Friday, July 30, 2021

"இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?"(மத்.13:54).

"இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?"
(மத்.13:54).

இயேசு தம் சொந்த ஊருக்கு, அதாவது நசரேத்துக்கு,

 வந்து அவர்களது செபக்கூடத்தில் போதித்தபோது,

அவரது ஞானத்தையும், அவர் செய்த புதுமைகளையும் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

அவருடைய ஞானமும், புதுமைகள் செய்யும் வல்லமையும்
 அவருக்கு எங்கிருந்து வந்தன என்பது புரியாமல் ஆச்சரியப்பட்டார்கள்.

 இயேசு பொது வாழ்வுக்கு வருவதற்கு முன்,

 முப்பதாவது வயது வரை அவர்களுடன் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்.

அன்னை மரியாளின் தங்கை மரியாளுடைய, (அன்னம்மாளின் இரண்டாவது மகள்)

அதாவது இயேசுவின் சித்தி  மக்களாகிய,

 யாகப்பன், சூசை, சீமோன், யூதா ஆகியோரையும் அங்குள்ள மக்களுக்கு நன்கு தெரியும்.

இவர்களில் மூவர் இயேசுவின் அப்போஸ்தலர்கள்.

இயேசு 30ஆவது வயது வரை தச்சுத்தொழில் செய்து வந்ததால் அங்குள்ள மக்கள் அவரோடு 
பழகியிருப்பார்கள், அவரை நன்கு தெரிந்திருக்கும்.

அவரது நற்குணங்களையும் அறிந்திருப்பார்கள்.

சூசையின் மகனாகத்தான் அவரை பார்த்திருப்பார்கள்.

அவர் இறைமகன் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது.

தங்களோடு ஒருவராகத்தான் அவரை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தம் சொந்த ஊரில்  இறைவாக்கினருக்கு மதிப்பு இருப்பதில்லை.

ஆகவேதான் 

இறை மகனிடம் இருக்கவேண்டிய விசுவாசம் அவர்களுக்கு இல்லை.

"நம்முடன் இந்நாள்வரை வாழ்ந்துவந்த சூசையின் மகனுக்கு இவ்வளவு ஞானம் எங்கிருந்து வந்தது " என்று ஆச்சரியப்பட்டார்கள்.

அவர்களது விசுவாசமின்மை காரணமாக இயேசு அவர்களிடம் அதிகமான புதுமைகள் செய்யவில்லை.

இந்த மக்களிடமிருந்து நாம் ஒரு ஆன்மீகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்கு இயேசு இறைமகன் என்ற உண்மை தெரியும், நமது விசுவாசத்தின் மூலமாக,

அதுமட்டுமல்ல இறைவன் எங்கும் இருக்கிறார் என்ற உண்மையும் நமக்குத் தெரியும்.

எல்லோரையும் 

(நல்லவர்களையும், தீயவர்களையும், அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களையும் அவரை விசுவாசியாதவர்களையும்)

அவர் நேசிக்கிறார் என்ற உண்மையும் நமக்குத் தெரியும்.

அவர் எல்லோரிடமும் இருக்கிறார் என்ற உண்மையும் நமக்குத் தெரியும்.

நல்லவர்கள் தங்களை  நேசிக்கும் இறைவனை தாங்களும்  நேசிக்கிறார்கள்.

கெட்டவர்கள் தங்களை நேசிக்கும் இறைவனை நேசிக்கவில்லை.

தன்னை நேசித்தாலும் நேசிக்காவிட்டாலும் இறைவன் அவர்களிடம் இருக்கிறார், அவர்களை நேசிக்கிறார்.

தன்னை நேசிக்காதவர்களையும் படைத்தவரும் பராமரிப்பவரும் அவரே.

இறைவன் எல்லோரிடமும் இருப்பதால்தான் நாம் எல்லோரையும் நேசிக்க  வேண்டியிருக்கிறது.

அவர்களை மனிதர்கள் என்பதற்காக அல்ல,

 இறைவனது பிள்ளைகள்,

 அவரால் பராமரிக்கப்படுகிறவர்கள்  என்பதற்காக,

 நாம் நம்மை நேசிப்பது போலவே அவர்களை நேசிக்க வேண்டும்.

இந்த விசுவாசம் நம்மிடம் இருந்தால் நாம் நமது அயலானைப் பார்க்கும்போது அவனுள் வசிக்கும் இறைவனையும் பார்ப்போம்.

இறைவன் வசிக்கும் அவனை நேசிக்காவிட்டால்  அவனுள் வாழும் இறைவனையும் நாம் நேசிக்கவில்லை.

அவனை நேசித்தால்தான் 
அவனுள் வாழும் இறைவனையும் நேசிக்கிறோம்.

நமக்கு மிகவும் வேண்டிய ஒருவர் ஒரு காரில் பயணிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தக் கார் பத்திரமாக செல்ல வேண்டும் என்று ஆசிப்போம்.

எதற்காக?

அதற்குள் அமர்ந்திருக்கும் நமது நண்பருக்காக.

அதேபோல்தான் நமது அயலானுள் வாழும் இறைவனுக்காக நாம் அவனை நேசிக்க வேண்டும். 

அனேக சமயங்களில் நாம் நமது அயலானில் காணப்படும் குற்றம் குறைகளுக்காக அவனை நேசிக்க மறுக்கிறோம்.

ஆனால் ஆன்மீகத்தில் நாம் 
அவனிடம் வாழும் இறைவனைப் பார்க்க வேண்டுமே தவிர அவனது குற்றங்களை அல்ல.

நண்பர் ஒருவர் ரூபாய்  பத்தாயிரத்திற்கான ரூபாய் நோட்டுகளை ஒரு அழுக்கான மணி பர்சில் வைத்து நம்மிடம்  தருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

நாம் உள்ளே ரூபாய் நோட்டுக்கள் இருப்பதால் மணி பர்ஸ் அழுக்காக இருந்தாலும் வாங்கிக் கொள்வோமா,

 அல்லது மணி பர்ஸ் அழுக்காக உள்ளது என்பதற்காக பணத்தையும் வேண்டாம் என்போமா? 

இறைவன் பாவிகளுக்குள்ளும் வாழ்கிறார் என்பதற்காக அவரை நேசிக்காமலிருக்க முடியுமா?

அன்று இயேசு சிறுவயது முதல் தங்களோடு வாழ்ந்ததால் 

அவரது ஊரினர் அவரைத் தங்களைப் போல் ஒரு சாதாரண மனிதராக மட்டும் ஏற்றுக் கொண்டார்களே தவிர இறைமகனாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே இயேசு அவர்களிடையே அதிகமான புதுமைகள் செய்யவில்லை.

"அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." (மத் 13:58)

இன்று நாமும் நாசரேத் ஊர் மக்களைப் போல்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.

 நம்மோடு வாழும் மக்கள் நம்மைப் போலவே வாழ்ந்து கொண்டிருப்பதால் அவர்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவனை நாம் காணத் தவறுகிறோம்.

நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவனை நாம் காண தவறுவதே மற்றவர்களுள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரைக் காணத் தவறுவதற்கு காரணமாக இருக்கலாம்.

நற்செய்தியை வாசித்த பிறகாவது நம்மை நாமே திருத்திக் கொள்வோம்.

நமது அயலானைப் பார்க்கும்போது அவனுள் வாழும் இறைவனையும் பார்ப்போம்.

நமது அயலானை நேசிக்கும் போது அவனுள் வாழும் இறைவனையும் நேசிக்கிறோம் என்பதை உணர்வோம்.

நமது அயலானுக்கு சேவை செய்யும் போது நாம் இறைவனுக்கு சேவை செய்கிறோம் என்பதை உணர்வோம்.

நமது அயலானின் மனதை நோகச் செய்யும் போது நாம் இறைவனின் மனதைத்தான் நோகச் செய்கிறோம் என்பதையும் உணர்வோம். 

இறைவன் இல்லை என்று சொல்பவர்களையும் இறைவன்தான் படைத்து பராமரித்து வருகிறார்.
'
அவர்களை  தான் நேசிப்பது போலவே நாமும் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இறைவனது சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரைப்போலவே எல்லோரையும் நேசிப்போம்.

அவர்களுக்கும் நம்மால்  இயன்ற உதவி செய்வோம்.

நமது அயலானைப் பார்க்கும்போது அவனுள் வாழும் இறைவனை பார்ப்போம்.

அவருக்காக அவனையும் நேசிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment