"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்." (மத்.12:34)
சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.
சட்டியில் சோறு இருந்தால் அகப்பையில் சோறுதான் வரும்
சட்டியில் கறி இருந்தால் அகப்பையில் கறிதான் வரும்.
சட்டியில் எதுவுமே இல்லாவிட்டால் எதுவும் வராது.
தேர்வு எழுதுவது கைதான். உள்ளத்தில் உள்ளதைத்தான் கை எழுதும்,
பேசுவது வாய்தான். உள்ளத்தில் உள்ளதைத்தான் வாய் பேசும்.
புத்தி சிந்திக்கிறது. உள்ளம் சிந்தனைகளை சேர்த்து வைக்கிறது. உள்ளத்தில் உள்ளதைத்தான் வாய் பேசுகிறது, மெய் செய்கிறது.
உள்ளத்தில் உள்ளது உண்மை.
உள்ளத்தில் உள்ளதை அப்படியே வாய் பேசினால் அது வாய்மை.
சிந்தனைகள்தான் சொற்களாகவும் செயல்களாகவும் உருப்பெறுகின்றன.
ஒருவனது வாழ்க்கையின் தன்மையை தீர்மானிப்பது அவனது சிந்தனைகளே.
சிந்தனைகள் தூய்மையானவையாய் இருந்தால் வாழ்க்கை குற்றமற்றதாய் இருக்கும்.
சிந்தனைகள் மோசமானவையாய் இருந்தால் வாழ்க்கையும் மோசமானதாக இருக்கும்.
பரிசுத்தமான வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் நமது உள்ளத்தில் சிந்தனைகள் பரிசுத்தமானவையாய் இருக்க வேண்டும்.
நமது சிந்தனைகளின் தன்மையை தீர்மானிப்பது நமது புத்தியும், சூழ்நிலையும்.
புத்திதான் சிந்தனைகளின் பிறப்பிடம்.
நாம் வாழும் சூழ்நிலையும் நமது சிந்தனைகளை பாதிக்கின்றன.
சூழ்நிலையிலிருந்து நமது ஐம்பொறிகளின் வழியாக செய்திகள் நமது உள்ளத்திற்கு செல்கின்றன.
மனிதன் ஒரு சமூக பிராணியாகையால் அவன் வாழும் சமூகமும் அவனது சிந்தனைகளை பாதிக்கின்றது.
சூழ்நிலையும், சமூகமும் அவனது ஐம்பொறிகளின் வழியாக அவனை பாதிக்க மட்டுமே செய்யும்.
ஆனால் சிந்திக்க வேண்டியது முழுக்க முழுக்க அவனது சொந்த வேலை.
வெளியிலிருந்து வரும் பாதிப்புகளை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவனது சொந்த விருப்பம்.
உதாரணத்திற்கு,
நாம் நமது வீட்டிலிருந்து புறப்பட்டு கோவிலுக்குப் போய்க் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்.
வழியில் ஒரு கழைக்கூத்தாடி வித்தைகள் போட்டுக் கொண்டிருக்கிறான்.
அவன் போட்டுக்கொண்டிருக்கும் வித்தைகள் நமது கண்கள் வழியாக நமது கவனத்தை ஈர்க்கின்றன.
ஈர்ப்பை (Attraction) ஏற்று வித்தைகளை பார்ப்பதற்காக கோவிலுக்கு செல்லாமல் அங்கேயே நின்று விடுவதும்,
ஈர்ப்பை நிராகரித்து அங்கு நிற்காமல் கோவிலுக்குச் செல்வதும் நமது விருப்பம்.
ஆனாலும், இதைப்போன்ற ஈர்ப்புகள் நமது ஐம்பொறிகளின் வழியாகக் நமக்குள் செல்லும்போது,
ஏற்கனவே நம்முடைய முதல் பெற்றோர்களின் பாவத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் நமது மனித சுபாவம்
விலக்கப்பட்ட கனிகளைத் தின்ன,
அதாவது பாவத்துக்கு ஏதுவான
ஈர்ப்புகளை ஏற்றுக்கொள்ள சோதிக்கும்.
சாத்தானின் இந்த சோதனைகளை நாம் ஏற்றுக்கொள்ளாமல் நமது சிந்தனைகளை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
அதற்காக பாவ சூழ்நிலைகளை தவிர்ப்பதும் நமது கடமை.
நாம் வாழும் இன்றைய உலகம் நமது சிந்தனைகளை பாதிக்கக்கூடிய ஈர்ப்புகளை நாம் திரும்பும் இடமெல்லாம் நமது ஐம்பொறிகளின் முன்னால் வைக்கின்றது.
அன்று நமது முதல் பெற்றோரைச் சோதித்த அதே சாத்தானுக்கு நம்மை சோதிப்பதும் முழுநேர வேலை.
இன்று உலகம் மிகுதியாக பயன்படுத்தும் Social mediaவைத்தான் சாத்தானும் அதிகம் பயன்படுத்துகிறான்.
Social mediaவிற்குள் நுழைபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
திரும்புகிற இடமெல்லாம் சாத்தான் வலையோடு காத்துக் கொண்டிருப்பான்.
அசந்தவர்களை அள்ளிக்கொண்டு போய் விடுவான்.
நற்செய்தி அறிவித்ததற்கு நாமும் Social mediaவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அதற்காக நாம் அதற்குள் நுழைந்தாலும் நமது ஐம்பொறிகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களின் எண்ணங்களைக் கெடுத்துக் கொண்டிருப்பது Social media தான் என்று உலகமே சொல்கிறது.
நற்செய்தியை அறிவதற்கும், சிந்தனைகளை இறைவனை நோக்கி திருப்புவதற்கும் எத்தனையோ வழிகள் திறந்திருக்கின்றன.
பைபிளை வாசித்துத் தியானித்தல்,
புனிதர்களின் வரலாற்றை வாசித்தல்,
கிறிஸ்துநாதர் அனுசாரம் போன்ற தியான நூல்களை வாசித்தல்,
அடிக்கடி திருப்பலியில் குருவானவரின் பிரசங்கங்களைக் கேட்டல்,
தியானங்களில் (Retreats) கலந்து கொள்ளுதல்,
ஜெப கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்
போன்றவற்றாலும் நமது உள்ளத்தையும் சிந்தனைகளையும் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.
சிந்தனைகள் பரிசுத்தமாக இருந்தால்தான் நமது பேச்சும், செயலும் பரிசுத்தமாக இருக்கும்.
நமது எண்ணங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்வதோடு அவற்றை நமது நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதும் நல்லது.
இது மற்றவர்களும் தங்கள் எண்ணங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
நல்லதையே நினைப்போம்.
நல்லதையே பேசுவோம்.
நல்லதையே செய்வோம்.
லூர்து செல்வம்
.
No comments:
Post a Comment