Sunday, July 18, 2021

"மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்"  (மாற்கு, 2:28)

"மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்"  (மாற்கு, 2:28)

உலகத்தின் படைப்பின்போது கடவுள்  "ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்" என்ற இறைவாக்கை அடிப்படையாகக் கொண்டு

 யூதர்கள் ஒவ்வொரு வாரமும் ஏழாம் நாளை ஓய்வு நாளாக 
அனுசரித்தார்கள் .

ஒவ்வொரு இறைவார்த்தையிலும்  ஒரு இறைச்செய்தி அடங்கியிருக்கும்.

செய்திதான் (Message) முக்கியமே அன்றி வார்த்தைகள் அல்ல.

பரிசேயர்கள் இந்த இறை வாக்கில் அடங்கி இருக்கும் இறைச் செய்தியை எந்த அளவுக்கு புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை.

ஆனால் அவர்கள் நடந்துகொண்ட முறையைப் பார்த்தால் தெரிய வேண்டிய செய்தியை சரியாக தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

ஏனெனில் அவர்கள் மற்ற நாட்களைப் போலவே 

ஓய்வு நாளிலும் இயேசுவின் செயல்களில் குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே அவர் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தார்கள்.

குற்றம் கண்டு அதனடிப்படையில் அவரைக் கொல்வதுதான் அவர்களது திட்டம்.

இறைமகனை கொல்வதற்காக வழி தேடுவதற்காக ஓய்வு நாள் படைக்கப் படவில்லை என்பது உறுதி.

ஆகவே எதற்கெடுத்தாலும் சட்டத்தையே சுட்டி காண்பிக்கும் பரிசேயர்கள் 

சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் அவர்களது செயல்கள் காண்பிக்கின்றன.

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்ற இறை வாக்கின் கருத்தை  அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

எப்படி இரக்கம்  கலவாத பலியை இறைவன் விரும்பவில்லையோ

 அதேபோல இரக்கம் கலவாக சட்டத்தையும் இறைவன் விரும்பவில்லை.

இரவு பகல் முழுவதும் இறைமகன் கூடவே இருந்த சீடர்களின் பசியின் மேல் இரக்கம் கொள்ளாத பரிசேயர்கள் 

கோதுமை மணிகளை  கசக்கித் தின்ற செயலில் உள்ள சட்டத்தை மட்டுமே பார்த்தார்கள்.

இரக்கச் செயல்களில் குறுக்கே சட்டம் வரக்கூடாது.

"உங்களுள் ஒருவனுடைய மகனோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வுநாளென்றாலும் உடனே அவன் தூக்கிவிடமாட்டானோ?"
(லூக்.14:5)

என்று இயேசுவே பரிசேயர்களிடம் கேட்டிருக்கிறார்.

இயேசு இரக்கத்தின் ஆண்டவர்.

அவர் சொல்கிறார்,

"மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்று.

ஓய்வு நாள் மனுமகனின் நாள் என்றாலே அது இரக்கத்தின் நாள் என்பதுதான் பொருள்.

அதாவது அது படுத்து தூங்கி ஓய்வு எடுக்க வேண்டிய நாள் அல்ல.

சுறுசுறுப்பாக இரக்கத்தின் செயல்களை செய்ய வேண்டிய நாள்.

இரக்கத்தின் செயல்களுக்காகவே ஒதுக்கப்பட்ட நாள்.

மனுக்குலத்தின் மீது இறைமகன் கொண்ட அளவற்ற இரக்கத்தின் காரணமாகவே 

அவர் மனுமகன் ஆகி 

பாடுகள் பட்டு, 

தன்னையே சிலுவை மரத்தில் பலியாக ஒப்புக்கொடுத்தார்.

அந்த இரக்கத்தின் பலியைத்தான்  
நாம் குருவானவர் நிறைவேற்றும் திருப்பலியில் நினைவு கூறுகிறோம்.

நமது ஓய்வு நாளாகிய ஞாயிற்றுக்கிழமையை இரக்கத்தின் நாளாக அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 

இறைமகனின் இரக்கத்தை நினைவுகூரும் திருப்பலியில் காலையில் கலந்து கொண்டு 

இரக்கத்தில் நாளாகிய ஓய்வுநாளை ஆரம்பிக்கிறோம்.

ஆண்டவர் அறிவித்த நற்செய்தியின் ஒவ்வொரு வாக்கிலும் அவரின் இரக்கம் அடங்கி இருக்கிறது.

இறை இரக்கத்தின் வெளிப்பாடுதான் இயேசுவின் நற்செய்தி.

நற்செய்தி என்றாலே இரக்கத்தின் செய்திதான்.

ஆண்டவர் தனது சீடர்களை நோக்கி சொன்ன,

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,"
(மாற்கு, 16:15,16)

என்ற வாக்கைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும்:

உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவிப்பதன் நோக்கம், "மீட்பு."

மீட்பு இறை இரக்கத்தின் செயல்.
இறைவனின் இரக்கம் இன்றி நம்மால் மீட்பு பெற இயலாது.

இறைவனின் இரக்கப் பெருக்கத்தால்தான் நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெறுகிறோம்.

 மன்னிப்பு பெருவதால்தான் மீட்புப் பெறுகிறோம்.

ஆகவே, ஞாயிற்றுக்கிழமை வாசிக்கப்படும் நற்செய்தி வாசகங்களும், குருவானவர் அளிக்கும் விளக்கமும் 

அன்று நாம் செய்யவேண்டிய இரக்கக் செயல்களைத்தானே நோக்கமாக கொண்டவை.

இரக்கத்தின் செய்தியையும் கேட்டுவிட்டு,

இரக்கத்தின் பலியிலும் கலந்து விட்டு,

இரக்கத்தின் ஆண்டவரையே உணவாக உண்டுவிட்டு 

அன்று இரக்கச் செயல்களே இல்லாமல் நாம் நடந்து கொண்டால் 

அன்றைக்கு திருப்பலியில் கலந்து கொண்டதால் நாம் எந்த பயனும் அடையவில்லை.

குளிக்கும் முன்பு இருந்த அழுக்கு குளித்த பின்னும் அப்படியே இருந்தால் குளித்து என்ன பயன்?

இரக்கத்தில் நாளை எப்படி அனுசரிப்பது?

நமது சிந்தனையிலும் சொல்லிலும் இருக்கும் இரக்கம் அன்று செயல்களாக உருப்பெற வேண்டும்.

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.
36 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைப்  பார்க்க வந்தீர்கள். சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் " 
(மத்.25:35, 36)

நாம் செய்யவேண்டிய இரக்கச் செயல்களில் சிலவற்றைக் ஆண்டவரே குறிப்பிட்டுக் காண்பித்திருக்கிறார். 

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது,

(வீட்டில் பசியாய் இருக்கும் மனைவி மக்களுக்கு பிரியாணி உணவு போடுவதைப் பற்றி
 ஆண்டவர் சொல்லவில்லை.

பசியாய் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு போடக்கூடிய உணவைப் பற்றி ஆண்டவர் சொல்லுகிறார்)

தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது,

முன் பின் தெரியாதவர்களை வரவேற்று உபசரிப்பது,

ஆடை இல்லாத ஏழைகளுக்கு ஆடை கொடுப்பது,

நோயாளிகளை விசாரித்து ஆறுதல் சொல்வது,

சிறையில் இருப்பவர்களை சென்று பார்ப்பது 

என்று ஒரு சில உதாரணங்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் நாம் செய்யக்கூடிய நற்செயல்கள் ஏராளம் இருக்கின்றன.

அவற்றில் நம்மால் இயன்றவற்றை ஆண்டவருக்காக ஓய்வுநாளில் செய்ய வேண்டும்.

இவ்வுதவிகள் சட்டங்களுக்கு அப்பாற்பட்டன.

சமீபத்தில்  மறை சாட்சியாக மரித்த 
அருள்திரு ஸ்டேன் சுவாமி அடிகளார் நாட்டின் சட்டங்களை மீறித்தான்   ஆதிவாசிகளுக்கு உதவியாக இருந்தார்.


பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம்.

பள்ளிக்கூட  ஒழுங்கின் படி காலை ஒன்பது மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும்.

வரும் வழியில் முன்பின் தெரியாத ஒரு   ஆள் வழியில் மயங்கி கிடக்கிறார்.

அவருக்கு முதலுதவி செய்துவிட்டு செல்வது  இரக்கத்தின் செயல்.

ஆனால் இரக்கப்பட்டு அந்த ஆளுக்கு உதவி செய்துவிட்டு பள்ளிக்கூடம் போனால்

பள்ளிக்கூட ஒழுங்கை மீறி பிந்தி போக வேண்டியிருக்கும்.

இரக்கத்திற்காக ஒழுங்கை மீறினாலும், 

அதற்காக பள்ளிகூடத்தில் தண்டனை கிடைத்தாலும் கடவுளுக்காக ஒழுங்கை மீறி உதவி செய்யத்தான் வேண்டும்.

இரக்கத்திற்காக செய்யும் செயல் ஆண்டவருக்காக செய்யும் செயல்.
'
மனிதர்கள் மீது இரக்கம் காட்டுபவர் மேல் இறைவனும் இரக்கம் காட்டுவார்.


"இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்." (மத். 5:7)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment