"சீடர்களை நோக்கி, "அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்"
(மத் 9:37, 38)
இயேசு மக்கட்கூட்டத்தைக் கண்டு, அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்தமையால், அவர்கள்மேல் மனமிரங்கினார்.
37 அப்பொழுது அவர் தம் சீடர்களை நோக்கி, "அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.
38 ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்றார்.
இயேசு பார்த்த மக்கள் யூதர்கள்,
அவர்களின் ஆன்மீக நலனை கவனிக்கவேண்டிய யூதமத குருக்கள் அவர்களின் ஆன்மீக நலனில் வேண்டிய அக்கரை காட்டாததால்
அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்தார்கள். ஆகையால், இயேசு அவர்கள்மேல் மனமிரங்கினார்.
இந்த வசனங்களை வாசித்தவுடன் என் மனதில் எழுந்த ஒரு கேள்வி,
ஆண்டவர் ஏன் "ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்றார் என்பதுதான்.
அந்தக் கேள்விக்கு விடைகாண செய்யும் முயற்சிதான் வசனங்களை பற்றிய தியானம்.
இயேசுவின் முன்னால் நின்று கொண்டிருந்தவர்கள் யூத பெருமக்கள்.
ஆண்டவர் பேசிக்கொண்டிருந்ததோ தனது சீடர்களிடம்.
அறுவடையின் ஆண்டவர் கடவுள்தானே. இயேசு யார்? இறை மகனாகிய கடவுள்.
அப்படியானால் அவர் தானே அறுவடையின் ஆண்டவர்?
சீடர்களை சீடத்துவ பணிக்கு அழைத்தவர் அவர்தானே!
அவர்களை அழைத்ததுபோல அவருக்கு இஷ்டமான பலரை அழைத்திருக்கலாமே?
ஏன் தான் அழைத்தவர்களையே நோக்கி,
"வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்று சொல்கிறார்?
Suppose, இராயப்பர் அவரை நோக்கி,
"ஆண்டவரே நாங்கள் மன்றாடியதால் எங்களை நீர் அழைக்கவில்லை,
நீராகவே இஷ்டப்பட்டு எங்களை அழைத்தீர், நாங்களும் வந்தோம்.
அதேபோல இன்னும் இஷ்ட மானவர்களை அழைக்க வேண்டியதுதானே, ஏன் எங்களிடம் உம்மை நோக்கி மன்றாடச் சொல்கிறீர்?"
என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம்.
ஆண்டவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
"அட மக்கு! உன்னை மட்டுமல்ல, இந்த உலகத்தையே யார் மன்றாடியதற்காகவும் நான் படைக்கவில்லை.
நானாகவேதான் படைத்தேன்.
பாவம் செய்த யாரும் என்னை மனிதனாக பிறந்து, அவர்களது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய என்னை அழைக்கவில்லை.
தானாகவேதான் பிறந்தேன்.
யாரும் என்னை பாடுபட்டு மரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை.
நானாகவேதான் உங்களுக்காக பாடுபட்டு மரிக்கப்போகிறேன்.
எதற்காக இத்தனையையும் நானாகவே செய்தேன்?
நான் அன்பு மயமானவன்.
அன்பு எனது இயல்பு.
எனது அன்பின் காரணமாகவே மனிதனையும், அவன் வாழ்வதற்கான உலகையும் படைத்தேன்.
அன்பின் இயல்பை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.
அன்பு அன்பு செய்வதைப் போலவே அன்பு செய்யப்படவும் ஆசிக்கும்.
அந்த ஆசையில்தான் அன்பு செய்யப்படுவதற்காக மனிதனைப் படைத்தேன்.
என்னால் படைக்கப்பட்ட மனிதன் என்னை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மனிதன் என் மேல் உள்ள அன்பை சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்த வேண்டும்.
மனிதன் என்னை நினைக்க வேண்டும்,
என்னோடு பேச வேண்டும்,
என் பேச்சை கேட்க வேண்டும்,
அதன்படி நடக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
மனிதன் என்னை நோக்கி மன்றாட வேண்டும் என்று நான் ஆசைப்படுவது அவன் என்னோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான்.
பிள்ளை கேளாமலேயே அதற்கு உணவூட்ட தாய்க்குத் தெரியும்.
ஆனாலும் பிள்ளை தாயிடம் வந்து
"பசிக்கிறது அம்மா, உங்களது கைகளால் உணவூட்டுங்கள்" என்று கேட்டால் அவள் மிகவும் மகிழ்ச்சி அடைவாள்.
நீயும் பிள்ளையைப் பெற்றவன்தானே.
உனது பிள்ளை உன்னோடு பேசும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை அனுபவித்தவன்தானே.
நான் சொல்வதன் பொருள் உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்."
" புரிகிறது ஆண்டவரே. ஆனாலும் ஏதோ ஒன்று புரியவில்லை, அது என்னவென்று தெரியவில்லை."
"நாங்கள் பன்னிரண்டு பேர்தானே , நீங்கள் படைத்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள் உள்ளார்களே, எங்களிடம் மட்டும் ஏன் இதை சொல்கிறீர்" என்பது புரியவில்லை. அப்படித்தானே?"
"கரெக்ட். ஆண்டவரே உமக்குதான் எல்லாம் தெரியுமே.
இப்போது புரிந்துவிட்டது. நீர் 12 பேரை தேர்ந்தெடுத்தது உலகமெங்கும் சென்று உம்மை அறிவிக்கத்தானே.
எங்கள் மூலமாக இந்த செய்தியும் உலகோர் அனைவருக்கும் தெரியும். நான் சொல்வது சரியா, ஆண்டவரே.''
"கரெக்ட். நற்செய்தி உங்கள் 12 பேருக்கு மட்டுமல்ல, யூதர்களுக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்காகவும்தான்.
உலகில் கடைசி எல்கை வரை நற்செய்தியை கொண்டு சேர்க்கப் போகிறவர்கள் நீங்கள்தானே."
ஆக இயேசு சொன்னது அவரது அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல,
நம் அனைவருக்காகவும்தான்.
நம்மிடம்தான் சொல்கிறார்,
"தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்"
என்று.
விவசாயத்தில் அறுவடை ஆகப் போகிறது என்றால்
அதற்கு முன்னாலேயே நிலம் பக்குவப்படுத்தப்பட்டு,
நெல் விதைக்கப்பட்டு, நாற்று பாவப்பட்டு,
நாற்றுக்கள் பக்குவப்படுத்தப்பட்ட நிலத்தில் நடப்பட்டு,
தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு,
ஏதாவது நோய்கள் இருந்தால் மருந்து அடிக்கப்பட்டு,
வேண்டும் போதெல்லாம் உரமிடப்பட்டு,
பயிர் வளர்ந்து,
கதிர் விட்டு,
கதிர் விளைந்து,
இத்தனை நிலைகள் கடந்த பின்புதான்
அறுவடையே வரும்.
ஆன்மீகத்திலும் அப்படித்தான்.
நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.
அறிவிக்கப்பட்டவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏற்றுக்கொண்டபின் ஞானஸ்நானம் பெற வேண்டும்.
தொடர்ந்து திரவிய அனுமானங்களை ஒழுங்காக பெற்று ஆன்மீகத்தில் வளர வேண்டும்.
பாவம் என்ற நோயினால் ஆன்மா பாதிக்கப்படும்போது பாவசங்கீர்த்தனம் என்ற மருந்தினால் நோயைக் குணமாக்க வேண்டும்.
ஆன்மா இறைபன்பிலும், பிறர் அன்பிலும் வளர வேண்டும்.
இத்தனை நிலைகள் வழியாக மீட்பு எனப்படும் அறுவடைக்கு ஆன்மா தயாராக வேண்டும்.
உலகிலுள்ள, கிறிஸ்தவர்கள் அல்லாதோரையும் உள்ளடக்கிய, அத்தனை ஆன்மாக்களையும்,
இத்தனை நிலைகள் வழியாக அறுவடைக்கு தயாரிக்க வேண்டியவர்கள்
அப்போஸ்தலர்களின் இடத்தில் இருக்கும் நம்முடைய குருக்கள்.
உலகிலுள்ள அத்தனை ஆன்மாக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்
அவர்களை கவனிக்க இன்று நம்மிடையே செயலாற்றும் குருக்கள் போதுமா?
நம்மிடையே இன்னும் ஏராளமான குருக்கள் வரவேண்டும்.
இதை மனதில் வைத்துக்கொண்டுதான் ஆண்டவர்,
"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு."
என்றார்.
ஆன்மீக அறுவடைக்கான வேலையாட்களை நிறைய அனுப்ப வேண்டும் என்று நாம் ஆண்டவரை நோக்கி மன்றாட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
இது நாம் ஆண்டவரோடு பேசுவதற்காகவும்,
நமது முழுமையான ஒத்துழைப்பையும் நல்குவதற்காகவும்தான்.
உலகம் முழுவதும் ஒரே குடும்பம் தானே.
குடும்பத்தினர் அனைவருக்காகவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்தானே.
அறுவடைக்கான வேலையாட்கள் நமது குடும்பங்களில்தான் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குடும்பத்தில் பிறந்து வளரும் பிள்ளைகள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் ஆக வேண்டுமென்று ஆசைப்படுகின்ற பெற்றோர்கள்,
ஒரு மகனாவது குருவானவர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.
ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அந்த ஆசை மகன் மனதிலும் வரவேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
அதற்கான விதத்தில் பிள்ளைகளை நல்ல, பக்தியுள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும்.
எதற்காகவாவது குருக்களை குறை சொல்லுபவர்கள்,
அவர்கள் தங்கள் குழந்தைகளை பக்தியில் வளர்க்கின்றார்களா என்பதைத் தாங்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.
சமையலறை சரியாக இருந்தால்தான் சாப்பாட்டறை சரியாக இருக்கும் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி இறைவனை வேண்டுவதோடு,
அவருக்கு நமது முழுமையான ஒத்துழைப்பையும் கொடுப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment