Friday, July 16, 2021

" மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்."(மாற்கு. 6:34)

" மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்."
(மாற்கு. 6:34) 



நண்பர் ஒருவருக்கு இரவு வெகுநேரம்வரை தூக்கம் வரவில்லை.

உருண்டு புரண்டு   படுத்துப் பார்த்தார். கண்ணை மூடிக்கொண்டு முயன்று பார்த்தார். தூக்கம் வரவில்லை.

இரவு மணி 12 ஆகிவிட்டது.

அருகில் வைத்திருந்த Cell phone ஐக் கையில் எடுத்து ஒரு நம்பருக்கு phone செய்தார்.

பங்குக் குருவானவர் வெளியூரில் இரவு விசாரணைப் பூசை வைத்து விட்டு, 
bike ல் ஐந்து மைல் பயணம் செய்து, 
அறை வீட்டிற்கு வந்து,
களைப்போடு களைப்பாக குளித்து விட்டு,
 இரவு உணவு அருந்திவிட்டு, மறுநாள் பூசை பிரசங்கத்திற்கு குறிப்புகள் எடுத்து விட்டு, 
இரவு செபம் முடித்துவிட்டு, களைப்புடன் படுக்கைத்துச் செல்லும்போது மணி பன்னிரெண்டு.

படுத்து தலை சாய்க்கும் போது செல்போன் அலறியது.

"இந்நேரம் யாராக இருக்கும்?" என்று எண்ணிக்கொண்டே
 
Cell phone ஐக் கையில் எடுத்தார்.

"Hello! உங்களுக்கு சமாதானம்.
Parish priest here."

"வணக்கம் Father! நான் லூர்துசாமி பேசுகிறேன்."

"சொல்லுங்கள்."

"சாமி, எவ்வளவோ முயன்று பார்த்தேன் தூக்கம் வரவில்லை." 

''அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் தூக்கத்திற்காக ஜெபம் சொல்லுகிறேன்.'' 

"சாமி, வேண்டாம். ஒரு பிரசங்கம் வையுங்கள்."

"கொஞ்சம் பொறுங்கள்."

youtube ஐ எடுத்து, ஏதோ ஒரு சாமியாரின் பிரசங்கத்தை வந்த நம்பருக்கு Share செய்துவிட்டு படுத்துக் கொண்டார்.

பயங்கர களைப்பு. அப்படியே தூங்கி விட்டார்.

நண்பரும் youtube பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார். 


இயேசு சென்ற இடமெல்லாம் அவரது பிரசங்கத்தை கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக (In multitudes) சென்றார்கள்.

 சென்ற மக்கள் இயேசுவின் போதனையை ஆர்வத்தோடு கேட்டார்கள்.

ஆனால் அவரை பின்பற்றுகிற நாமோ தூங்குவதற்கென்றே பிரசங்கத்தைக் கேட்க போகிறோம்.

சிலருக்கு பிரசங்கம் தூக்க மாத்திரை!

திருப்பலிக்கு போகும்போதே நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது:

1.பாவம் இல்லாத நிலையில் திருப்பலி காண வேண்டும்.

பாவம் இருக்குமானால் பாவசங்கீர்த்தனம்  மூலம் பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

2.திருப்பலியின் போது வாசிக்கப்படும் வாசகங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். 

3. அன்றைய வாசகங்களை குருவானவர் பிரசங்கத்தில்  விளக்கும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும்.

4. நடுப் பூசையில் குருவானவர் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் ஒப்புக்கொடுக்கும் போது   நாம் நூற்றுக்கு நூறு குருவானவரோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

5.இயேசுவை உணவாக உண்கிறோம் என்ற உணர்வோடு திருப்பந்தியில் கலந்து கொள்ள வேண்டும்.

6.இயேசுவை உணவாகப் பெற்றபின் அவரோடு பேச வேண்டும். உரையாடலின்போது
இயேசுவுக்கு நன்றி கூற வேண்டும்.

இத்தனை செயல்களையும் முழு மனத்தையும் செலுத்தி செய்ய வேண்டும்.

நமது ஆண்டவரின் வாழ்க்கையே திருப்பலி நேரத்தில் நமது உள்ளத்தில் வாழப்படுகிறது'

நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து கல்வாரி மலையில் இயேசு நமக்காக பலியான நிகழ்வு வரை  நாம் இயேசுவோடு ஒன்றித்து பயணிக்கிறோம். 

பிரசங்கத்தின் போது நாம் தூங்கினால் இயேசுவின் நற்செய்தியை தூங்கிக்கொண்டே கேட்டுக்கொண்டு அவர் பின்னாலே போனதற்கு சமம்.

இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த போது அவரது வார்த்தைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்த மக்கள் எல்லோரும் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தால் ஆண்டவர் அவர்களைப் பார்த்து என்ன சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்து பார்ப்போம்.

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்ற இயேசுவின் அறிவுரைக்கு ஏற்பவே குருக்கள் திருப்பலியின்போது நமக்கு திருவுரை ஆற்றுகிறார்கள்.

பிரசங்க மேடையிலிருந்து பேசுபவர் நம் ஆண்டவர் இயேசுவே என்ற நினைவோடு நாம் பிரசங்கத்தை கேட்டுக்கொண்டிருந்தால் தூக்கம் வராது,

ஆனால் நாம் நேர போக்கிற்காக திருப்பலிக்கு வந்திருந்தால் தூக்கம் வரத்தான் செய்யும்.

நமது நோய்க்கு மருத்துவம் பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று

 டாக்டர் என்னென்ன மருந்தை, எப்பெப்போ சாப்பிட வேண்டும் என்று சொல்லும்போது தூங்கிக்கொண்டிருந்தால்

நம்மால் எப்படி ஒழுங்காக மருந்தை சாப்பிட முடியும்?

எப்படி நோய் குணமாகும்?

மருத்துவமனைக்கு  சென்றும் நமக்கு எந்த பயனும் இல்லை.

திருப்பலியின் போது வாசகங்களில் ஆண்டவர் நமது மீட்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரை தருகின்றார்.

நாம் அதையும் கூர்ந்து கவனிப்பதில்லை.

இயேசுவின் அறிவுரையை குருவானவர் விளக்குகிறார்.

அப்போதும் தூங்கிக் கொண்டிருந்தால் நம்மால் இயேசுவின் போதனைப்படி எப்படி வாழ முடியும்?

இயேசுவின் போதனைப்படி வாழாவிட்டால் எப்படி மீட்பு கிடைக்கும்?

பிரசங்க நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்தால்  நாம் பூசைக்கு செல்வதால் எந்தவித ஆன்மீகப் பயனும் இல்லை.

சிலர் பிரசங்க நேரத்தில் தூங்க மாட்டார்கள்.

ஆனால் பிரசங்கம் ஆரம்பித்தவுடன் எழுந்து கோவிலை விட்டு வெளியே போய்விடுவார்கள்.

பிரசங்கம் முடிந்தவுடன் கோவிலுக்குள் வருவார்கள்,

இறைவாக்கிற்கு  மரியாதை கொடுக்காதிருப்பது இறைவனுக்கு மரியாதை கொடுக்காதிருப்பதற்குச் சமம்.

சிலர் பிரசங்கத்தைக் கவனிப்பார்கள் ஆனால் பிரசங்கத்தைக் கவனிக்க மாட்டார்கள்.

அதெப்படி?

பிரசங்கத்தில் கவனிப்பார்கள். ஆனால் பிரசங்கத்தில் கருத்தைக் கவனிக்க மாட்டார்கள்.

அதற்கு பதிலாக சுவாமியாரின் மொழி நடையை கவனிப்பார்கள்.

"சாமியார் அழகு தமிழில் பேசினார்.
சரியாக தமிழ் பேசத் தெரியவில்லை. 
கருத்தை  விளக்க தெரியவில்லை.
நகைச்சுவையாகப் பேசினார்.
பிரசங்கம் போரடித்தது.
நேரம் போனதே தெரியவில்லை.
இவ்வளவு நேரம் பேசியிருக்கக் கூடாது."

என்றெல்லாம் விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.

என்ன பேசினார் என்பதை மட்டும் கவனிக்க மாட்டார்கள்.

இவர்களுக்கும் இறை வார்த்தையால் எந்த பயனும் கிட்டவில்லை.

மருத்துவமனைக்கு செல்பவர்கள் மருத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரை விமர்சிப்பதில் கவனம் செலுத்தினால் 
 மருத்துவத்தால் பயனில்லை.

பிரசங்கத்தின் கருத்துக்களை கூர்ந்து கவனித்து அதை தங்களது வாழ்வாக்குபவர்கள் இயேசு கொண்டு வந்த மீட்பை பெறுவார்கள்.

என்னுடைய அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது.  ஆகவே பைபிளை வாசித்ததேயில்லை.

ஆனால் தேவ சாஸ்திரம் படித்தவர்களுக்கு நிகராக இறையியல் பேசுவார்கள்.

அவர்களிடம் இருந்ததெல்லாம்

 தியானப் பிரசங்கங்கள், திருப்பலி  பிரசங்கங்கள் ஆகியவற்றை கேட்ட அறிவு மட்டும்தான்.

எனது மூத்த சகோதரர் குருவானவர் ஆனதற்கு காரணமே என்னுடைய அம்மா கற்றுக் கொடுத்த ஞானோபதேசம்தான்.

 எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு பங்கு சாமியார்தான் பைபிள்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment