது. 

பிரிந்து வந்ததும் நாம்தான் ஏற்றுக்கொள்வதும் நாம்தான்.
கடவுளுடைய உறவில் மாற்றமில்லை.

பாவங்கள் மன்னிக்கப்படுதல் என்றால் என்ன?

நாம் இறைவனோடு உறவில் இணைந்து விட்ட நிலை. 

ஊதாரி மைந்தனின் தந்தையை போல கடவுள் ஒவ்வொரு விநாடியும் மாற்றமில்லாமல் நமக்காக கையை விரித்து காத்துக்கொண்டிருக்கிறார்.

 ஊதாரி மைந்தன் அவரது அன்பில் இணைந்து விட்டது போல நாமும் இணைந்து விடுகிறோம்.  

கடவுளுடைய உறவில் மாற்றமில்லை.

நாம் பாவம் செய்யும்போதும் சரி, மனஸ்தாபப்படும்போது சரி கடவுள் மாறுவதில்லை.

அவர் எப்போதும் மாறாத அதே அன்போடு நமக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

நாம் நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்படும்போது அவை மன்னிக்கப்படுவது கடவுளது நித்திய கால திட்டம்.

பிரிவதும் சேர்வதும் நாம்தாம்.

 அதாவது நாம்தான் மனம் மாறுகிறோம்.

நாம் எப்போது கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்வோம் என்பது கடவுளுக்கு நித்திய காலமாக தெரியும்.

எவ்வளவு காலம் பாவ நிலையில் இருப்போம் என்பதும் கடவுளுக்கு நித்திய காலமாக தெரியும்.

எப்போது அவரது உறவுக்கு திரும்புவோம் என்பதும் அவருக்கு நித்திய காலமாக தெரியும்.

அவரது உறவுக்கு திரும்பும்போது நம்மை ஏற்றுக்கொள்வது அவரது நித்திய திட்டம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் இறைவனுடைய அருள் மாற்றமின்றி செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

அதை ஏற்பதும், ஏற்காததும் நமது விருப்பம்.

நமது பாவங்களுக்கு மனஸ்தாப படும்போது நமக்கு இறைவன் அளிக்கும் பாவமன்னிப்பு நித்திய காலமாக அவர் எடுத்த முடிவு.

நித்திய காலமாக அவர் எடுத்த முடிவு நாம் மனஸ்தாப படும்போது நம்மில் செயல் புரியும்.

இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் தன்னைத்தானே பலியாக ஒப்புக் கொடுத்த வினாடியே

இறைமகனின் நித்திய கால முடிவின் படி,

 அனைத்துலக மக்களின் அனைத்து பாவங்களுக்கும் பரிகாரம் செய்யப்பட்டுவிட்டது.

நித்திய காலமாக இறைவன் எடுத்த திட்டத்தின்படி நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்யப்பட்டு விட்டாலும் 

அதை ஏற்றுக்கொண்டு இறைவனிடம் திரும்ப வேண்டியது நாம்தான்.

கடவுள் தனது நித்திய கால திட்டத்தின்படி தான் மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது அளவற்ற ஞானத்தின் அடிப்படையில் அவர் எடுத்த நித்திய கால திட்டங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

இறைவன் எந்தெந்த காலத்தில் என்னென்ன நடக்க வேண்டுமென்று நித்திய காலத்திலிருந்தே திட்டமிட்டிருக்கிறாரோ 

அந்தந்த காலத்தில் அதது நடக்கும்,

ஒருவன் வாழ்நாள் முழுவதும் பாவ நிலையிலேயே வாழ்ந்து விட்டு

 மரிக்க போகும் வினாடியில்

 பாவங்களுக்காக மனஸ்தாபப் பட்டால்,

(மரிக்க போகும் நேரத்தில் மனஸ்தாபப்படுவான் என்பது கடவுளுக்கு நித்திய காலமாகவே தெரியும்) 

 மனஸ்தாபத்திற்காக அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய பாவமன்னிப்பு நித்திய காலமாகவே இறைவனிடம் தயாராக இருக்கிறது.

திடீரென்று  பாவமன்னிப்பு முடிவு எடுக்கப் படவில்லை.

நித்திய கால முடிவு இறைவனின் நித்திய திட்டப்படி  செயலுக்கு வரவேண்டிய நேரத்தில் வருகிறது.

கடவுள் மாறவில்லை.

 உரியவர்களுக்கு விண்ணகத்திலும் இடம் நித்திய காலமாகவே காத்துக்கொண்டிருக்கிறது.

புரிகிறதா?"

"புரிகிறது.

நினிவே நகரத்தை......."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment