Sunday, August 1, 2021

" காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்." (மத். 14:30)

" காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்." (மத். 14:30) 

நமது ஆண்டவருக்கு அடிக்கடி நமது விசுவாசம் உறுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்பதில் ஒரு ஆர்வம்.

இது அவருக்காக அல்ல. ஏனெனில் நமது ஆதி முதல் அந்தம் வரை நாம் எப்படி செயல்படுவோம் என்று அவருக்கு துவக்கமே இல்லாத காலத்திலிருந்து தெரியும்.

நாம் நம்மையே தெரிந்து கொள்வதற்காக அவர் நம்மை பரிசோதித்து பார்ப்பார்.

இராயப்பரின் ஆசையைத் தூண்டுவதற்காகவே இயேசு 
 கடல்மீது நடந்து வந்தார்.

இராயப்பருக்கும் கடல் மீது நடக்க ஆசை வந்தது.

"ஆண்டவரே, நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும்" என்றார்.

 அவர், "வா" என்றார். 

இராயப்பரும் படகினின்று இறங்கிக் கடல்மீது நடந்து இயேசுவை நோக்கி வந்தார்.


ஆனால், காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப் போனவர்,

 "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்.

 ஆண்டவர் அழைத்தவுடன் கடல் மீது நடக்க ஆரம்பித்தவர் ஏன் மூழ்கப் போனார்?

பயம்.

ஆண்டவர்மீது முழுமையான விசுவாசம் அவருக்கு இருந்திருந்தால் அவர் 
பயந்திருக்கமாட்டார்.

இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, 

"குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?" என்றார்.

இராயப்பரது விசுவாசம் குறைவானது என்று அவருக்கு தெரியப்படுத்தவே இந்த பரிசோதனை.

அப்புறம் இருவரும் படகில் ஏறிக்கொண்டார்கள்.  காற்றும் ஓய்ந்தது.

ஆக காற்றை வரவழைத்ததும் இயேசுவே. 

அதை நிறுத்தியதும் இயேசுவே.

இயேசு புவியில் வாழ்ந்த காலத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சும், செய்த ஒவ்வொரு செயலும் அவர் காலத்தில் வாழ்ந்தவர்களுக்காக மட்டுமல்ல.

உலகம் முடியும் மட்டும் வாழப் போகிற அனைவருக்காகவும்தான். 

ஆகவே இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும்,
 செயலிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அவற்றைப் பற்றி நாம் பைபிளில் வாசிக்கும்போது வாசகத்தை இயேசுவின் அருளால் தியானிக்கும் போது நாம் கற்றுக்கொள்ள வேண்டியது புரியும்.

தியானித்தல் என்றால் வெறுமனே நினைத்துப் பார்ப்பது அல்ல.

நாம் வாசிக்கின்ற இறைவாக்கு நமக்கு தருகின்ற செய்தியை அறிந்துகொள்வதற்காக அதை மனரீதியாக தேடுவது தியானம்.

நாமாக தனியாக தேடினால் இறைவன் தரும் செய்தியைக் கண்டுபிடிக்க மாட்டோம்.

இறைவழியில் அருளின் உதவியால் தேட வேண்டும்.

ஆகவே தியானிக்க ஆரம்பிக்கும்போதே,

"இறைவா நான் வாசித்த உமது வாக்கின் மூலம் நீர் எனக்கு தெரியப்படுத்துவது என்ன?

உமது அருளின் உதவியால் நான் அதை கண்டுபிடிக்கச் செய்தருளும்."

"தீமை உன்னை வெல்ல விடாதே, நன்மையால் தீமையை வெல்க."
(உரோமை, 12:21)

என்ற இறைவாக்கைத் தியானிக்க எடுத்துக் கொள்வோமே.

புனித சின்னப்பர் நமக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற இயேசுவின் போதனையை தனது பொறுப்பில் உள்ள சபையாருக்கு தெரிவிக்கிறார்.

இவ்வாக்கை எழுதும்போது அவர் தன்னைப் பற்றியும் நினைத்துப் பார்த்திருப்பார்.

"கிறிஸ்தவத்தை அழித்தே தீருவேன் " என்று கங்கணம் கட்டி அலைந்து கொண்டிருந்த தன்னையே மன்னித்து,

அதையே பரப்புவதற்கு தன்னைத் தெரிவுசெய்த கிறிஸ்துவின் தன்னலமற்ற அன்பை நினைத்து பார்த்திருப்பார். 

அவர் முதலில் செய்த அழிப்பு வேலையை தங்களது கடமையாகக் கொண்டு இன்றும் அநேகர் நமது நாட்டிலும் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள் அவர்கள் கையில் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஆனாலும் கிறிஸ்துவின் போதனைப்படி

. தீமையை நன்மையால் வெல்ல வேண்டியது நமது கடமை.

இந்தக் கடமையை நாம் செய்தால் அவர்களிடமிருந்து ஒரு சின்னப்பர் புறப்பட்டு வரவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தக் கடமையை நாம் எப்படி செய்ய வேண்டும்?

அதற்கும் கிறிஸ்துவே வழிகாட்டியிருக்கிறார். 

அவர் நற்செய்தி போதனையை ஆரம்பித்த நாளிலிருந்தே அவரை அழித்து விடவேண்டும் என்ற நோக்கோடு அவர் பின்னாலேயே அலைந்தார்கள் பரிசேயர்களும், மறைநூல் வல்லுனர்களும்.

இறுதியில் அவரை கைதுசெய்து, பொய்க் குற்றம் சாட்டி, அவமானப்படுத்தி, சிலுவையில் அறைந்து கொன்றும் போட்டார்கள். 

ஆனால் ஆண்டவர் அவர்களுக்காக என்ன செய்தார்?

மரணம் அடையுமுன்,


, "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை." 
(லூக். 23:34)

என்று, தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

நாமும் கிறிஸ்தவர்கள் என்பதற்காக நம்மை துன்புறுத்துபவர்களை மன்னிக்கும்படியும், அவர்களை மனம் திருப்பும்படியும்  இறைவனிடம் வேண்டுவோம்.

இதுவே கிறிஸ்து நமக்கு காட்டிய வழி.

 தன்னைக் கொன்றவர்களை மன்னித்ததன் மூலம் இயேசு வென்றார்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

ஜனநாயக நாட்டில் வாழும் நாம் நமது உரிமைகளுக்காக போராடுவது தவறா?


இயேசு, "செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று சொல்லியிருக்கிறார்.

ஏனெனில் மண்ணில் இருக்கும் அரசும், விண்ணிலிருந்து கடவுளும் நம்மை பராமரித்து வருகிறார்கள்.

 கடவுள் நமக்கு செய்ய வேண்டியதை ஒழுங்காகச் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

அதேபோல அரசும் நமக்கு செய்ய வேண்டியவை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.


கடவுளிடம் நமக்கு வேண்டியதை ஜெபத்தின் மூலம் கேட்க நமக்கு அவர் முழு உரிமை தந்திருக்கிறார்.

"கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்." 

அதேபோல்தான் நாம் வரி செலுத்தும் அரசிடம் நமக்கு சட்டப்படி உரியதை கேட்க உரிமை இருக்கிறது.

விண்ணப்பிக்கும்போது கேட்டது கிடைக்காவிட்டால் அதற்காக போராடி பெறும் உரிமை நமக்கு இருக்கிறது.

ஆகவே போராடுவதில் தவறு எதுவுமில்லை.

கடவுளை பொறுத்தமட்டில் நாம் செபத்தின் மூலம் கேட்பதை கட்டாயம் தருவார்.

ஆனால் அரசைப் பொறுத்தமட்டில் நாம் போராடிக் கேட்பது  கிடைப்பதற்கு உத்தரவாதமில்லை.

மாறாக போராடுபவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இதற்கு சான்று.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தை நினைக்கும்பொழுது எனக்கு ஒரு குட்டிக் கதை ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு ஊரில் காலில் ஏதோ பிரச்சனை காரணமாக நடக்கமுடியாத ஆள் ஒருவர் இருந்தார்.

கையில் ஒரு ஊன்றுகோலை வைத்துக்கொண்டு, அதை ஊன்றிக்கொண்டு நொண்டி நொண்டி மெதுவாக நடப்பார்.

ஒரு நாள் அவர் சாலை வழியே நடந்து போக நேரிட்டது.

அப்போது பின்னால் வந்த ஒரு பைக் ஓட்டி அவரை தள்ளிவிட்டு போய்விட்டான்.

அவர் கீழே விழுந்தார். 

ஊன்றுகோல் உபயோகிக்க முடியாத அளவிற்கு ஒடிந்துவிட்டது.

அவர் விழும்போது  ஓரளவிற்கு நொண்டி நொண்டியாவது நடக்க உதவிய ஒருகால் Fracture ஆகிவிட்டது.

 "படுபாவி பயல், கண் தெரியாத குருட்டுப் பயல் மோதி, என் காலை  ஒடித்து விட்டான். நாசமாகப் போக."

என்று அழுதுகொண்டே எழ முடியாமல் உட்கார்ந்திருந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் அவரிடம்,

''ஏன் நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு புலம்பிக் கொண்டு இருக்கிறீர்கள்?'' 

என்று கேட்கும் போது

அவர்,

"படுபாவி பயல், கண் தெரியாத குருட்டுப் பயல் மோதி என் காலை  ஒடித்து விட்டான். நாசமாகப் போக."

என்று சொன்னார்.

",ஹலோ, பைக் மோதி கீழே விழுந்திருக்கலாம். ஆனால் அதற்காக இப்படி வேண்டாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி திட்டக்கூடாது."

என்று கூறி விட்டு, அவருக்கு ஒரு உதவியும் செய்யாமல், போய் விட்டார்கள்.

அடுத்து வந்தவர்களும் அவரை விசாரித்தார்கள்.

அவர்களிடமும் அதே வார்த்தைகளை சொல்லி அழுதார்.

   அந்த வார்த்தைகளைச் சொன்னதற்காக அவரைக் கடிந்து கொண்டார்களே தவிர ஒரு உதவியும் செய்யவில்லை.

அவரைச்சுற்றி ஒரு கூட்டமே நின்றது. எல்லோருமே "படுபாவி பயல், கண் தெரியாத குருட்டுப் பயல், மோதி என் காலை  ஒடித்து விட்டான். நாசமாகப் போக "
 
என்று சொன்னதற்காக அவரைக் கடிந்து கொண்டார்கள். அவரைக் கையைப் பிடித்து தூக்கி கூட விடவில்லை.

அவருக்கு தெரிந்த ஒருவர் வந்தார்.

அவரைப் பார்த்து ஒருவன் சொன்னான்:

"விழுந்து கிடப்பவர் உனக்குத் தெரிந்தவர்தானே!" 

அதற்கு அவன்,

".இருக்கலாம். ஆனால், அவர் அப்படி பேசுவதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை."

என்று கூறி விட்டு போய் விட்டார்.

வருகின்றவர்கள், போகின்றவர்கள் எல்லாம் அவரை  விசாரித்துவிட்டு,

"நீ அப்படி பேசக்கூடாது" என்று சொன்னார்களே தவிர யாரும் அவருக்கு உதவி செய்யவே இல்லை.

எழவும் முடியாமல், சாப்பிடவும் முடியாமல் இந்நாள்வரை பசி மயக்கத்தோடு அங்குதான் படுத்துக் கொண்டிருக்கிறார்.
 
 ஒருவராவது அவருக்கு உதவி செய்ய தயாராக இல்லை.

பசி மயக்கத்தில் அங்கே படுத்திருப்பவருக்கு  என்ன ஆகுமோ தெரியவில்லை. 

 தங்கள் இனத்தவரின் உரிமைக்காக போராடுபவர்களுக்காக எழுதப்பட்ட கதை.

போராடித் தோற்பதை விட நமது உரிமைகளை நசுக்குபவர்களை மன்னித்துவிட்டு,  

இறைவன் கையில் பாரத்தைப் போட்டுவிட்டு நிம்மதியாக வாழ்வது எவ்வளவோ மேல்.

''விண்ணகத் தந்தையே, எங்களுக்கு விரோதமாக செய்யப்பட்ட  மற்றவர்களது குற்றங்களை நாங்கள் பொறுப்பது போல எங்களது பாவங்களை நீர் பொறுத்தருளும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment