Wednesday, August 25, 2021

"கிண்ணத்தின் உட்புறத்தை முதலில் தூயதாக்கு: அப்பொழுது வெளிப்புறமும் தூயதாகும்."(மத்.23:26)

"கிண்ணத்தின் உட்புறத்தை முதலில் தூயதாக்கு: அப்பொழுது வெளிப்புறமும் தூயதாகும்."
(மத்.23:26)

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல

மனிதனுக்கு இரண்டு புறங்கள் உண்டு, உட்புறம், வெளிப்புறம்.

உட்புறம் கண்ணால் பார்க்க  முடியாத ஆன்மா.

வெளிப்புறம் கண்ணால் பார்க்கப் படக்கூடிய உடல்.

வெளிப்புறத்தின் தன்மையை உட்புறம் தீர்மானிக்க வேண்டும்.

மனிதருக்கு மட்டுமே உரிய சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றில்

சிந்தனை முழுக்க முழுக்க ஆன்மாவிற்கு சொந்தமானது.

சிந்தனை வாய் வழியே வெளியே வரும்போது சொல் உண்டாகிறது.

சிந்தனைக்கு உடல் உருவம் கொடுக்கும்போது அது செயலாக மாறுகிறது.

 ஒரு நேர்மையான மனிதனுடைய சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்று போல் இருக்கும்.

நேர்மையான மனிதன் (Honest person) சிந்தனையை மாற்றம் இன்றி சொல்வான்.

சொன்னதை மாற்றமின்றி செய்வான்.

(An honest person's thought, words and actions will tally with one another.)

உள்ளொன்று வைத்துக்கொண்டு புறமொன்று பேசுபவர்களும், செய்பவர்களும் வெளிவேடக்காரர்கள்.

மனதில் தவறான சிந்தனைகளை வைத்துக்கொண்டு நல்லவர் போல் பேசுபவர்களும், நல்லன செய்வதுபோல் நடிப்பவர்களும் வெளி வேடக்காரர்கள்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் வெளிவேடத்துக்குப் பேர்போனவர்கள்.

"பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதகுப்பி, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதி செலுத்துகிறீர்கள். 

ஆனால், திருச்சட்டத்தில் முக்கிய படிப்பினைகளான நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள்."
(மத்.23:23)

மனதில் நீதி, இரக்கம், விசுவாசம் இல்லாதவர்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாகக் கொடுத்து என்ன பயன்?

அழுக்கான மனதுடன் கொடுக்கும் 
காணிக்கை வெளிவேடமே!

பரிசுத்தமான இருதயத்தோடு கொடுக்கப்படும் காணிக்கையே இறைவனுக்கு ஏற்றது.

சுத்தமான மனதுடன் காணிக்கையை கொடுப்போம்.

 ஒரு பாத்திரத்தின் உட்புறத்தை சுத்தம் செய்யாமல் வெளிப்புறத்தை மட்டும்   சுத்தம் செய்தால் அதில் வைக்கப்படும் உணவு சாப்பிட ஆகுமா?

மனதில் எல்லா விதமான பாவ எண்ணங்களையும் வைத்துக்கொண்டு வெளிப்புறத்தில் நல்லவர் போல் தோன்றுவதால் ஆன்மாவிற்கு என்ன பயன்?

வெளி வேடக்காரர்கள்
வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். 

அவை வெளியே பார்வைக்கு அழகாக தோன்றும். உள்ளே எலும்புக்கூடுகள் மட்டுமே இருக்கும்!

. மனம் கள்ளத்தனத்தாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருந்தால்,

 வெளியே மனிதருக்கு நீதிமான்களாகத் தோன்றினால் என்ன பயன்?

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெறாமல்

 கோவிலுக்குப் போவதாலும், திருப்பலி காண்பதாலும்,

 திருவிருந்து  அருந்துவதாலும் என்ன பயன்?

லஞ்சம் வாங்குவது பாவம்.

 லஞ்சம் வாங்கி ஈட்டிய பணத்தில் ஒரு பங்கை  கோவிலில் காணிக்கையாகப் போட்டுவிட்டால் லஞ்சம் வாங்கிய பாவம் தீராது.

பாவத்திற்காக  மனஸ்தாபப்பட்டு பாவ சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற வேண்டும்.

லஞ்சமாக வாங்கிய பணத்தை யாரிடமிருந்து வாங்கினோமோ அவரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். காணிக்கையாக அல்ல.


திருப்பிக் கொடுக்காமல்  காணிக்கையாக போட்டால்

லஞ்சமாக வாங்கிய பணத்தை கடவுளுக்கு லஞ்சமாக கொடுப்பது போலிருக்கும்.


பரிசுத்தமான இதயத்தோடு திருப்பலி  ஒப்புக்கொடுத்து திருவிருந்து அருந்த வேண்டும்.

பரிசுத்தமான இதயத்தோடு பிறரன்பு செயல்கள் செய்ய வேண்டும்.

பாவத்தோடு செய்யும் எந்த செயலும் நற்செயல் ஆகாது.

உள்ளம் சாவான பாவ நிலையில் இருக்கும்போது ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தாலும் ஆத்மாவிற்கு ஒரு பயனும் இல்லை.

மீட்பு பெற வேண்டியது நமது ஆன்மாதான்.  

எந்த நேரமும் நமது ஆன்மாவிற்கு ஆண்டவரின் அழைப்பு வரலாம்.

மற்ற எந்த நேரத்தையும் விட நமது இறுதி நேரம் பாவம் அற்றதாக இருக்க வேண்டும்.

ஆகவே உள்ளத்தில் எப்போதும் பரிசுத்தமாக இருப்போம்.

உடல் சுத்தம் அல்ல ஆன்மாவின் சுத்தமே  நமக்கு விண்ணகத்தை ஈட்டித்தரும்.

ஆகவே நமது உட்புறத்தை எப்போதும் பரிசுத்தமாக காப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment