Saturday, July 10, 2021

சமூக இடைவெளி ஆன்மீக இடைவெளியாக மாறிவிடக்கூடாது.(தொடர்ச்சி)

சமூக இடைவெளி 
ஆன்மீக இடைவெளியாக மாறிவிடக்கூடாது.
(தொடர்ச்சி)


நண்பர் ஒருவர் பிறர் அன்பின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் காலையில் யாராவது ஒருவருக்கு உணவு பரிமாறிவிட்டு, 
தான் உண்பதைத் தனது கொள்கையாக வைத்திருந்தார்.

ஒரு நாள் அவரோடு அமர்ந்து சாப்பிட ஆள் கிடைக்கவில்லை.

காலை பதினோரு மணி வரை தெருவிலேயே நின்று யாராவது வருகின்றார்களா என்று பார்த்துக்கொண்டு நின்றார்.

பதினொரு மணிக்கு ஒருவர் வந்தார்.

"என்னோடு உணவு உண்ண வாருங்கள்" என்று அவரை அழைத்தார்.

அவரும் வந்தார்.

உணவு பரிமாறிவிட்டு அவரை நோக்கி,

"செபம் சொல்லிவிட்டு சாப்பிடுவோம்." என்றார்.

"எதற்காக செபம்?"

"இறைவனுக்கு நன்றியாக."

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருந்தால் நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள்."

என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தார்.

"ஹலோ, எழுந்திருங்கள்.

 நான் உங்களுக்கு உணவு தருவதே இறைவனுக்காகத்தான்.

 இறைவன்மீது நம்பிக்கை இல்லாதவர்களோடு நான் உண்பதில்லை.

நீங்கள் போகலாம்."

அவரும் பதில் எதுவும் பேசாமல் போய்விட்டார்.

"இன்றைய காலை உணவை நாமும் உண்ண முடியாது." என்று நினைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.

11.30 மணி அளவில் இயேசுவே வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தார்.

நண்பர் ஆச்சரியத்தோடு எழுந்து இயேசுவின் முன்சென்று முழந்தாள் படியிட்டு,

"வாருங்கள் ஆண்டவரே, நான் உங்களை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

நன்றி ஆண்டவரே.

ஒரு சிறிய வேண்டுகோள்.

இன்று என்னோடு நீங்கள் காலை உணவு உண்ண வேண்டும்."

"கொஞ்ச நேரத்திற்கு முன்னால் என்னை நீ அழைத்து வந்து, சாப்பிட முடியாது. போங்கள்"

 என்று சொல்லிவிட்டாய்.

இப்போது திரும்பவும் சாப்பிடச் சொல்கிறாய்."


" ஆண்டவரே, கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வந்தவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

ஆகவேதான் உணவு இல்லை என்று சொல்லிவிட்டேன்.''

"அவரில் நீ என்னைப் பார்க்கவில்லை?"

"அவருக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை ஆண்டவரே."


"அது எனக்கும் தெரியும். அவருக்கு வயது 45. 

என் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரை நான் 45 ஆண்டுகளாகப் பராமரித்து வந்திருக்கிறேன்.

இன்னும் பராமரிப்பேன். 

நான் எல்லோரையும் நேசிக்கிறேன்,

நல்லவர்களா, கெட்டவர்களா என்று பார்த்து நேசிப்பதில்லை,

எல்லோரும் என்னால் படைக்கப்பட்டவர்கள்,

நேசிப்பதற்காகவே அவர்களைப் படைத்தேன்.

நீ வெளியே சென்று அவரை தேடிப்பிடித்து சாப்பிட அழைத்து வா. அதன் பிறகு என்னிடம் வந்து பேசு."

என்றோ கூறிவிட்டு மறைந்துவிட்டார்.

இயேசுவின் சொல்லைத் தட்ட முடியாது.

உடனே எழுத்து, ஊர் முழுவதும் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

அவரைச் சாப்பிட சொல்லாமல் அனுப்பியதற்காக மன்னிப்பு கேட்டு, அழைத்து வந்து சாப்பாடு கொடுத்தார்.

சாப்பாடு கொடுத்துவிட்ட விஷயத்தை இயேசுவிடம் சொல்ல வேண்டும்.

கோவிலுக்கு புறப்பட்டார்.

அன்பிற்கு அடைக்கும் தாள் இல்லை.
நாம் நமது திருப்திக்காக அயலானை நேசிப்பதில்லை.

இறைவனுக்காகவே நேசிக்கிறோம்.

இறைவன் எல்லோரையும் நேசிப்பதால் நாமும் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.

நேசிக்கும் இதயங்களுக்கு இடையே இடைவெளி இருக்காது.

இதயங்கள் இணையும்போது இதயங்களில் உள்ள உணர்வுகளும் இணையும். 

நமது இதயத்தில் இறைபக்தி ஆழமாக இருந்தால் அதனோடு இணையும் எல்லா இதயங்களுக்கும் அது பரவும்.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள்.

 இறை நம்பிக்கை இல்லாத இதயங்கள் கூட 

இறை நம்பிக்கை ஆழமாக உள்ள இதயங்களோடு இணையும்போது

 தங்களை அறியாமலேயே இறைவனை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே இதயங்களுக்கு இடையே உள்ள ஆன்மீக இடைவெளியை குறைப்போம்.

இதய உணர்வுகள்தான் நமது நடத்தையை தீர்மானிக்கின்றன.

 சொற்கள் மூலம் நற்செய்தியை பரப்புவதை விட இதயங்கள் மூலம் பரப்புவது சக்தி வாய்ந்தது.

"உனது நண்பன் எப்படிப்பட்டவன் என்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்று கண்டு பிடித்து விடுகிறேன்" என்று சொல்வார்கள்.

காரணம் நண்பர்களின் இதயங்கள் இணைந்திருக்கும்.

அவர்களை அறியாமலேயே நண்பர்கள் ஒரே மாதிரியான குணசாலிகளாக மாறிவிடுகிறார்கள்.

அன்பின் மூலம் எல்லோருடைய இதயங்களும் இடைவெளியின்றி இணையவேண்டும்.

எல்லோருடைய இதயங்களும் தங்களுக்குள் இணைந்து இயேசுவினுடைய இதயத்தோடு இணைய வேண்டும்.

அப்போதுதான் 

"ஒரே ஆயன் , ஒரே மந்தை" 

இயேசுவின் வாக்கு நிறைவேறும். 

இடைவெளி இல்லாத ஆன்மீக உறவை இறைவனோடும், நம் அயலானோடும் வளர்ப்போம்.

Let us draw near to God and to one another.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment