Tuesday, July 6, 2021

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."(மத்.10:8)(தொடர்ச்சி)

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்.10:8)
(தொடர்ச்சி)


நண்பர் ஒருவர் பண வசதி உள்ள ஒருவரிடம் போய், 

வசதி உள்ளவர்கள் வசதி அற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவருக்கு உதவி செய்ய வேண்டியதன் அவசியம் புரியவில்லை.

"சார், நான் இரவும் பகலும் உழைத்து சம்பாதித்திருக்கிறேன்.

நான் ஏன் எனது உழைப்பை இலவசமாக இன்னொருவருக்கு தரவேண்டும்?"


"ஐயா,எல்லோருமே அவரவர் சக்திக்கு  தகுந்தபடி உழைக்கிறார்கள்.

 ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வருமானம் வருவதில்லை.

 அதேபோல செலவினங்களும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வருவதில்லை.

எல்லோருமே இறைவனின் பிள்ளைகள்.

உழைப்பிற்கு ஏற்ற வருமானம் வராதவர்களுக்கும் வருமானத்திற்கு மிஞ்சிய செலவுகள் வருவதுண்டு.

எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகளாக இருப்பதால்

 வசதி உள்ளவர்கள் வசதி இல்லாத தங்கள் சகோதரர்களுக்கு கொடுத்து உதவுவது கடமை."

"அதெப்படி சார் நான் உழைத்து சம்பாதித்ததை இலவசமாக கொடுக்க முடியும்?"

"இலவசமாக  பெற்றீர்கள், இலவசமாக கொடுங்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்."

"நான் எதையும் இலவசமாகப் பெறவில்லை. உழைத்துதான் பெற்றிருக்கிறேன்."

"மன்னிக்கவும்.உங்கள் உடலையும் உயிரையும் கூட நீங்கள் உழைத்து பெறவில்லை.

நீங்கள் உழைக்க பயன்படுத்திய இரவையும், பகலையும் கூட நீங்கள் உழைத்து பெறவில்லை.

நீங்கள்உயிர் வாழ சுவாசிக்கும் காற்றைக் கூட நீங்கள் உழைத்து பெறவில்லை. 

எல்லாமே இறைவன் தந்த இலவசங்கள்."

இவ்வளவு சொன்ன பிறகும் அந்த வசதி படைத்த அவருக்கு புரியவில்லை.

"இந்த இலவசங்களை கடவுள் எல்லோருக்கும் தானே. கொடுத்திருக்கிறார்.

அவரவர் உழைத்து சம்பாதித்து கொள்ள வேண்டியதுதானே."

இதற்குமேல் பேசினாலும் அவரை புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்த நண்பர் திரும்பிவிட்டார்.

இலவசமாக பெற்றதை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இலவசமாக தந்தது தந்தை, விண்ணுலக தந்தை.

இலவசமாக கொடுக்க வேண்டியது தந்தையின் பிள்ளைகளுக்கு, அதாவது நமது சகோதரர்களுக்கு.

இல்லாதவர்களுக்கு நாம் கொடுப்பது அவர்களுக்கு நாம் செய்யும் உதவிதான்.

ஆனால் நாம் கொடுப்பது அவர்கள் இல்லாதவர்கள் என்பதற்காக அல்ல, அவர்கள் நமது சகோதரர்கள் என்பதற்காக.

அதனால்தான் இயேசு


"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள்  என்பதற்காக   உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன்,   "

" சீடன் என்பதற்காக ........தண்ணீர் கொடுப்பவனும் ."
என்ற சொற்றொடர்களைப் பயன் படுத்துகிறார்.

ஒருவர் அவரது வீட்டு  திருமண விழாவிற்கு நமக்கு அழைப்பு தந்திருக்கிறார்.

நாமும் விழாவிற்கு செல்கிறோம்.

மணமக்களுக்கு கையில் ஒரு பரிசுப் பொருளை கொடுக்கிறோம்.

அவர்கள் இல்லாத ஏழைகள் என்பதற்காகவா பரிசு கொடுக்கிறோம்?

நம்மை அழைத்த உறவினர்கள் என்பதற்காக கொடுக்கிறோம்.

அங்கு முன்னிலை வகிப்பது உறவு.

நமக்கு திருமண வீட்டினர்  சாப்பாடு தருகிறார்கள்.

நமது வீட்டில் நமக்கு சாப்பாடு இல்லை என்பதற்காகவா?

இல்லை. அழைக்கப்பட்ட உறவினர்கள் என்பதற்காக.

வழியில் நண்பரை பார்த்தால்   கடைக்கு அழைத்துச் சென்று காபி வாங்கி கொடுக்கிறோம்.

அவரால் காபி வாங்க முடியாது என்பதற்காகவா?

நமது நண்பர்  என்பதற்காக.

அதே போல்தான் நமது அயலானுக்கு உதவி செய்யும் போது நமது சகோதரர்களுக்கு செய்வதாக எண்ணி செய்ய வேண்டும்.

 இல்லாதவனுக்கு செய்வதாக அல்ல.

இறுதித் தீர்ப்பு நாளில்,

"நான் பசியாக இருந்தேன். உணவு தந்தீர்கள்"

என்று ஆண்டவர் கூறப் போகும் 
வசனத்தைக் கூர்ந்து கவனித்தால்,

"நாம் பரலோகத் தந்தையின் பிள்ளைகள்.

 நான் உனது சகோதரன்,

 நீ எனது சகோதரன்.

  உனது சகோதரனாகிய நான் பசியாக இருந்தேன்.

 எனக்கு உணவு தந்தாய்."

என்ற வார்த்தைகள் அங்கு மறைந்து இருக்கும்.

ஆகவேதான்

"வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக."

என்றும் ஆண்டவர் கூறுவார்.

ஆகவே தந்தையிடமிருந்து இலவசமாக பெற்றவற்றை நமது சகோதரர்களுக்கு இலவசமாக கொடுப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment