Friday, July 2, 2021

"என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" (அரு. 20:29)

"என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" (அரு. 20:29)

விசுவாசத்தை பொறுத்தமட்டில் அப்போஸ்தலர்கள்  அனைவரும் ஒரே மாதிரிதான்.

பொதுவாழ்வின்போது இயேசு  அவர்களிடம் மனுமகன் பாடுகள் பட்டு மரிக்கவும் மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.   

ஆனாலும் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை விசுவசித்ததாகத் தெரியவில்லை.

மதலேன்மரியாள்  இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று  அவர்களிடம் கூறியபோதும் அவர்கள் நம்பவில்லை.

அவள்  கூறியதை உறுதி செய்துகொள்ள இராயப்பர் எழுந்து கல்லறைக்கு ஓடினார்.

இயேசு  அவர்களுக்குத் தோன்றியபோது தோமையார் அங்கு இல்லை.

மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றதற்கு அவர், "அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப் பார்த்து, ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, அவர் விலாவில் என் கையையிட்டாலொழிய விசுவசிக்கமாட்டேன்" என்றார்.

அதேபோல் அடுத்த முறை இயேசு தோன்றும் போதும் அவருடைய காயங்களை பார்த்த பின்புதான் விசுவசித்தார்.

ஆண்டவர் அவரிடம்,

 "என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" என்றார்.

இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டு பார்க்கும்போது இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்த அப்போஸ்தலர்களைவிட நாம் பேறு பெற்றவர்கள். 

 ஏனெனில் நாம் இயேசு உயிர்த்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு 
பின்னால்தான் பிறந்து வாழ்கிறோம்.

இயேசு உயிர்த்ததை நமது கண்களால் பார்க்கவில்லை.

ஆயினும் விசுவசிக்கிறோம்.

ஆகவே நாம் பேறுபெற்றவர்கள் தான்!

ஆனாலும் நமது உள்ளத்தில் ஆழத்திலிருந்து விசுவசிக்கிறோமா 

அல்லது 

வரலாற்றுப் புத்தகங்களை வாசித்துவிட்டு வரலாற்று நாயகர்கள் வாழ்ந்ததை ஏற்றுக்கொள்வது போல ஏற்றுக் கொள்கிறோமா?

பாடப்புத்தகத்தை பார்த்துவிட்டு அலெக்சாண்டர் என்று ஒரு மன்னர் வாழ்ந்தார் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

இது நமது புத்திக்கு மட்டும் உரிய செயல்.

அலெக்சாண்டரை ஏற்றுக்கொண்டது நமது இருதயத்தையோ, வாழ்வையோ எந்த விதத்திலும் பாதித்தது இல்லை.

இரண்டு உலகப் போர்களின் காரணங்களையும் விளைவுகளையும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்து, தேர்வு எழுதி, மதிப்பெண் பெற்று வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

கொரோனா அலைகளால் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மரணங்களைவிட பல மடங்கு அதிகமான மரணங்கள் போர்களால் ஏற்பட்டன என்ற உண்மையையும் அறிந்திருக்கிறோம்.

ஆனால் இந்த அறிவு மனித சமுதாயத்தின் வாழ்க்கையை எந்த முறையிலாவது பாதித்திருக்கிறதா?

பாதித்திருந்தால் இப்போது உலகில் போர்கள் அற்ற சமாதான நிலை ஏற்பட்டிருக்க வேண்டுமே?

ஏற்பட்டிருக்கிறதா?

அணு ஆயுத குவிப்பு தான் போர்களுக்கு முக்கியமான காரணம் என்பதை தெரிந்த பின்பும்    அணு ஆயுதத் தயாரிப்பைக் கைவிட்டிருக்கிறோமா?

இல்லையே!

அப்படியானால் நமது வரலாற்று அறிவினால் நமக்கு என்ன பயன்?


நமது விசுவாசத்தினால் இறைவனைப் பற்றிய உண்மைகளை நாம் அறிந்து ஏற்றுக் கொண்டால் மட்டும் போதுமா?

நமது விசுவாசம் நமது வாழ்வாக மாறினால் தானே அதனால் நமக்கு பயன்!

சாத்தானுக்குக் கூட இயேசு கடவுள் என்று தெரியும். அதனால்  அதற்கு எந்த பயன்?

அதேபோல் தான் இயேசு மரித்த மூன்றாவது நாள் உயிர்த்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதால் மட்டும் நமக்கு என்ன பயன்?

இயேசு நமக்காக பாடுபட்டார் என்று விசுவசிக்கிறோம். நாம் அவருடைய சீடர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகவே  இயேசு பாடுபட்டார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் நமக்கு துன்பங்கள் வரும்போது இயேசுவைப் போல நாமும் அவற்றை  நமது பாவங்களுக்கும் பரிகாரமாக ஏற்றுக் கொள்ளாமல் முணு முணுக்கிறோமே,

 நமது விசுவாசத்தால் என்ன பயன்?

இயேசு தனது உயிர்ப்பினால் நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்று போதித்திருக்கிறார். அதையும் விசுவசிக்கிறோம்.

ஆனால் சாவுக்குப் பயப்படுகிறோமே, 

நமது விசுவாசத்தால் என்ன பயன்?

திவ்விய நற்கருணையை பார்க்கும்போது ஒரு அப்பம் தான் கண்ணுக்கு தெரிகிறது.

அவரது உடலை நாம் காண்பதில்லை.

காணாமலேயே திவ்விய நற்கருணையில் இயேசு தனது உடலோடும், ஆன்மாவோடும், இரத்தத்தோடும் இருக்கிறார் என்று விசுவசிக்கிறோம்.

 ஆனால் நமது விசுவாசம் நமது வாழ்வில் எப்படி பிரதிபலிக்கிறது?

திருப்பலியின் போது திருவிருந்து அருந்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் முழு திருப்பலியிலும் கலந்து கொள்வது.

சிலர் திருமண வீட்டிற்கு செல்லும்போது, 

தாலிகட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை விட சாப்பாட்டில் கலந்து கொள்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கூட்டத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக  நேரே dining hallக்குச் சென்று,

முதல் பந்தியிலேயே சாப்பிட்டுவிட்டு,

பிறகு ஆற அமர உட்கார்ந்து கவர் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

அதேபோல் தான் சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு திருப்பலியில் கலந்து கொள்ளாமல்

 சரியாக நன்மை கொடுக்கும் நேரத்தில் வந்து 

எந்தவித முன் தயாரிப்பும் இன்றி திருவிருந்தில் கலந்து கொள்வார்கள். 

அவர்களுக்கு பிடித்தமான கட்சித் தலைவர் அல்லது நடிகர் கலந்து கொள்ளும் கூட்டமாக இருந்தால்

 கூட்டம் ஆரம்பிப்பதற்கு வெகு நேரத்துக்கு முன்னாலேயே வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டு 

முழு கூட்டமும் முடிந்தபின் வெளியேறுவார்கள்.

அந்த ஆர்வம் திருப்பலி காண்பதில் இருக்காது.

அப்படிப்பட்டவர்களுக்கு விசுவாசத்தால் என்ன பயன்?

விசுவாச சத்தியங்களை உண்மை என்று ஏற்றுக்கொள்வதால் மற்றும் ஒருவன் மீட்புப் பெற முடியாது.

அவற்றில் வாழ்ந்தால் மட்டுமே மீட்பு பெற முடியும்.

"நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன்."
என்று சொல்கிறோம்.

பள்ளிக்கூடம் முடிந்தவுடன் எல்லோருக்கும் மட்டன் பிரியாணி விருந்து இருக்கும் என்று காலையில் தலைமை ஆசிரியர் கூறிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

கடைசி பிரிவு வேளை ஆரம்பிக்கும் முன்னாலேயே பியூண் மணி அடித்துவிட்டான்.

பள்ளிக்கூடம் சீக்கிரமாக 
முடிந்ததற்காக  மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார்களா? வருத்தம் அடைவார்களா? 

பிரியாணி விருந்து இருப்பதால் பள்ளிக்கூடம் ஆரம்பித்த உடனேயே முடிந்துவிட்டால் கூட மகிழ்ச்சிதான் அடைவார்கள்.

நாம் இறந்த உடனேயே நமக்கு விண்ணக வாழ்வு உறுதியாக இருக்கிறது என்று விசுவசித்தால்,

மரணத்தை கண்டு பயப்பட மாட்டோம்.

பயந்தால் நமது விசுவாசத்தால் நமக்கு பயன் எங்கே இருக்கிறது?

விசுவாசத்தை நாம் வாழ்ந்தால்தான் இயேசு கூறியபடி  நாம் பாக்கியவான்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment