Thursday, July 29, 2021

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." (மத்.12:43)(தொடர்ச்சி)

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." (மத்.12:43)
(தொடர்ச்சி)


தொடருமுன் ஒரு முக்கியமான உண்மையை நம் மனதில் பதிய வைக்க வேண்டும்.

அப்போதுதான் தொடர்ச்சி புரியும்.

சர்வ வல்லமையுள்ள கடவுளால் செய்யமுடியாத சில காரியங்களும் இருக்கின்றன. 

கடவுளால் பாவம் செய்ய முடியாது.
(It is impossible for God to sin.)

ஒரு சிறு தவறு கூட செய்ய முடியாது.

கடவுளால் தனது படைப்புகளை வெறுக்க முடியாது. ஏனெனில் அவர் அன்பே உருவானவர். நாம் பாவம் செய்யும்போது கூட கடவுள் நம்மை வெறுப்பதில்லை. பாவிகளையும் அன்பு செய்கிறார்.
சாத்தானை கூட அவர் வெறுப்பதில்லை.

கடவுள்  அன்பின் நிமித்தமே நம்மை படைத்தார். அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு எந்த சூழ்நிலையிலும் மாறாது. அவரை வேண்டாம் என்று  விண்ணகத்திற்குச் செல்லாதவர்களைக் கூட அவர் தொடர்ந்து நேசிக்கிறார்.

(It may be hard to accept, but God does not hate Satan. God does not hate even the worst of sinners.)


அவரது திட்டங்கள் அளவற்ற ஞானத்துடன் தீட்டப்பட்டவை. ஆகவே அவரால் மாறவும் முடியாது அவரது திட்டங்களை மாற்றவும் முடியாது.
(The decrees of God cannot be reversed.)

இந்த முக்கியமான உண்மைகளை  முதலில் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது.

இந்த உண்மையின் அடிப்படையில்தான் கடவுளின் பராமரிப்பை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

இந்த உண்மையை புரிந்து கொள்ளாததால்தான் கடவுளின் பராமரிப்பை பற்றி தேவையற்ற கேள்விகள் கேட்கிறோம். 

உண்மை புரியாமல் நாம் கேட்கும் சில கேள்விகள்:

மனிதன் பாவம் செய்வான் என்பது கடவுளுக்குத் தெரியுமே, தெரிந்தும் ஏன் அவனை படைத்தார்?

அவரால் நேசிக்கப்படுகிற மனிதர்களுக்கு மரணம் நேரிடும் என்று தெரிந்தும் ஏன் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை நிகழ்வுகளை அனுமதிக்கிறார்?

யூதாஸ் தன்னை காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்தும் அவனை ஏன் சீடனாகத் தேர்ந்தெடுத்தார்?

ஆயர்களும், குருக்களும், விசுவாசிகளும் இணைந்து எவ்வளவு மன்றாடியும் ஏன் இன்னும் கொரோனாவை உலகில் விட்டு வைத்திருக்கிறார்?

இதுபோன்ற வினாக்களுக்கு நம்மால் பதில் கூற இயலாது.

கடவுளால் தவறு செய்ய முடியாது என்ற விசுவாசம்தான் அவர் அனுமதிப்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

நமது பெற்றோர் மீது நாம் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைதானே 

அவர்கள் நமக்காக என்ன செய்தாலும் நமது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று ஏற்றுக் கொள்ள வைக்கிறது!


நமது அறியாமை காரணமாக நாம் எழுப்பும் எல்லா வினாக்களுக்கும் நாம் விண்ணகம் சென்றபின்  நமக்கு விடை கிடைக்கும்.

அதுவரை பொறுத்திருப்போமே!

நோயிலிருந்து குணம் பெறுவதற்காக ஒரு மருத்துவரின் கையில் நம்மை ஒப்படைத்தபின் அவர் நம்மை என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். ஏன்?

அவர் மருத்துவத்தில் தவறு செய்ய மாட்டார் என்ற 
நம்பிக்கையில்தானே!

கடவுள் உலகையே பராமரிக்கும் போது அவரது சில செயல்கள் நமக்குப் புரிவதில்லை.

அவை எத்தகைய செயல்களாக இருந்தாலும் 

அவர் தவறு செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை நம் மனதில் ஆழமாக பதிந்திருந்தால் 

அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

அவர் நம்மை இவ்வுலகில் படைத்து வைத்திருப்பதே மறுஉலக பேரின்ப வாழ்வுக்கு நம்மையே தயாரிப்பதற்காகத்தான்.

தயாரிப்பின்போது நம்மை அவர் என்ன செய்தாலும் அது நமது விண்ணுலக நோக்கத்திற்காகவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் நமக்கு மரணத்தையே வரவழைத்தாலும் அதை நன்றியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அதுதான் விண்ணகத்திற்கான வாசல்.

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர் என்று  விசுவசிப்பவர்களுக்கு

அவருடைய பராமரிப்பின்மேல் சந்தேகம் வராது.

அவரைப்பார்த்து "ஏன்?"   என்று வினவ மாட்டார்கள்.

என்ன நேர்ந்தாலும்

 " ஏற்றுக்கொள்கிறேன், ஆண்டவரே,"   

என்று தான் சொல்வார்கள்.

நமது சந்தேகங்களுக்கு ஒரே மருந்து விசுவாசம் மட்டும்தான்.

விசுவசிப்போம்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment