" எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்."
(மத்.10:39)
டாஸ்மாக் கடைக்குப் போய் இழந்த பணம் இழந்ததுதான். திரும்பி வராது.
தியேட்டருக்குப் போய் படம் பார்த்து இழந்த நேரம் இழந்ததுதான். திரும்பி வராது.
ஆனால் பயிர்த் தொழில் புரிபவன் மண்ணில் இழந்த விதை ஒன்றுக்கும் நூறாய் திரும்பி வரும்.
படிப்பிற்காக இழந்த பணம் பன்மடங்கு திரும்பி வரும், வேலையில் அமரும்போது.
திரும்பி வராத இடத்தில் இழப்பவன் புத்தி அற்றவன்.
ஒன்றுக்கு நூறாய் திரும்பித் தரும் இடத்தில் இழப்பவன் புத்திசாலி.
நமது உயிர் இறைவனிடமிருந்து வந்தது.
அதை இறைவனுக்காக இழந்தால் அது இறைவனிடமே திரும்பிச் செல்லும்.
நமது உயிர் என்றால் நாம்தான்.
நம்மை நாமே இறைவனுக்காக இழந்தால் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்.
நமது வாழ்க்கைப் பந்தயத்தில்
umpire ம்,
Starting point ம்,
Finishing point ம்
இறைவனே!
எல்லாம் இறைவனே!
நாம் வாழ்வது இறைவனுக்காக, இறைவனுக்காக மட்டுமே.
நம்மிடம் இருக்கும் எல்லா உடமைகளும்,
நமது உயிர் உட்பட,
இறைவனுக்கு மட்டுமே சொந்தம்.
ஆகவே நமது அனைத்து உடமைகளையும் இறைவனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இறைவனுக்காக வாழ்வது உலகிற்காக வாழ்வது இரண்டும் எதிரெதிர் வாழ்க்கைகள்.
இறைவனுக்காக முழுமையாக வாழ்பவன் உலகிற்காக
வாழ முடியாது.
உலகிற்காக முழுமையாக வாழ்பவன் இறைவனுக்காக வாழ முடியாது.
"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் "
"கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது."
(மத். 6:24)
உலகிற்காக அதாவது செல்வத்துக்கு ஊழியம் செய்பவன்
ஊழியத்தின்போது இழந்ததை திரும்ப பெற மாட்டான். இழந்தது இழந்ததுதான்.
உதாரணத்திற்கு,
செல்வத்தை ஈட்டுவதற்காக அவன் செலவழிக்கும் செல்வம் செலவிடப்பட்டதுதான்,
செலவழிக்கப்பட்டதும் திரும்ப வராது, அதனால் ஈட்டிய செல்வமும் அவன் உலகைவிட்டு பிரியும் போது அவனோடு வராது.
பல லட்சங்கள் செலவழித்து தேர்தலில் வென்று அமைச்சர் பதவிக்கு வந்திருப்பான்.
அப்பதவியில் கோடிக் கணக்காக ஈட்டியிருப்பான்.
செலவழித்த பணத்தை யார் யாரோ அனுபவித்திருப்பார்கள், அவனைத் தவிர.
ஈட்டிய கோடிகளும் அவனது இறுதி நாளில் அவன் கையை விட்டு யார் யாருக்கோ போய்விடும்.
நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் வென்றான்.
ஆனால் அவன் போய்விட்டான். ஐரோப்பா இருந்த இடத்தில் தான்இருக்கிறது, யார் யாருக்கோ சொந்தமாக!
ஆனால் இறைவனுக்கு ஊழியம் செய்கின்றவன் செலவழிக்கும் ஒவ்வொரு பொருளும்
பன்மடங்கு மதிப்புள்ள ஆன்மீகப் பொருளாக மாறி
விண்ணுலகம் சென்று அவனது வருகைக்காக காத்திருக்கும்.
இறை ஊழியத்தின் போது இறைவன் பெயரால் தனது அயலானுக்கு உதவியாக கொடுக்கும் ஒவ்வொரு பொருளும்
விண்ணுலக சன்மானமாக மாறி அவனது இறுதி நாளுக்குப் பின் அவனோடு நித்திய காலமாக இருக்கும்.
உலகில் வாழும் போது நாம் ஈட்டுகின்ற இறை அருள் என்றென்றும் நம்மோடு இருக்கும்.
இறைவனுக்காக நமது உயிரையே தியாகம் செய்தாலும்,
அது நாம் விண்ணுலம் செல்லும்போது நிலை வாழ்வு தர நம்மிடமே திரும்பி வரும்.
அதனால்தான் ஆண்டவர் சொல்லுகிறார்,
"எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்."
இறைப் பணிக்காக தன் உயிரை இழந்த அருட்திரு ஸ்டான் ஸ்வாமி, சே.ச.
இன்று விண்ணுலகில் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார், மறைசாட்சியாக.
இயேசுவுக்கு சாட்சியாக இவ்வுலகில் உயிரை இழந்த அவர்
மறு உலகில் அதை இறைவனிடம் கண்டடைந்திருக்கிறார்.
இறை பணிக்காக செலவழிக்கும் நேரம் வீணாகாது.
அது முடிவில்லாத நித்திய வாழ்வை நமக்கு தேடித்தரும்.
நிலையற்ற இவ்வுலக வாழ்வை இறைவனுக்காக இழந்து
முடிவற்ற நிலைவாழ்வை
அவரிடமே கண்டடைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment