Wednesday, July 7, 2021

"தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."(மத்.10:38)

"தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."
(மத்.10:38)

இயேசுவின் காலத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி சிலுவை.

ஒருவன் சிலுவையில் அறையப்பட்டால் அவன் மரண தண்டனை பெறக்கூடிய அளவிற்கு பெரிய குற்றம் செய்தவன் என்று  பொருள்.

தான் எந்த காலத்தில் மனிதனாகப் பிறக்க வேண்டும்,

 யார் வயிற்றில் உற்பவிக்க வேண்டும்,

 எந்த ஊரில் பிறக்க வேண்டும்,

 எந்த ஊரில் வளர வேண்டும்,

 எந்த வயதில் நற்செய்தி அறிவிப்பை தொடங்க வேண்டும்.

 யார் யாரை அப்போஸ்தலர்களாகத்  தேர்ந்தெடுக்க வேண்டும்,

 எப்போது, யார் கையில் பாடுகள் பட்டு

 எப்படி மரணம் அடைய வேண்டும் என்பதையெல்லாம் 

இறைமகன் நித்திய காலமாகவே திட்டமிட்டு வைத்திருந்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவே மனிதனாக பிறந்ததால் 

குற்றவாளிகளை தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சிலுவையையே

 தான் தனது மரணத்தின் மூலம் பரிகாரம் செய்யவேண்டிய இடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

தனது மரண விதத்தை( The manner of His death) அவரே தேர்ந்தெடுத்தார்.


இறைமகனின் கைபட்டதால்

 தண்டனைக்குரிய சிலுவை 
பரிகாரத்திற்குரிய சிலுவையாக மாறிவிட்டது. 

குற்றவாளிகளின் அடையாளமாக இருந்த சிலுவை மீட்பரின் அடையாளமாக மாறிவிட்டது.

பாவிகள் மரித்த சிலுவை பரிசுத்தர் மரிக்கும் சிலுவையாக மாறிவிட்டது.

வெறுக்கப்பட வேண்டிய சிலுவை நேசிக்கப் படவேண்டிய பொருளாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் மக்களைப் பயப்பட வைத்த சிலுவை இன்று மக்களின் நேசத்துக்குரிய பொருளாக மாறிவிட்டது.

இயேசுவின் வாழ்வில் சிலுவைக்கு பின் தான் உயிர்ப்பு.

நமது வாழ்வில் சிலுவையினால் தான் நமது ஆத்மாவின் இரட்சணியம்.

அன்று இயேசு சிலுவையைச் சுமந்து, அதில் மரித்து  நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

தாயைப் போல பிள்ளை.

குருவைப் போல சீடன்.

சிலுவையை சுமந்து அதில் மரிப்பவன் தான் இயேசுவின் உண்மையான சீடன்.

இயேசு சொல்கிறார்,

"தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."


அதாவது நமக்கு துன்பங்கள் வரும்போது நாம் இயேசுவை நோக்கி,

"ஆண்டவரே ஆண்டவரே இந்த துன்பங்களிலிருந்து எனக்கு விடுதலை தாரும்." என்று வேண்டினால்,

அதன் பொருள்,

"ஆண்டவரே ,ஆண்டவரே,

உமது சீடனாக இருக்க எனக்கு விருப்பமில்லை. ஆகவே என்னை விட்டுவிடும்."

என்பதுதான்.

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"
என்று தமிழில் ஒரு பழமொழி ஒன்று உண்டு.

"சந்தர்ப்பம் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள் " என்பது இதன் பொருள்.

தேர்வு நெருங்கி விட்டது.

 முழுநேரமும் பள்ளிக்கூடத்திற்குப் போய்க்கொண்டே 

மீதி நேரத்தில் எல்லா பாடங்களையும் எப்படி திருப்பிப்  பார்ப்பது,

 நேரம் கிடைக்கவில்லையே என்று ஒரு மாணவன் வருந்திக் கொண்டு இருக்கிறான்.

எதிர்பாராமல் தொடர்ந்து மூன்று நாள் அடைமழை.

பள்ளிக்கு மூன்று நாளும்  விடுமுறை விட்டு விட்டார்கள்.

அப்பாடா! மூன்று நாட்கள் free!

கிடைக்கிற சந்தர்ப்பத்தை நழுவ விடாமல்

 மூன்று நாட்களையும் பாடங்களை திருப்பி பார்க்க பயன்படுத்திக் கொள்கிறான், நல்ல மாணவன்! 

சோம்பேறி மூன்று நாட்களையும் விளையாடுவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறான்!

துன்பங்கள் நமது வாழ்வில் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள்.

உலகப் பார்வையில் துன்பங்கள் விரும்பத் தக்கவை அல்ல.

ஆனால் கிறிஸ்துவின் பார்வையில் துன்பங்கள் ஆசீர்வாதங்கள்.

ஏனெனில் அவை  நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும், 

நமது விண்ணக பேரின்பத்தின் அளவை அதிகரிக்கவும் பயன்படுகின்றன!

நமக்கு வரும் துன்பங்களை பாவப் பரிகாரமாக ஏற்றுக்கொண்டு

 அவற்றை பொறுமையோடும் நல்ல மனதோடும் அனுபவித்து கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தால் 

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்யப்படுவதால்

 உத்தரிக்கிற ஸ்தலத்தில் நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் வேதனை குறையும்.

அதுமட்டுமல்ல பொறுமையோடு இயேசுவுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் துன்பங்களால் நமது பேரின்பத்தின் அளவு அதிகரிக்கும்.

ஆகவேதான் அவை ஆசீர்வாதங்கள்.

இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்யவே பூமியில் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவே துன்பங்களை இயேசு ஏற்றுக்கொண்டது போல ஏற்றுக் கொள்ளும் அனைவரும் இயேசுவின் சீடர்கள்,

துன்பங்களின் மகத்துவத்தை அறியாதவர்கள்தான் துன்பத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

இன்று விண்ணகத்தில் இயேசுவோடு நித்திய பேரின்பத்தை அனுபவித்து கொண்டிருக்கும் புனிதர்கள் எல்லாம் 

உலகில் வாழும் போது துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்களே.

நமது நிரந்தர வீட்டில் அனுபவிக்க போகும் நித்திய பேரின்பத்திற்காக 

இவ்வுலகில் விண்ணக நோக்கி நாம் செய்யும் பயணத்தின்போது ஏற்படும் துன்பங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

பத்து மாதம் சுமந்தால்தான்,

பேறுகால வேதனை அனுபவித்தால்தான்,

கொஞ்சி விளையாட குழந்தை கிடைக்கும்.

இவ்வுலக வாழ்வில் துன்பங்களை ஏற்றுக் கொண்டால்தான் மறுவுலக வாழ்வு பேரின்பம் நிறைந்ததாக இருக்கும்.

துன்பங்கள் நிறைந்த பெரிய வெள்ளிக்கிழமைக்குப் பின்புதான்

மகிமை நிறைந்த ஈஸ்டர் வருகிறது.

இயேசுவின் வழிதான் நம் வழி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment