Friday, July 9, 2021

சமூக இடைவெளி ஆன்மீக இடைவெளியாக மாறிவிடக்கூடாது.

.சமூக இடைவெளி 
ஆன்மீக இடைவெளியாக மாறிவிடக்கூடாது.

Don’t let social distancing become spiritual distancing. 


கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? சமூக இடைவெளியை அதிகமாக்குவோம்.


பாவத்திலிருந்து தப்பிக்க வேண்டுமா?
ஆன்மீக இடைவெளியைக் குறைப்போம்.


சமூக இடைவெளி குறைந்தால் நோய் தொற்றிக்கொள்ளும்.

ஆன்மீக இடைவெளி அதிகமானால் 
பாவம் தொற்றிக்கொள்ளும்.

இரண்டு மனிதர்களின் உடல்களுக்கு இடையே உள்ள இடைவெளி சமூக இடைவெளி.

நமது ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள இடைவெளி ஆன்மீக இடைவெளி.

இரண்டு மனிதர்களின் ஆன்மாக்களுக்கு இடையில் உள்ள இடைவெளியும் ஆன்மீக இடைவெளிதான்.

எவ்வளவுக்கு எவ்வளவு சமூக இடைவெளி அதிகமாகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய்தொற்று குறையும்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆன்மீக இடைவெளி குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பாவம் நெருங்காது. 

அன்பு அதிகமாக அதிகமாக ஆன்மீக இடைவெளி குறைந்து கொண்டே வரும்.

இறைவனுக்கும் நமக்கும் இடையே இடைவெளியே இல்லாத அளவிற்கு அவர் மீது நமக்கு உள்ள அன்பு அதிகரிக்க வேண்டும்.

அதாவது இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்தால் பாவம் நம்மை நெருங்காது.

நமது குறைவான அன்பின் காரணமாக நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள வெளி அதிகரிக்குமானால்,

அந்த இடைவெளியை பாவம் நிரப்பி விடும்.

யார் மீது அன்பு அதிகமாக இருக்கிறதோ அவரை நினைத்துக் கொண்டே இருப்பது மனித சுபாவம்.

இறைவனை அதிகமாக அன்பு செய்தால் நாம் அவரையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்போம்.

இறைவனையே எண்ணிக் கொண்டிருந்தால் பாவ எண்ணம் நம்மை நெருங்காது.   

இறைவனை நோக்கி ஜெபிக்கும் போதும், இறைவனை தியானிக்கும் போதும் நமது மனதில் இறைவன் மட்டுமே இருப்பார்.

இறைவன் மட்டும் நம்மோடு இருக்கும்போது அவருக்கு எதிராக எதுவும் நம்மை நெருங்காது.

பாவம்  இல்லாத இடத்தில்தான் புண்ணியம் வளரும்.

விவசாய நிலத்திற்கும், விவசாயிக்கும் இடையே இடைவெளி குறைந்தால்,

விவசாயம் செழிக்கும், அதாவது, பயிர் செழித்து வளரும், வருமானம் அதிகமாகும்.

இடைவெளி அதிகரித்தால்,

 விவசாயி ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை நிலத்தை எட்டி மட்டும் பார்த்தால்,

 நிலம் பயிரற்ற தரிசாகக் கிடக்கும்.

அவ்வாறேதான் நாம் எப்போதும்  இறைவனோடு நெருக்கமாக  இருந்தால் நமது ஆன்மாவில் புண்ணியம் என்ற பயிர் செழித்து வளரும்.

நமது விண்ணக சன்மானமாகிய வருமானம் அதிகரிக்கும்.

ஆனால் நாம் எப்போதாவது மட்டும் இறைவனை எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட்டால்

 நமது ஆன்மா புண்ணிய பயிரற்ற தரிசு நிலமாக மாறிவிடும்.

 விண்ணகத்தில் நமக்கு வருமானமும் எதுவும் இருக்காது.

இறையன்பை  நம்மில் அதிகப்படுத்துவோம்.

எதைப் பார்த்தாலும் அதில் இறைவனை பார்க்கும் அளவிற்கு அன்பை அதிகப்படுத்துவோம்.

மகன் பணியின் நிமித்தம் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டான். தாய் வீட்டில் தனியே இருக்கிறாள்.

மகனை நேருக்கு நேர் பார்க்க முடியாவிட்டாலும் வீட்டில் அவன் பயன்படுத்திய பொருட்களை பார்க்கும்போதெல்லாம் அவற்றில் மகனைக் காண்கிறாள்.

மகன் பயன்படுத்திய பொருள்களை கையில் எடுக்கும் போதெல்லாம் அவற்றுக்கு முத்தம் கொடுக்கிறாள்.

காரணம் மகன் மீது தாய்க்கு உள்ள அன்பு.

அதேபோல் தான் இறைவனால் படைக்கப்பட்ட எந்த பொருளை பார்த்தாலும், 

அதில் இறைவன் தெரியும் அளவிற்கு நமது உள்ளத்தில் அவர் மீது அன்பு இருக்க வேண்டும்.

நாம் பார்க்கும் பொருளில் இறைவனை கண்டால் அப்பொருளைத் தவறாக பயன்படுத்துவோமா?

வானத்தைப் பார்த்தால் இறைவன் தெரிய வேண்டும்.

பூமியைப் பார்த்தால் இறைவன் தெரிய வேண்டும்.

பறவைகளைப் பார்க்கும் இறைவன் தெரிய வேண்டும்.

காற்றைப் பார்த்தால் இறைவன் தெரிய வேண்டும்.

நீரைப் பார்த்தால் 
இறைவன் தெரிய வேண்டும்.

ஒளியை பார்த்தால் இறைவன் தெரிய வேண்டும்.

எதைப் பார்த்தாலும் அதில் இறைவன் தெரிய வேண்டும்.

புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு
இப்படித்தான் தெரிந்தது.

அவர் இறைவன் படைத்த இயற்கையில் இறைவனைக் கண்டார்.

பறவைகளையும், மிருகங்களையும் சகோதர சகோதரிகளாக பாவிக்கும் அளவிற்கு அவற்றில் அவர் இறைவனைக் கண்டார்.

,(He called all creatures his “brothers” and “sisters.”)

மிகப் பெரிய ஆச்சரியம் அசிசியார் இருப்பவற்றில்  மட்டுமல்ல,
 இல்லாமையிலும் இறைவனைக் கண்டார்.

இல்லாமையை, அதாவது, வறுமையை மிகவும் நேசித்தார்.

அந்த அளவிற்கு அவர் இயேசுவின் அன்பில் ஒன்றித்து வாழ்ந்தார்.

இறையன்போடு பின்னிப் பிணைந்து சேர்ந்திருப்பது நமது அயலான் மீது காட்டவேண்டிய பிறரன்பு.

பிறரன்பு இல்லாதவனிடம் இறையன்பு இருக்க முடியாது.

இறையன்பு உள்ளவனிடம் பிறரன்பு கட்டாயம் இருக்கும்.

இரண்டும் பிரிக்க முடியாதவை.

இரண்டு ஆன்மாக்களுக்கு இடையில் உள்ள நெருக்கம்தான் பிறரன்பு.


இரண்டு மனிதர்களுக்கு இடையே சமூக இடைவெளி இருக்கலாம்,

 ஆனால் ஆன்மீக இடைவெளி இருக்கக் கூடாது.

சமீபகாலமாக விடை காண முடியாத கேள்வி ஒன்று எனது மனதை அழுத்திக் கொண்டே இருக்கிறது.

நமது தீர்வை நாளில் ஆண்டவர் நம்மைப் பார்த்து,

"நான் கொரோனா நோயால் அவதிப்பட்டேன் . என்னைப் பார்க்க வந்தாயா?"

என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்?

நமது பதிலைக் கேட்டால் ஆண்டவரது எதிர்வினை (Reaction) எப்படி இருக்கும்?

அன்னை தெரசா தொழுநோய் ஒரு பயங்கரமான தொற்றுநோய் என்று தெரிந்தும்

தெருவில் கவனிப்பாரின்றி கிடைக்கும் தொழு நோயாளிகளை

கையால் தொட்டு தூக்கி வீட்டுக்குக் கொண்டு வந்து, புண்களைத் துடைத்து மருந்து போட்டார்கள்.

காரணம் தொழுநோயாளியிலும் இயேசுவை கண்டார்கள்.

நமது கண்ணுக்கு ஏன் தொற்று நோயாளியிடம் இயேசு தெரியவில்லை?

இக்கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.

Love is blind.

அன்புக்கு கண் தெரியாது என்று சொல்லுவார்கள்.

அன்புக்கு தன்னால் அன்பு செய்யப்படுகிறவன் 

நல்லவனா, கெட்டவனா, 

 நோய் இல்லாதவனா  நோயாளியா,

அழகானவனா, அசிங்கமானவனா,

 அன்புக்கு ஏற்றவனா, தகுதி அற்றவனா

 என்றெல்லாம் தெரியாது.

 அன்புக்கு அன்பு செய்ய மட்டுமே தெரியும். 

இயேசு அயலானை நேசிப்பது பற்றி என்ன சொன்னார்?

அவனுடைய தகுதியை பார்த்தா நேசிக்க சொன்னார்?

"நீ உன்னை நேசிப்பது போல  உன்னுடைய அயலானையும் நேசி,"

 என்பதுதான் ஆண்டவருடைய கட்டளை.

நம்மை நாம் எந்த அடிப்படையில்  நேசிக்கிறோம்? 

நம்மை நாம் நேசிப்பதற்கு காரணமே தேவையில்லை.

நாம் என்பதற்காகவே நம்மை நாம் நேசிக்கிறோம்.

நம்மை நாம் நேசிக்காமல் இருக்க முடியாது.

"உன்னை நீ நேசி " என்று இறைவன் கட்டளை கொடுக்கவில்லை.

ஆனால் உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானையும் நேசி என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

அயலானை நாம் ஏன் நேசிக்க வேண்டும்?

அவன் நமது அயலான், நமது சகோதரன், நம்மை படைத்த அதே விண்ணகத் தந்தையால் படைக்கப்பட்டவன் என்பதற்காக, அவனை நாம் நேசிக்க வேண்டும், 
அவனுடைய தகுதிக்காக அல்ல.

(தொடரும்)

லூர்து செல்வம்..

No comments:

Post a Comment