Sunday, July 25, 2021

புனிதர்களாய் வாழ்வது மிக எளிது!

புனிதர்களாய் வாழ்வது மிக எளிது!
**********************************

"சீக்கிரம் டீயைக் குடிங்க. உங்ககிட்ட முக்கியமான கேள்வி ஒண்ணு கேட்கவேண்டியிருக்கு."

"கேள்வியை முதல்ல கேளு, டீயை அப்புறமா குடிச்சிச்கிடலாம்."

"இல்ல இல்ல,  டீயை முதல்ல குடிங்க, அல்லது ஆறிப்போயிடும்."

..."இங்க பாரு, சுடச்சுட குடிச்சாலும் குடித்தபின் ஆறித்தான் போயிடும். கேள்வியை முதல்ல கேளு."

"நம்ம கோயில் திருவிழா இறுதித் திருப்பலியில பிரசங்கம் வச்ச சாமியார் என்ன சொன்னாரு?"

..."ஏண்டி, திருவிழா முடிஞ்சி ஒன்றரை மாதம் ஆகுது. நீ இப்போ கேட்கிற!

அந்தோனியார் மேல உண்மையான பக்தி உள்ளவங்க அவரைப் போலவே புனிதர்களாக மாற வேண்டும்னு சொன்னாரு. சரியா?"

"Correct. இப்போ என் கேள்வி,

'நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவர் அளவிற்கு புனிதர்கள் ஆக முடியுமா?' "

..."அதாவது கோடிக்கணக்கில் புதுமைகள் செய்யும் அளவிற்கு, அப்படித்தானே?"

"ஆமா."

..."அப்படீன்னா நீ  சாமியார் சொன்னத சரியா புரிந்துகொள்வில்லை."

"நாம் புனிதர்மேல் பக்தி வைத்திருப்பது வெறுமனே நமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மட்டுமல்ல,

நாமும் அவர்களது வாழ்க்கை முறையைப் பின்பற்றி அவர்களைப்போல புனிதர்களாக மாறுவதற்காகவே

என்றுதான் சொன்னார்.

'அவர்களைப்போல புனிதர்களாக மாறுவதற்காக' என்பதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்கமுடியும்?"

..." 'எங்க அம்மாவைப் போல நானும் ஒரு டீச்சர்'னா என்ன அர்த்தம்?"

" 'எங்க அம்மா ஒரு டீச்சர், நானும் ஒரு டீச்சர்'னு அர்த்தம்."

..."அதே மாதிரிதான் சாமியார் சொன்னதன் அர்த்தம்,

'அந்தோனியார் புனிதராய் வாழ்ந்தார், நாமும் புனிதராய் வாழவேண்டும்' என்பதுதான்.

அவரது புனிதத்துவத்தின் அளவை (Degree of his holiness) எய்தினால்தான் நாம் புனிதர் என்று அர்த்தல்ல.

மாதாமீது எவ்வளவு பக்தி வைத்திருந்தாலும் அவளதுபுனிதத்துவத்தின் அளவை நம்மால் எட்ட முடியுமா?

மோட்சத்தில் வாழும் எந்தப் புனிதரும் அவள் அளவுக்கு புனிதத்தில் உயரவில்லை.

ஆகவேதான் மற்ற புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாம்

மாதாவுக்கு விசேச வணக்கம்  செலுத்துகிறோம்."

" புனிதத்தின் அளவு என்று கூறுகிறீர்களே, அது சடப்பொருள் இல்லையே, அளப்பதற்கு.

எதை வைத்து அதை அதிகம், குறை என்று வித்தியாசப்படுத்துகிறோம்? "

..."நீ கேட்பது சரிதான்.
நாம் பயன்படுத்தும் அளவுகோல்கள், அவற்றைக் குறிக்கும் வார்த்தைகள் எல்லாம் சடப்பபொருள் சம்பந்தப்பட்டவை என்பது உண்மை.

சடப்பொருள் (Matter)
சம்பந்தப்பட்ட வார்த்தைகளை ஆன்மீக (spiritual) காரியங்களை அளக்க பயன்படுத்த முடியாது என்பதும்
உண்மை.

ஆனாலும் மனிதர்களாகிய நமக்குத் தெரிந்தது Human language மட்டும்தானே.

ஆகவே வேறு வழி இல்லாமல் ஆன்மீகக் காரியங்களைக் குறிக்கவும் நமக்குத் தெரிந்த மொழியைப் பயன் படுத்துகிறோம்.

உதாரணத்திற்கு,

இரண்டு ஆன்மாக்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பை குறிக்க 'அன்பு' என்ற மனித மொழியைப் பயன்படுத்துகிறோம்.

அந்த ஆன்மீக ஈர்ப்பை உணரத்தான் முடியும்,  பார்க்க முடியாது.

அறிமுகமானவர்கட்கு இடையே நிலவும் அன்பு,

நண்பர்களிடையே நிலவும் அன்பு,

உறவினர்களுக்கு இடையே நிலவும் அன்பு,

உடன் பிறந்தோர்களுக்கு இடையே நிலவும் அன்பு,

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நிலவும் அன்பு,

கடவுளுக்கும் நமக்கும் இடையே நிலவும் அன்பு

இவை எல்லாம் அளவில் வித்தியாசமானவையா? இல்லையா? "

"வித்தியாசமானவை."

..."அளவு என்றாலே ' அதிகம், குறைவு' என்ற வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்து விடும்.

அதிக அன்பு, குறைந்த அன்பு இரண்டும் உணரப்படக்கூடியவை,

வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படக் கூடியவை அல்ல.

நமது  அன்பை நாம்தான் உணர முடியும்.

அடுத்தவர் அன்பை அவர்தான் உணரமுடியும்.

அப்படியிருக்க யாருடைய அன்பு அதிமானது என்று நம்மால் எப்படிக் கணக்குப் பார்க்க முடியும்?"

" அன்பு செயலில் வெளிப்படும்.

செயலில் வெளிப்படாத அன்பு செத்த அன்பு."

..."கரெக்ட்.

ஒரு கணித ஆசிரியர் மாணவர்களிடம் வெற்றுக் கணத்திற்கு ( Null set) உதாரணம் சொல்லச்
சொன்னார்.

ஒரு பையன் சொன்னான், 'செயலில்லா அன்பு.' "

"கரெக்ட்,  எப்படி 'உயிருள்ள பிணம்' இருக்க முடியாதோ அதே போல் 'செயலில்லா அன்பு'ம் இருக்க முடியாது."

..."விசயத்துக்கு வருவோம்.

அன்னை மரியாள் இயேசுவின்மேல்  கொண்டிருந்த அன்பிற்கும்,

நாம் அவர்மேல் கொண்டிருக்கும் அன்பிற்கும்

அளவில் வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா? "

"அது தாய்க்கும் மகனுக்கும் இடையே நிலவும் அன்பு.

நிச்சயமாக மாதா மகனை நேசித்த அன்பிற்கு ஈடாக எந்த மனிதனாலும் இயேசுவை அன்பு செய்ய முடியாது.

அது ஈடு, இணையற்ற அன்பு."

...'இப்போ புனிதத்துவத்துக்கு வருவோம்.

புனிதத்துவத்துக்கு அடிப்படை இறைவனுக்கும் நமக்கும் இடையே நிலவும்  அன்புறவுதான்.

அந்த அடிப்படையில் மாதாவை மிஞ்ச யாராலும் முடியாது.

ஒவ்வொரு புனிதரும் இறைவன்மேல் கொண்டிருக்கும் அன்பின் அடிப்படையில் புனிதத்துவத்தின்  அளவு மாறும்.

ஆனால் புனிதர்களின் புனிதத்துவத்தை அளப்பது நம்மால் முடியாது, அது நமது வேலையும் அல்ல.

நாம் இறைவன்மீது கொண்டுள்ள அன்பின் அடிப்படையில் புனிதர்களாக வாழ வேண்டும்."

"நீங்கள் சொல்வதைக் கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது.

ஆனால் புனிதர்களாக வாழ்வது அவ்வளவு எளிதான காரியமா? "

..."அதாவது அன்பு செய்வது அவ்வளவு எளிதான காரியமா
என்று கேட்கிறாய்.

அன்பின் உருவான இறைவனால், அவரது அன்பின் காரணமாகவே நாம் படைக்கப்பட்டிருப்பதால் இயல்பாகவே அன்பு செய்வது நமக்கு மிக எளிது.

இறைவன் நம்மைப் படைத்திருப்பதே அவரை அறிந்து, நேசித்து, சேவை செய்து, அவரோடு நித்தியமாக வாழ்வதற்காகத்தான்."

"அதாவது ஒரு பொருளை Design செய்கின்றவர் 

அது எந்த நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறதோ

அந்நோக்கம் நிறைவேறும் வகையில்தான் செய்திருப்பபார்.

உதாரணத்திற்கு ஒரு கார் ஓடுகிறது என்றால்,  அது அந்நோக்கத்தோடு செய்யப்பட்டிருப்பதால்தான்.

அது பறப்பதற்காகவும் செய்யப்பட்டிருந்தால், பறக்கவும் செய்யும்."

..."கரெக்ட்.  மனிதன் நேசிப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறான்.

ஆகவே நேசிப்பதுதான் அவனுக்கு மிக எளிய செயல்.

ஆகவே இறையன்பிற்கு எதிரானவற்றை விலக்கி விட்டு அவரை நேசித்தாலே அவன் புனிதன்தானே!

உண்மையில் பாவியாக வாழ்வதைவிட புனிதனாக வாழ்வதுதான் எளிது."

"அதெப்படி. பாவி அவன் இஸ்டப்படி வாழ்கிறான்.

புனிதன் கட்டளைகட்குக் கட்டுப்பட்டு வாழ்கிறான்.

கட்டுப்பட்டு வாழ்வதைவிட இஸ்டப்படி வாழ்வதுதானே எளிது."

..."சம்பளத்திற்கு வேலை பார்ப்பது எளிதா?  முதலாளியாய் இருப்பது எளிதா?"

"சம்பளத்திற்கு வேலை பார்ப்பதுதான் எளிது."

..."ஏன்?"

"முதலாளி முதல் போட வேண்டும்.

அடுத்து போடப்பட்ட முதல் குறையாமல் வளர திட்டங்கள் தீட்டவேண்டும்.

திட்டங்களை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

நிறைவேற்றுவதில்  பிழை ஏற்பட்டால் முதல் போய்விடும்.

ஆனால் வேலைக்காரன் முதல் போட வேண்டியதில்லை.

திட்டங்கள் தீட்ட வேண்டியதில்லை.

முதலாளி சொல்வதைச் செய்தால் போதுமே!

ஆகவே சம்பளத்திற்கு வேலை பார்ப்பதுதான் எளிது!"

..."புனிதனைப் பொறுத்தமட்டில் முதல் போடுபவர் கடவுள்.

புனிதன் கடவுள் சொன்னதைச் செய்தால் போதும்.

புனித சூசையப்பரைப் பார். அவர் கடவுள் சொன்னதை அப்படியே செய்தார். நீதிமான் ஆனார்.

'மரியாளை ஏற்றுக்கொள்."

'ஏற்றுக்கொள்கிறேன்.'

'குழந்தையையும், தாயையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்குப் போ.'

'போகிறேன்.'

'எகிப்திலிருந்து திரும்பி வா.'

'வருகிறேன்.'

'நசரேத்துக்குப் போ.'

'போகிறேன்.'

Blind obedience to God's words!

மாதாவைப் பார்.

'இதோ ஆண்டவரின் அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது.'

Total surrender to the will of God!

அடிமையின் வேலையே சொன்னதைச் செய்வதுதான்!

தன்னையே இறைவனின் அடிமையாக ஆக்கியதால்தான்

இறைவன் அவளை விண்ணக, மண்ணக அரசியாக்கினார்!

ஆனால் பாவியைப் பார்.

முதல் போடுபவன் அவன். போட்ட முதலைக் காப்பாற்ற அவன் படும்பாடு அவனுக்குதான் தெரியும்.

ஒரு பொய்யை முதலாகப் போட்டால் அந்தப் பொய்யைக் காப்பாற்ற வாழ்நாளெல்லாம் விதவிதமாகப் பொய் சொல்ல வேண்டும்.

இந்தத் திறமை நல்லவனிவிடம்
இருக்காது!

அதுபோலவே ஏமாற்றுதல், திருட்டு, லஞ்சம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள் படும் பாட்டை நாம் அன்றாட செய்திகளில் பார்க்கிறோமே!

ஆகையால்தான்  சொன்னேன் புனிதனாக வாழ்வது மிக எளிது,

பாவியாக வாழ்வது மிகக் கடினம்."

"ஆனால் அட்டூளியம் செய்கிறவர்கள்தானே ஆடம்பரமாக வாழ்க்கையை அனுபவிக்கிறாகள்.

புனிதமாக வாழ்பவர்கள் கஸ்டங்களை அல்லவா அனுபவிக்கிறாகள்!"

..."நேசிக்கிறவன் தன் நேசருக்காக எந்தக் கஸ்டத்தையும் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வான்.

அவன் மனசாட்சிப்படி வாழ்வதால் மனதில் எப்போதும் சமாதானம் நிலவும்.

'நன் மனதுள்ளோர்க்கு  சமாதானம் உண்டாகுக' என்ற இறைத் தூதர்களின் வாழ்த்து அவனை வாழவைக்கும்.

ஆனால் அட்டூழியர்கள் தங்கள் மனசாட்சியை அடகுவைத்து ஆடம்பரத்தை வாங்கியிருப்பதால் தங்கள் ஆடம்பரத்தை தக்கவைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருப்பார்கள்.

குறுக்கு வழியில் பணம் ஈட்டி ஆடம்பரமாக வாழ்பவன் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருப்பான்.

ஆம்பரம் வேறு, உண்மையான மகிழ்ச்சி வேறு.

உண்மையான மகிழ்ச்சி அன்பின் சொத்து."

"எளிது என்கிறீர்கள், கஸ்டங்களைத் மகிழ்ச்சியோடு தாங்கிக் கொள்வார்கள் என்கிறீகள்.

கஸ்டங்கள் இல்லாவிட்டால்தானே எளிது என்கலாம்?"

..."இந்த சந்தேகம் உனக்கு வந்திருக்கக்கூடாது."

"ஏன்?"

..." நீ மூன்று பிள்ளைகளைப் பெற்றவள்.

பேறுகால வேதனையை அனுபவித்தவள்.''

"சாரிங்க. புரிகிறது. கஸ்டங்கள் மனிதவாழ்வில் இயல்பாவை.

இறைவனை அன்பு செய்பவன் அவரது திருப்திக்காக எந்தக் கஸ்டத்தையும் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வான்.

இறைவனை அன்பு செய்யாதவன் தனது கஸ்டங்களை நீக்க எந்த அட்டூழியத்தையும் செய்வான்.

இன்னும் ஒரு கேள்வி.

புனித வாழ்வு வாழ இறைவார்த்தையை, அதாவது பைபிளை, ஒழுங்காக வாசிக்க வேண்டும்.

எழுத வாசிக்கத் தெரியாத அறிவிலி என்ன செய்வான்?"

..."ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்பு செய்வதற்கும் பைபிளை வாசிப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

விசுவாசத்தின் தந்தையாகிய அபிரகாம் இறைவனை மிகவும் அன்பு செய்தார்.

ஆனால் பைபிள் வாசிக்கவில்லை, ஏனெனில்,  அவர் காலத்தில் பைபிள் எழுதப்பட்டிருக்கவில்லை.

இறைவன் அவரோடு நேரடியாகப் பேசினார்.

இறைவன் நமக்குத் தந்திருப்பதற்குதான் கணக்குக் கேட்பார்.

We will have to give  account for whatever we have received from Him.

தாலந்துகள் உவமை இதைத் தெளிவுபடுத்துகிறது.

ஆகவே இறுதிநாளில் எல்லோரும் ஒரே மாதிரிக் கணக்கு கொடுக்க வேண்டியிருக்காது.

Theology யில் degree வாங்கிக்கிறவர்கள் அதிகம் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் அதிகம் கணக்குக் கொடுக்கவேண்டியிருக்கும்.

எழுத்தறிவே இல்லாத ஒரு பட்டிக்காட்டு பாட்டி,

அவள் பெற்றிருப்பதற்கு ஏற்ப கணக்குக் கொடுத்தால் போதும்.

அவளுக்கு பங்கு சாமியாருடைய பிரசங்கம்தான் பைபிள்.

ஒரு ஆண்டு ஒழுங்காக ஞாயிறு பூசைக்கு  வந்தாலே

வாசகங்களும், பிரசங்கங்களும்

அவள் கடைப்பிடிக்க வேண்டிய இறையறிவை அவளுக்குக் கொடுத்துவிடும்.

அவள் அதன்படி வாழ்ந்தாலே போதும்.

அவள் செய்யவேண்டியதெல்லாம் கடவுளை நேசிக்க வேண்டியது மட்டும்தான்.

அவளது சக்திக்கு ஏற்றபடி நேசித்தால்

இறைவன் கட்டளைகளின்படியும், பங்கு சாமியாரின் சொற்படியும் நடப்பாள்.

வாழ்க்கையில் கஸ்டங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வாள்.

அவளது அன்பின் ஆழத்திற்கு ஏற்ப அவளது புனிதத்துவம் அதிகமாகும்.

அன்பு அதிகமாக அதிகமாக அவளது அன்புப் பணிகளும் அதிகமாகும்.

அன்புப் பணிகளின் அடிப்டையில்தான் இறுதித் தீர்ப்பும் இருக்கும்.

உனக்கு எவ்வளவு தெரியும் என்று இறைவன் கேட்கமாட்டார்.

என்ன செய்தாய் என்றுதான் கேட்பார்.

ஆகவே,

அன்பு செய்வதற்காகவே படைக்கப்பட்ட நமக்கு

அன்பு செய்வது எளிது,

புனிதர்கள் ஆவதும் எளிது."

"Tea குடிச்சிட்டீங்களா?"

..."இங்க வா ஆளுக்குப் பாதியாய்க் குடிப்போம்."

லூர்து செல்வம்..

No comments:

Post a Comment