Thursday, July 22, 2021

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.''(மத்.12:30)

."என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.''
(மத்.12:30)

அரசியலில் அணிசேராக் கொள்கை அனுபவரீதியாக பாராட்டப்பட்ட ஒன்று.

எதிர் எதிர் கொள்கைகளை உடைய இரண்டு அணிகள் ஒன்றை ஒன்று வெல்வதற்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கும்போது

 எந்த அணியிலும் சேராமல் தனியாக இயங்குவது 
இக்கொள்கையின் நோக்கம்.

 ஒரு காலத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும்  எதிர் எதிர் பொருளாதாரக் கொள்கைகளை உடைய இரண்டு வல்லரசுகளாக விளங்கின.

வல்லரசு என்றாலே அழிக்க வல்ல அணு ஆயுதங்களைக் கொண்ட அரசு என்பதுதான் பொருள்.

இரண்டும் எப்போதும் யுத்தத்திற்கு தயாராக இருக்கும்.

பொருளாதார உதவிக்கும், யுத்த காலங்களில் உதவுவதற்கும் மற்ற நாடுகள் ஏதாவது ஒரு அணியில் கூட்டு சேர்வது வழக்கம்.

கூட்டு சேர்ந்தால் வல்லரசுகள் ஒன்றோடொன்று மோதும்போது அணிசேர்ந்த நாடுகளும் போரின் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

ஆகவே இந்தியா எந்த அணியிலும் கூட்டுச் சேராக் கொள்கையை கடைப்பிடித்து வந்தது.

நடுநிலைமை வகிப்பது அரசியலில் பாராட்டத்தக்கது.

ஆனால் ஆன்மீகத்தில் கூட்டுச் சேரா கொள்கையை பயன்படுத்த முடியாது.

உலகில் இரண்டு ஆன்மீக அணிகள் இயங்கி வருகின்றன.

ஒன்று கடவுளை தலைமையாகக் கொண்ட விண்ணக அணி.

மற்றொன்று சாத்தானின் ஆலோசனையில் இயங்கும் மண்ணக அணி.

விண்ணக அணியில் சேர்ந்தோர் நித்திய பேரின்ப வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் இயேசுவின் போதனைகளின்படி வாழ்வர்.

மண்ணக அணியினர் இவ்வுலக சிற்றின்ப  வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் சாத்தானின் ஆலோசனைகளின்படி வாழ்வர்.

ஒருவன் இந்த இரு அணிகளில்   ஒன்றின் பக்கம் இருந்துதான் ஆகவேண்டும்.

எந்த அணியிலும் இல்லாமல் தனித்து வாழ முடியாது.

ஒருவன் இறைவனின் அணியில் இருந்தால் சாத்தானின் அணியில் இருக்க முடியாது.

இறைவனின் அணியில் இல்லாவிட்டால் அவன் சாத்தானின் அணியில்தான் இருப்பான்.

ஒரே நேரத்தில் இரண்டு அணிகளிலும் இருக்க முடியாது.

"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.

 ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான்.

 அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். 

கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது." (மத். 6:24)

இயேசு சொல்கிறார்,

" ஒரே நேரத்தில் நம்மால் கடவுளுக்கும், பணத்துக்கும் ஊழியம் செய்யமுடியாது.

இறைப்பற்று உள்ளவனிடம் பணப் பற்று இருக்க முடியாது.

பணத்தின் மேல் பற்று உள்ளவனிடம் இறைவன் மேல் பற்று இருக்க முடியாது.

இயேசுவின் அணியில் இல்லாதவன் எதிரணியில்தான் இருந்தாக வேண்டும்.

நண்பர் ஒருவர் கேட்கிறார்:

உலகமே இல்லாமல்,

உலகத்தில் உள்ள பொருள்களும் இல்லாமல்,

 பணமும் இல்லாமல் 

எப்படி உலகில் வாழ முடியும்?

 உலகையும், பணம் உட்பட அதிலுள்ள பொருட்களையும்

படைத்தவர் நம்மை படைத்த அதே இறைவன் தான்.

அவற்றை எதற்காகப் படைத்தார்?

நாம் அவரது ஊழியத்தில் பயன்படுத்துவதற்காக அவற்றைப் படைத்தார்.

நம்மைப் படைத்தது அவருக்கு ஊழியம் செய்வதற்காக.

நாம் வாழ்வது அவருக்கு ஊழியம் செய்வதற்காக மட்டுமே.

நாம் மூச்சு விடுவது முதல் நமது ஒவ்வொரு அசைவும்,உண்ணுதல், உடுத்தல், இருத்தல், எழுதல்....உறங்குதல் உட்பட 

நமது அனைத்து வேலைகளையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும் .

அப்படியானால் பணம் உட்பட அனைத்துப் பொருள்களும் இறைவனுக்காகவே 

அதாவது இறைவனுக்கு சேவை செய்வதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.

நாம் வாழும் உலகத்தை இறைவனுக்கு சேவை செய்வதற்காகவே பயன்படுத்த வேண்டும்.

நாம் இறைவனுக்கு சேவை செய்யும் போது உலகத்தை பயன்படுத்துகிறோம்.

இறைவனுக்கு சேவை செய்யாவிட்டால் நாம் உலகத்திற்கு சேவை செய்கிறோம்.

நடுநிலைமை வகிக்க முடியாது.

நாம் இறைவனுக்கு சேவை செய்கிறோமா,

 அல்லது,

உலகிற்கு  செய்கிறோமா 

என்பதை நாம் சுயபரிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

எப்படி அறிந்து கொள்வது?

நமது வாழ்வின் ஒவ்வொரு செயலும் நாம் யாருக்கு சேவை செய்வோம் என்பதை நமக்கு புரியவைக்கும்.

உதாரணத்திற்கு,

படித்து முடித்துவிட்டு ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

 வேலை கிடைக்கும்படி இறைவனிடம் வேண்டுகிறோம். திருப்பலி ஒப்புக் கொடுக்கிறோம்.

இறைவன் அருளால் வேலையும் கிடைத்து விட்டது.


இறைவன் அருளால் கிடைத்த வேலையை இறைவனது மகிமைக்காக செய்ய வேண்டும்,

இறைவனுக்காக செய்யப்படும் வேலை இறைப் பணியாக மாறும்.

இங்கு நமது வேலையை இறைவனது மகிமைக்காக பயன்படுத்துகிறோம்.

ஆகவே நாம் இறைவனுக்கே சேவை செய்கிறோம். 

ஆனால், வேலை கிடைத்தவுடன் இறைவனை மறந்து விட்டு, நமது சொந்த நலனை மட்டும் மையமாக வைத்து நாம் வேலையைச் செய்தால்,

நாம் உலகத்திற்காக இறைவனைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

அதாவது நாம் உலகத்திற்கு சேவை செய்கிறோம்.

ஒரே நேரத்தில் இறைவனுக்கும் உலக செல்வத்திற்கும் சேவை செய்ய முடியாது.

சிலர் உலக தேவைகள் நிறைவேறுவதற்காக இறைவனுக்கு நேர்ச்சைகள் செய்வார்கள்.

உதாரணத்திற்கு குடும்பத்தில் நிலவும் கடன் பிரச்சனைகள் நீங்குவதற்காக பதிமூன்று செவ்வாய்க்கிழமைகள் திருப்பலியில் கலந்துகொள்வதாக நேர்ந்திருப்பார்கள்.

பிரச்சனைகள் தீராவிட்டால் அப்புறம் திருப்பலியையும்,  இறைவனையும் மறந்து விடுவார்கள். 

இவர்கள் தங்கள் தேவைக்கு இறைவனைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

இவர்கள் சேவை செய்வது உலகத்திற்குதான்.

இறைவனுக்கு சேவை செய்பவர்கள் வேண்டியது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறுவார்கள்.

எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறக்க மாட்டார்கள்.

ஒருவர் தினமும் கோவிலுக்கு போகிறார் என்பதிலிருந்து அவர் இறைவனுக்கு சேவை செய்கிறார் என்று முடிவு செய்ய முடியாது.  

எதற்காக போகிறார் என்பதை அறிய வேண்டும்.

இறைவனை தன் இறைவன் என்பதற்காக வழிபட போகிறாரா,

 அல்லது தனக்கு ஏதாவது உலக உதவி கேட்டு மட்டும் போகிறாரா

என்பதை அறிந்தால் மட்டும் அவரது சேவை யாருக்கு என்று கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் அப்படி கண்டுபிடிப்பது மற்றவர்களுடைய வேலை அல்ல.

அவராகவே சுயபரிசோதனை செய்து தான் செய்யும் சேவை 
இறைவனுக்கா அல்லது உலகத்திற்கா என்பதை அறிந்து,

தவறு இருந்தால் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும்.

ஒழுங்காக இறைப் பணி ஆற்றிக் கொண்டு இருப்பவர்கள் கூட,

ஏதாவது உலகப் பொருள் மீது பற்று வைக்க ஆரம்பித்தால்,

 தவறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இறைப் பணி ஆற்றும் ஒவ்வொருவரும் இரவில் படுக்கப் போவதற்கு முன்,

சுய பரிசோதனை செய்து,

எந்தப் பொருள் மீதாவது அன்று பகலில் பற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை  அறிந்து, 

தங்களது இறைப் பற்றைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இறை மகனையே சோதித்தவன் சாத்தான்.

பணத்தின் மீது ஆசைகாட்டி நாம் தடம் மாற முயற்சி செய்வான்.

பணப் பற்று அதிகமானால் இறைப்பற்று காணாமல் போய்விடும்.

ஆகவே நாம் ஒவ்வொரு வினாடியும் கவனமாக இருக்க வேண்டும்.

உலகின் மீது  பற்று ஏற்படாதவாறு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

யூதாசுக்கு உண்மையிலேயே இயேசு மேல் பாசம் இருந்தது.


ஆகவேதான் அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, 

மனம் வருந்தி, 

முப்பது வெள்ளிக் காசுகளையும் ஆலயத்தில் எறிந்துவிட்டு

 நான்றுகொண்டான்.

அவனைக் கெடுத்தது அவனுடைய பணப்பற்று.

ஆகவே பணத்தை பார்க்கும்போது கவனமாக இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment