"கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்."
(மத்.11:21)
ஒரு நாள் முதல் பிரிவு வேளையின்போது ஒரு மாணவனுடைய தந்தை வகுப்பிற்குள் நுழைந்தார்.
"என்ன, ஐயா, பையனைப் பார்க்க வேண்டுமா?"
"இல்லை, உங்களைத்தான் பார்க்க வேண்டும்"
"என்ன விஷயம் சொல்லுங்கள்."
"சார், நீங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சம்பளம் வாங்குகின்றீர்களா, அல்லது மாணவர்களை சாபம் போடுவதற்காக சம்பளம் வாங்குகின்றீர்களா?"
சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து,
"உனக்கு என்னடா பிரச்சினை?"
"நேற்று இப்படி படிக்காமல் வந்தால் வாழ்க்கையில் உருப்பட மாட்டாய் என்று சொன்னீர்கள் அல்லவா?"
"இதற்குப் பெயர்தான் சாபமா?
இங்கே பாருங்கள், ஐயா, மாணவர்கள் ஒழுங்காகப் படிக்காவிட்டால் அல்லது தவறு செய்தால்
அவர்களை படிக்க வைப்பதற்காக அல்லது திருத்துவதற்காக சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி
கண்டிப்பது ஆசிரியர்களது வழக்கம்.
ஆசிரியர்கள் கண்டிப்பது மாணவர்களது நலனுக்காகத்தான்.
என்மேல் நம்பிக்கை இருந்தால் உங்கள் பையனை என்னிடம் ஒப்படைத்து விட்டு போங்கள்.
இல்லாவிட்டால் உங்களுக்கு விருப்பமான ஆசிரியரிடம் அவனைச் சேருங்கள்."
"அப்பா நான் இங்கேயே இருக்கிறேன்.
எல்லா ஆசிரியர்களும் கண்டிக்கதான் செய்வார்கள்."
"பிறகு ஏண்டா என்னிடம் வந்து ஆவலாதி சொன்னாய்?"
"இனிமேல் சொல்ல மாட்டேன்."
அடுத்து ஒன்றும் சொல்லாமல் அவர் போய்விட்டார்.
ஆசிரியர் மாணவர்களை அடிப்பது, திட்டுவது அவர்களது நலன் கருதியே.
கண்டிக்கும் போது ஆசிரியர் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அகராதியை பார்த்து பொருள் கொள்ளக் கூடாது,
சந்தர்ப்பத்தை பார்த்துதான் பொருள் கொள்ள வேண்டும்.
"நாளைக்கு வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டால் 'கொன்றுவிடுவேன்' என்று ஒரு ஆசிரியர் சொன்னால் அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு போடலாமா?
இயேசு மக்களது குற்றங்களின் கனாகனத்தைப் புரிய வைப்பதற்காக சில சமயங்களில்
"ஐயோ கேடு!" என்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்.
இயேசு யாரையும் சபிப்பதற்காக மனிதராக பிறக்கவில்லை.
இரட்சிப்பதற்காக மட்டுமே பிறந்தார்.
யாரைப் பார்த்து இயேசு அந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறாறோ அவர்கள் தங்களது குற்றங்களின் கனா கனத்தை உணர்ந்து| மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, திருந்த வேண்டும். அதுவே இயேசுவின் நோக்கம்.
ஒருவகையில் அவர்கள் மீது அன்பும், அக்கறையும் அதிகம் வைத்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
கொராசின், பெத்சாயிதா நகர்களில் இயேசு ஏராளமான புதுமைகளை செய்திருந்தார்.
ஆனால் அவைகளில் அநேகர் மனம் திரும்பவில்லை.
அதைச் சுட்டி காண்பிக்கவே பேசு இயேசு அவர்களை பார்த்து
" ஐயோ கேடு!" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
பரிசேயர்களும், சதுசேயர்களும் மனம் மாறி நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் பற்றி பேசும் போதும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார்.
சாபம் இடுவதற்காக இருந்திருந்தால்
மரண வேளையில் அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த அவர்களை மன்னிக்கும்படி ஏன் பரலோகத் தந்தையிடம் செபித்தார்?
கொராசின், பெத்சாயிதா நகர்கள்
யூத மக்கள் வாழ்ந்த நகர்கள். அதாவது சிதறிப்போன இஸ்ராயேல் குலத்து ஆடுகள் வாழ்ந்த நகர்கள்.
அவர்களிடையே இயேசு அநேக
புதுமைகள் பல செய்து நற்செய்தியை அறிவித்தார்.
ஆனாலும் அந்நகர மக்கள் இயேசு ஆசைப்பட்ட அளவு திருந்தி வாழ வில்லை.
ஆகவேதான் இயேசு அவர்களைக் கண்டிக்கிறார்.
இன்று நம்மை எடுத்துக் கொள்வோம்.
நாம் இயேசுவின் ஞான உடலைச் சேர்ந்த அவரது பிள்ளைகள்.
கொராசின், பெத்சாயிதா நகர மக்களைவிட எவ்வளவோ மேலானவர்கள்.
அவர்களுக்கு செய்ததைவிட பன்மடங்கு இயேசு நமக்கு செய்து கொண்டு வருகிறார்.
நாம் ஞானஸ்தானம் பெற்று பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெற்றிருக்கிறோம்.
பச்சாத்தாபம் என்ற தேவ திரவிய அனுமானத்தின் மூலம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்துவின் திருப்பலியில் நாமும் கலந்து கொண்டு இருக்கிறோம்.
பலிப்பொருளாகிய கிறிஸ்துவையே நமது ஆன்மீக உணவாக உண்டு கொண்டிருக்கிறோம்.
வேண்டும் போதெல்லாம் நமக்கு ஆன்மீக ஆலோசனை தருவதற்காக
திரும்பும் இடமெல்லாம் குருக்கள் நிறைய பேர் நம்மிடையே இருக்கிறார்கள்.
இவ்வளவு நன்மைகளை பெற்றிருந்தும் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்?
இயேசுவிற்கு ஏற்றபடி நடந்து கொள்கிறோமா?
கொராசின், பெத்சாயிதா நகர மக்களைப் போல நமது மனதிற்கு ஏற்றபடி நடந்து கொள்கிறோமா?
நம்மை நற்செய்திப்படி வாழ வைப்பதற்காகதான்
நாம் இச்செய்தியை படிப்போம் என்பதை முன்னுணர்ந்து
அன்றே இயேசு அவ்வாறு பேசினார்.
இயேசுவின் வாக்கு அக்கால மக்களுக்கு மட்டும் அல்ல எக்கால மக்களுக்கும் பொருந்தும்.
அன்று அவர் பேசியதை இன்றும் நாம் அறிந்து நமது வாழ்க்கையில் பயன்படுத்துவதற்காகத்தான் நற்செய்தியாளர்கள் அவற்றை எழுதி வைத்திருக்கிறார்கள்.
நமது கிறிஸ்தவ வாழ்வை ஒழுங்காக வாழ்கின்றோமா அல்லது கொராசின், பெத்சாயிதா நகர மக்களைப் போல வாழ்கின்றோமா என்பதை சிந்தித்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.
ஞான ஸ்தானத்தின் போது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டது உண்மைதான்.
ஆனால் அவருடைய தூண்டுதல்களின் (Inspirations)படி நடக்கிறோமா?
பாவசங்கீர்த்தனத்தின் மூலம் பாவமன்னிப்பு இயேசு நமக்கு வாய்ப்பு தந்திருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்துகிறோமா?
நமது ஆன்மீக வளர்ச்சிக்காக இயேசு தன்னையே நமது ஆன்மிக உணவாகத் தந்திருக்கிறார். திருவிருந்தின்போது நாம் இயேசுவை உணவாகப் பெறுவது உண்மைதான்.
ஆனால் தகுந்த தயாரிப்புடன் ஆன்மாவில் பாவமாசின்றி பரிசுத்தராகிய இயேசுவை உட்கொள்கிறோமா?
ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலியில் கலந்து கொள்ள நாம் ஆலயத்திற்கு வருவது உண்மைதான்,
ஆனால் திருப்பலியில் முழு ஈடுபாட்டுடன் குருவோடு இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கிறோமா?
திருப்பலி முடிந்து நடைபெறும் ஞானோபதேச வகுப்புகளுக்கு நமது பிள்ளைகளை அனுப்புகிறோமா?
பங்கு குருவை சந்தித்து ஆன்மீக ஆலோசனைகள் பெறுகிறோமா?
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்மீக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
தேவைப்படுவோருக்கு உதவுவது உண்மைதான். ஆனால் அதை ஆண்டவரது மகிமைக்காக மட்டும் செய்கிறோமா அல்லது நமது சுய திருப்திக்காக செய்கிறோமா?
"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
நாமும் நிறைய கேட்டு பெற்றிருக்கிறோம்.
நாம் கேட்டதில் ஆன்மீக காரியங்கள் அதிகமா, லௌகீக காரியங்கள் அதிகமா என்று நினைத்துப் பார்ப்போம்.
ஆன்மீக காரியங்கள் அதிகமாக இருந்தால் நாம் விண்ணகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்று அர்த்தம்.
நாம் பெற்ற லௌகீக உதவிகளை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து அவற்றை ஆன்மீகம் காரியங்களாக மாற்றியிருக்கிறோமா?
நமக்கு வருகின்ற சிலுவைகளை பொறுமையோடு ஆண்டவருக்காக சுமந்திருக்கிறோமா?
நமது ஆன்மீக வாழ்க்கையை பற்றி சுயபரிசோதனை செய்து
எந்த அளவிற்கு ஆண்டவரின் போதனைகளின்படி வாழ்கிறோம் என்பதை கண்டுபிடித்தால்
ஆண்டவர் அவரது போதனைகளை கடைப்பிடிக்க நமக்கு தந்திருக்கும் சந்தர்ப்பங்களை எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியவரும்.
கொராசின், பெத்சாயிதா மக்கள் தங்களுக்கு கிடைத்த வாழ்க்கை சந்தர்ப்பங்களை இயேசுவின் போதனைகளை பின்பற்ற பயன்படுத்தவில்லை.
அது இயேசுவுக்கு பிடிக்கவில்லை.
நாம் இயேசுவுக்கு பிடித்த படி வாழ்கின்றோமா அல்லது கொராசின், பெத்சாயிதா மக்களைப் போல் வாழ்கின்றோமா?
சுயபரிசோதனை (Self examination of conscience) மூலம் கண்டுபிடித்து இயேசுவின் போதனைப் படி வாழ ஆரம்பிப்போம்.
ஏற்கனவே அதன்படியே வாழ்ந்து கொண்டிருந்தால் அதைத் தொடர்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment