Wednesday, July 28, 2021

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." (மத்.12:43)

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." (மத்.12:43)


பழைய ஏற்பாட்டில் யூதர்களின் மன்னர் சாலமோன் அவரது ஞானத்திற்கு பெயர் போனவர்.

தனது அறிவை அல்லது அனுபவத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவனை ஞானம் உள்ளவன் என்போம்.

சிலரிடம் அறிவும் (Knowledge) அனுபவமும்  (Experience) நிறைய இருக்கும்.

ஆனால் அவற்றை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தத் தெரியாது.

அவர்களது அறிவாலும் அனுபவத்தாலும் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

அப்படிப்பட்டவர்களை ஞானம் இல்லாதவர்கள் என்போம்.

சாலமோனிடம் அறிவுடன் ஞானமும் நிறைய இருந்தது.

ஞானம் மிகுந்த அவனை பார்க்க உலகின் எல்லையிலிருந்து தென்னாட்டு அரசி வந்தாள்.

இயேசு கடவுள். அளவற்ற ஞானம் உள்ளவர்.

இறைவனின் ஞானத்தோடு மனிதனுடைய   ஞானத்தை ஒப்பிட முடியாது.
 
மனிதன் துவக்கமும் முடிவும் உள்ள  காலத்தில் (Time) வாழ்கின்றவன்.

இறைவன் துவக்கமும் முடிவும் இல்லாத  நித்தியத்தில் (Eternity) வாழ்பவர்.

மனிதன் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போது அவனிடம் அறிவு (Knowledge) கொஞ்சம் கூட கிடையாது.

உற்பவித்த பிறகுதான் தாயின் அறிவு குழந்தைக்கு தெரியாமலேயே அதன் மூளையில் பதிய ஆரம்பிக்கிறது.

குழந்தை பிறக்கும்போது அதன் பெற்றோர் யாரென்றே அதற்குத் தெரியாது.

வளர வளரத்தான் அது நேரடியாக அறிவை சேகரிக்கிறது.

கிடைத்த அறிவை பயன்படுத்தும் ஞானத்தையும் அது வளர வளரத்தான் கொஞ்சம் கொஞ்சமாக பெறுகிறது.

பெற்ற அறிவை சரியாக பயன்படுத்த தெரியாதவனிடம் ஞானமே இருப்பதில்லை.


பெற்ற அறிவை சரியாகப் பயன்படுத்துதல் என்றால் என்ன?

ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த  ஒரு மாணவர் அங்கு அவர் பெற்ற அறிவை எதற்குப் பயன்படுத்த வேண்டும்?

ஒரு நல்ல ஆசிரியராகப் பணி புரிவதற்கு.

ஒரு சமையல் பயிற்சி பள்ளியில் பயின்ற ஒரு  மாணவர் அங்கு அவர் பெற்ற அறிவை எதற்குப் பயன்படுத்த வேண்டும்?

ஒழுங்காக சமைப்பதற்கு.

இவ்வுலகில் பிறந்த நாம் பெற்ற அறிவை எதற்கு பயன்படுத்த வேண்டும்?

இவ்வுலகில் நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றோமோ அந்த நோக்கத்தை அடைய பயன்படுத்த வேண்டும்.

அதாவது கடவுளை அறிந்து, அவரை நேசித்து, அவருக்குப் பணிபுரிந்து விண்ணரசில் நுழைவதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

ஒருவன் இந்த நோக்கத்திற்காக 
தான்  பெறுகின்ற அறிவை பயன்படுத்தாவிட்டால் அவன் ஞானம் இல்லாதவன்.

அவன் பெற்ற அறிவு அவனுக்கு பயன்படாத அறிவு.

இயற்கையை பற்றி படித்து அதில் Phd. பட்டம் பெற்ற ஒருவன், இயற்கையை படைத்தவர் இறைவன் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அவனது Phd. பட்டம் utter waste!

இயற்கையை நேசிக்கும் ஒருவனால் அதை படைத்த இறைவனை நேசிக்க தெரியாவிட்டால் அவனது இருதயம் waste!

மனிதாபிமானத்தைக் கொடுத்த அறிவால் இறையன்பை கொடுக்க முடியாவிட்டால் அவனது அறிவு waste!



விவிலியத்தைத்  தினமும் வாசிக்கும் ஒருவனால் இறை வாக்கின்படி வாழத் தெரியாவிட்டால் அவனது வாசிப்பால் என்ன பயன்?

விவிலியத்தைப் பற்றிய அறிவு மட்டும் வளரும்.

வாழப் பயன்படாத அறிவு செத்தவன் வாயில் இருக்கும் உணவு!

அவனுக்கும் பயன்படாது !

 அடுத்தவருக்கும் பயன்படாது!

இறை பயமே ஞானத்தின் துவக்கம்!

இறைவன் மனதை நோகச் செய்ய பயப்படுபவன் இறைவனது கட்டளைகளின் வழி வாழ்வான்.

அதாவது இறைவனையும் நேசிப்பான், அயலானையும் நேசிப்பான்.

இறைவனுக்கும் பணி புரிவான்.
அயலானுக்கும் பணி புரிவான்.

அவனே ஞானம் உள்ளவன்!

நமது அன்னையை 

"ஞானம் நிறை கன்னிகையே" என்று அழைக்கிறோம்.

ஏனெனில் அவள் இறைவனுக்கு அடிமையாய் பணிபுரிந்தாள்!

தாயைப் போல பிள்ளைகள் விளங்க வேண்டாமா?


மனிதன் இயல்பிலேயே அளவு உள்ளவன். ஆகவே அவன் பெறும் அறிவும் ஞானமும் முழுமையாக இருப்பதில்லை.

அனுபவத்தின் மூலமும், அறிவின் மூலமும், ஞானத்தில்  
வளர்ந்து கொண்டேயிருப்பவன்தான் மனிதன்.


ஆனால் கடவுள் அளவில்லாத ஞானம் உள்ளவர்!

அவரது எல்லா பண்புகளுமே அளவில்லாதவைதான்.
 
அவருக்கு  துவக்கமும் முடிவும் இல்லை. ஆகவே 
அவரது அறிவும் ஞானமும் துவக்கம் இல்லாத காலத்திலிருந்தே (From eternity) முழுமையாக இருக்கும்.

 அவருக்கு தன்னை பற்றியும்  முழுமையாக தெரியும்.

 தனது படைப்புகளைப் பற்றியும்  முழுமையாக தெரியும்.

அவர் நித்தியர், அவரது ஞானமும் நித்தியமானது.

அதாவது துவக்கமும் முடிவும் அற்றது.

நித்தியராகிய கடவுள் தனது படைப்புகளை காலத்தில் படைத்தார்.

அதாவது அவரது படைப்புகளுக்கு துவக்கம் உண்டு.

இயற்கையைப் படைத்த கடவுள் அது இயங்குவதற்கான விதிகளையும்  படைத்தார்.

அவர் உருவாக்கிய விதிகளின்படிதான்  இயற்கையின் ஒவ்வொரு பொருளும் இயங்குகிறது.

இயற்கை விதிகள் மாறாமல் இருப்பதால்தான் விஞ்ஞானம் சாத்தியமாகிறது.

மனித உடல் இயற்கை பொருட்களால் ஆனது, ஆகவே இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டது.

ஆனால் மனித ஆன்மா   இறைவனின் சாயலில் படைக்கப்பட்டது.

சிந்தனை செயல் சுதந்திரம் உட்பட தனது அனைத்து பண்புகளையும் மனித ஆன்மாவுடன் பகிர்ந்து கொண்டார்.

சிந்திக்கவும் செயல்படவும் மனிதனுக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்திருக்கிறார்.

மனித சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிடுவது இல்லை.

ஆனாலும் மனிதன் பின்பற்றவேண்டிய கட்டளைகளை இறைவன் அவனுக்கு கொடுத்திருக்கிறார்.

தனது முழு சுதந்திரத்தை பயன்படுத்தி மனிதன் இறைவனது கட்டளைகளின்படி வாழ வேண்டும்.


இறைவனது கட்டளைகளின்படி வாழும் மனிதனுக்கு நிலைவாழ்வை பரிசாக அளிக்கிறார்.

 தனக்கு அளிக்கப்பட்டிருக்கும்  சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி இறைவனது கட்டளைகளை மீறி வாழும் மனிதருக்கு நிலைவாழ்வு இல்லை.

மனிதன் தனது சுதந்திரத்தை எப்படி பயன்படுத்தி வாழ்வான் என்பது நித்திய காலமாகவே இறைவனுக்குத் தெரியும்.

மனிதனை படைப்பதற்கு இறைவன் நித்திய காலமாக திட்டமிடும்போதே அவன் பாவம் செய்வான் என்பது அவருக்கு தெரியும்.

ஆகவேதான் மனிதனாகப் பிறந்து மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்பதென்றும் இறைவன் நித்திய காலமாகவே இறைவன் திட்டமிட்டு விட்டார்.

மனுக்குலத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி நாள் வரை வாழும் கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒவ்வொரு மனிதனும் எப்படி இயங்குவான் என்பது இறைவனுக்கு நித்திய காலமாகவே தெரியும்.

அவரது அறிவு (Knowledge) எல்லையற்றது.

அதன் அடிப்படையிலும்,

தனது எல்லையற்ற அன்பின் அடிப்படையிலும்

 அளவற்ற ஞானத்துடன் மனுக்குலத்தை இறைவன் பராமரித்து வருகிறார்.

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment