Sunday, July 18, 2021

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்"  (மத்.12:7)

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்"  (மத்.12:7) 

", ஏன் தம்பி, கொஞ்ச   நாளா பூசைக்கு வந்தது மாதிரியே தெரிய வில்லை, என்ன காரணம்."

"ஆண்டவர்தான் காரணம்."

", நீ பூசைக்கு வராததற்கு ஆண்டவர்தான் காரணமா?

  உன்னிடம்  வந்து இனிமேல் பூசைக்கு போகாதே என்று சொன்னாரா?"

"ஆமா. பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்  என்று
ஆண்டவர் தானே சொன்னார்!"

",ஆண்டவர் தன்னையே தந்தைக்கு சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததைத்தானே திருப்பலியின் போது நினைவு கூறுகிறோம்!

பைபிளை வாசித்துவிட்டு இறைவார்த்தையை தப்புத்தப்பாக புரிந்து கொள்வதுதான் உங்கள் வேலையா?"

"பலியை அன்று என்று சொன்னாரா இல்லையா?"

",உனது அப்பா எப்போதாவது உனக்கு செலவுக்கு பணம் தந்திருக்கிறாரா? "

"தந்திருக்கிறார்."

", அன்புடன் தந்திருக்கிறாரா?
அல்லது திட்டிக்கொண்டே தந்திருக்கிறாரா?"

"அன்புடன்தான் தந்திருக்கிறார்.
திட்டிக்கொண்டே  தந்தால் பணத்தை நான் வாங்க மாட்டேன்."

", ஏன்?"

"நான் என்னுடைய தந்தையிடமிருந்து அதிகமாக  எதிர்பார்ப்பது அவருடைய அன்பைத்தான். அன்பிற்கு  அடையாளம்தான் அவர் தருகின்ற பணம். 

நான் ஆசைப்படுவது தந்தையின் அன்பிற்குத்தானேயொழிய பணத்திற்கு அல்ல."

",திரும்ப சொல்லு."

"நான் ஆசைப்படுவது தந்தையின் அன்பிற்குத்தானேயொழிய பணத்திற்கு அல்ல."

", இப்போ ஆண்டவர் சொன்னதை சொல்லு."

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்"

", நீ அப்பா பணம் தரும் போது வாங்கி கொள்கிறாய். ஆனால் அன்பு இல்லாமல் பணத்தை தந்தால் வாங்க மாட்டாய்.

இப்போ ஆண்டவர் சொல்வது புரிகிறதா?"

"இப்போ புரிகிறது.

ஆண்டவர் பலியை வேண்டாம் என்று சொல்லவில்லை,

 இரக்கத்தோடு செலுத்தப்படாத பலியை விரும்பவில்லை என்று சொல்கிறார். சரியா?"

'',ஆண்டவரது சிலுவைப் பலி எப்படி பட்டது?"

"புரிகிறது. மனுக்குலத்தின் மீது அவர் கொண்டிருந்த இரக்கத்தின் விளைவுதான் சிலுவைப் பலி.

ஆகவே அது இரக்கத்தின் பலி, இரக்கத்தோடு கூடிய பலி.

ஆகவே இறை தந்தைக்கு பிடித்தமான பலி."

",இனி திருப்பலிக்கு வருவாயா?"

"கட்டாயம் வருவேன்."

",ஆண்டவர் எந்த சூழ்நிலையில்

'பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்றுசொன்னார்?"

" ஆண்டவர் தனது சீடர்களோடு   ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்றார். 

அவருடைய சீடர்களுக்குப் பசியெடுக்க, அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.

சீடர்கள் பசியின் காரணமாக கதிர்களைக் கொய்து  தின்றதை ஓய்வுநாளை மீறுவதாக குற்றம் சாட்டினார்.

அவர்கள் பசியோடு இருந்த சீடர்கள் மீது இரக்கம் காட்டாமல் சட்டத்தை மட்டும் சுட்டிக் காண்பித்தார்கள். 

ஆண்டவர் இரக்கத்திற்கு முதல் இடம் கொடுப்பவர்.

மனிதர்கள் அவருக்கு விரோதமாக பாவங்கள் செய்திருந்தாலும் சட்டப்படி அவர்களை தண்டியாமல், இரக்கப்பட்டு 

அவர்கள்  பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக அவரே பாடுகள்  படுவதற்காக மனுவுரு எடுத்தார்.

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே"
(அரு. 3:17)

இரக்கமே இல்லாத சட்டத்தினால் மனிதருக்கு எந்த பயனும் இல்லை.

பரிசேயர்கள் சட்டத்தைக் காரணம் காட்டி குற்றமற்ற சீடர்களை குற்றம் சாட்டிய சூழ்நிலையில்தான்

  'இயேசு பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகின்றேன்' என்பதன் கருத்தை பரிசேயர்கள் புரிந்து கொள்ளவில்லை என்கிறார்.

புரிந்து கொண்டிருந்தால் குற்றமற்றோரைக் கண்டனம் செய்திருக்கமாட்டார்கள்.

இயேசு இரக்கத்தின் காரணமாக
பரிசேயரின் முன்னிலையிலேயே 
நோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறார்.

இரக்கம் அன்பிலிருந்து பிறந்தது. இறைமகன் அன்பே உருவானவர்.

எப்படி அன்பு செய்வது அவரது இயல்போ அதே போல் தான் இரக்கப்படுவதும் அவரது இயல்பு.

இரக்கத்தின் காரணமாகவே விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தார்.


இரக்கத்தின் காரணமாகவே காலில் கண்ணீர் விட்டு அழுத பாவியை மன்னித்தார்


இரக்கத்தின் காரணமாகவே
அவரது மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.


இரக்கத்தின் காரணமாகவே
மனம் திரும்பிய திருடனையே மன்னித்து ஏற்றுக்கொண்டார். 

இரக்கத்தின் காரணமாகவே
அவரை கைது செய்ய வந்த பகைவனின் வெட்டப்பட்ட காதை இயேசு ஒட்ட வைத்தார்.


இரக்கத்தின் காரணமாகவே அவரை மூன்று முறை மறுதலித்த இராயப்பரையே மன்னித்தார்.

இரக்கத்தின் காரணமாகவே நமக்காக அடிபட்டு, மிதிபட்டு, உதை பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, உயிரையும் பலியாக்கினார்.


நம்மீது அவருக்கு உள்ள இரக்கத்தின் காரணமாகவே திவ்ய நற்கருணைப் பேழையில்  இரவு பகலாய் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இரக்கத்தின் காரணமாகவே பாவசங்கீர்த்தனம் மூலம் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

இரக்கத்தின் காரணமாகவே
 தன்னையே நமக்கு ஆன்மீக உணவாகத் தருகிறார்.

 நாமும் நமது அயலானுடன் உள்ள உறவில்  இரக்கத்திற்கு முதலிடம் கொடுப்போம்.

பசித்தவர்களுக்கு உணவு கொடுப்போம்.

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்போம்.
 
நோயுற்றோருக்கு ஆறுதல் சொல்லுவோம்.

   நமது வாழ்நாள் முழுவதும் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் இரக்கமே ஆட்சி புரிவதாக.

யார் குற்றவாளி என்று தீர்ப்புக் கூற நமக்கு அதிகாரம் இல்லை.

 ஆனால் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் அவர்மேல் இரக்கப்பட நமக்கு முழு உரிமையும் கடமையும் இருக்கிறது.

கீழே விழுந்து கிடப்பவர்களை இரக்கத்துடன் தூக்கி விட வேண்டுமே தவிர 

அவர்கள் விழுந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்க கூடாது.

உலகத்தை ஆட்சி செய்வதற்கான உரிமை சட்டத்தை விட இரக்கத்திற்கே அதிகம் உள்ளது.

இரக்கமற்ற சட்டத்திற்கு தண்டிக்க மட்டுமே தெரியும்.

இரக்கத்திற்கு மன்னிக்க மட்டுமே தெரியும்.

இயேசு உலகிற்கு வந்தது பாவிகளை தீர்ப்பிடுவதற்கு அல்ல, அவர்களை  மீட்கவே, அதாவது பாவங்களை மன்னிக்கவே.

இரக்கம் உலகை ஆட்சி செய்தால் அனைவரது வாழ்க்கையும் ஏற்றம் பெறும். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment