Friday, July 2, 2021

"நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"(மத்.9:13)

"நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
(மத்.9:13)

மத்தேயுவின் வீட்டில் இயேசு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது 

ஆயக்காரர், பாவிகள் பலர் அவருடனும் சீடருடனும் ஒருங்கே அமர்ந்திருந்தனர்.

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.

   இதை சொல்லும் பரிசேயர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வெளிவேடக்காரர்கள், குருட்டு வழிகாட்டிகள் என்று இயேசுவே அவர்களைப் பற்றி கூறியிருக்கிறார்.

தாங்களே பாவிகளாக இருந்துகொண்டு, மற்றவர்களை பாவிகள்  அழைக்கிறார்கள்.

இயேசுவைக் கூட அவர்கள் பாவிகள் பட்டியலில்தான் வைத்திருந்தார்கள்.

அதனால் தான் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையாகிய சிலுவை மரணத்தை அவருக்கு அளித்தார்கள்.

இயேசு இறைமகன். பரிசுத்தராகிய அவர் ஏன் பாவிகளைத் தேடி  உலகிற்கு வந்தார்?

 கடவுள் நமது முதல் பெற்றோரைப் பரிசுத்தர்களாகத்தான் படைத்தார்.

ஆனால் அவர்கள் பாவம் செய்ததால் நாம் அனைவருமே பாவிகள் ஆகவே பிறக்க  நேரிட்டது.

நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்து நம்மை பரிசுத்தர்களாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தான் இயேசு மனுவுரு எடுத்தார்.

பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்தமையால் அவர் எப்பொழுதும் பாவிகள் மத்தியிலேயே நமது நேரத்தை செலவழித்தார்,
மருத்துவர் நோயாளிகளின்  மத்தியில் தனது நேரத்தை செலவழிப்பது போல.

இயேசுவோடு இருந்த பாவிகளுள் இரண்டு வகையினரைப் பார்க்கிறோம்.

ஒரு வகையினர் தாழ்ச்சியோடு தங்களைப் பாவிகள் என்று ஏற்றுக்கொண்டவர்கள்.

இவர்கள் இயேசுவின் நற்செய்தியை கேட்பதற்காகவும்,
தங்களது உடல் நோயும், ஆன்ம நோயும் நீங்குவதற்காகவும் எப்போதும் இயேசுவின் பின்னாலே சென்றார்கள்.

இன்னொரு வகையினர் தங்களை பரிசுத்தவான்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பாவிகள். 

பரிசேயரும், சதுசேயரும், சட்டவல்லுநர்களும், மறைநூல அறிஞர்களும் இவ்வகையை சேர்ந்தவர்கள்.

இவர்கள் இயேசுவின் போதனையில் குற்றம் கண்டுபிடிக்கவும்,

அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும் அவரை பின் சென்றார்கள்.

அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், 

தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக்கொள்ளாத பரிசேயர் சதுசேயர் போன்ற பாவிகள் தான்,

தங்களைப் பாவிகள் என்று  தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோர் மீட்பு  பெற உதவியிருக்கிறார்கள்!

எப்படி?

தங்களைப் பாவிகள் என்று  தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோர் மீட்பு  பெற்றது இயேசுவின் பாடுகளினாலும்,சிலுவை மரணத்தினாலும்தான். 

இயேசுவுக்கு பாடுகளையும், சிலுவை மரணத்தையும் அளித்தது 

பரிசேயர், சதுசேயர்  வகையறாக்கள்தானே!

பரிசேயர் செய்த தீமை இயேசுவுக்கு அளித்த சிலுவை மரணம்!

அதிலிருந்து நாம் பெற்ற நன்மை இரட்சண்யம்!

இயேசு சர்வ வல்லவர். அவரால் எந்த தீமைமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க முடியும்!

பாவிகளுக்கு நற்செய்தியை அறிவித்து அவர்களை மீட்பதற்காகத்தான் 

இயேசு பரிசுத்த திருச்சபையாகிய பாவிகளின் கூடாரத்தை ஏற்படுத்தினார்.

பூமியில் வாழக்கூடிய பரிசுத்த திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் பாவிகள்தான்.

யாராவது நான் பாவி அல்ல என்று சொன்னால் அவன் பொய்யன்!

நோயாளி தன்னை  நோயாளி என்பதை ஏற்றுக் கொண்டால்தான் நோயிலிருந்து குணம் பெற முடியும்.

ஏற்றுக் கொள்ளாதவன் வைத்தியம் பார்க்க மாட்டான். குணமும் அடையமாட்டான்.

பாப்பரசர் முதல் அடிமட்ட கிறிஸ்தவன் வரை அனைவரும் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஞானஸ்நானம், பச்சாத்தாபம் ஆகிய தேவ திரவிய அனுமானங்கள் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தருவதற்காகவே இயேசுவால் ஏற்படுத்தப்பட்டவை.

அவை எல்லோருக்கும் பொதுவானவை.

ஞானஸ்தானம் பெறாமல் ஜென்ம பாவத்திலிருந்து மீட்புப் பெற முடியாது.

ஞானஸ்தானம் பெறாமல் கிறிஸ்தவன் ஆகமுடியாது.


ஞானஸ்தானம் பெற்றபின் நாம் செய்கிற பாவங்களுக்கு 
பச்சாத்தாபம் என்ற பாவசங்கீர்த்தனம் மூலமாகவே பாவமன்னிப்பு பெறுகிறோம்.

ஆகவே பாவசங்கீர்த்தனம் நமது இரட்சண்யத்திற்கு அத்தியாவசியமானது.

"எனக்கு பாவசங்கீர்த்தனமே தேவை இல்லை, நான் பாவமே செய்யவில்லை" என்று ஒருவன் சொன்னால், அவன் தான் உலகிலேயே மிகப் பெரிய பொய்யன்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ

 அவ்வளவு பாவசங்கீர்த்தனம் முக்கியம் ஆன்மாவை பாவம் இன்றி பரிசுத்தமாக வைத்துக் கொள்வதற்கு.

 பாவசங்கீர்த்தனம் வேண்டாம் என்பவன் தன்னை பாவி என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

பாவமன்னிப்பிற்கு  முதல் படியே பாவத்தை ஏற்றுக் கொள்வதுதான்.

பாவத்தை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு மீட்பு இல்லை.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

நம்மைத் தேடிவந்த இறை மகனுக்கு நன்றி சொல்வோம்.

ஒழுங்காக பாவ  சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற்று நமது நன்றியை செயலில் காட்டுவோம்.

நிலைவாழ்வை அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment