"மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"
(மத்.9:2)
இயேசு உலகிற்கு வந்தது ஆன்மாக்களின் மீட்புக்காக.
பாவ நோயிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்க.
இவ்வுலகைச் சார்ந்த எந்த விடுதலைக்காகவும் அல்ல.
யூதர்களில் அனேகர் மெசியா வந்து
தங்களை உரோமையர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு
தங்களுக்கு தனி சுதந்திரமான ராஜ்யம் அமைத்து ஆள்வார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இயேசு உலகிற்கு வந்தது அரசியல் விடுதலைக்காகவோ,
பொருளாதார விடுதலைக்காகவோ,
சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவோ,
உடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவதற்காகவோ அல்ல.
ஆன்மாக்களின் மீட்புக்காகவும், இறை அரசை ஏற்படுத்தவுமே உலகிற்கு வந்தார்.
அப்படியானால் அவர் ஏன் சென்ற இடமெல்லாம் மக்களின் உடல் நோய்களை புதுமைகள் செய்து குணமாக்கினார்?
இயேசு ஒவ்வொரு நோயாளியையும் குணமாக்கிய விதத்தை உற்று நோக்கினால்
அவர் செய்த ஆன்மீக பணி தெளிவாக விளங்கும்.
ஒவ்வொரு புதுமையிலும் நான்கு அம்சங்களை காணலாம்.
1. விசுவாசம்.
2..பாவமன்னிப்பு.
3.குணப்படுத்துதல்.
4.இயேசுவை பின்பற்றுதல்.
இவற்றில் குணப்படுத்துதல் மட்டுமே நமது புறக் கண்களுக்கு தெரிகிறது.
மற்ற மூன்று ஆன்மீக அம்சங்களும் ஆன்மாவின் கண்கொண்டு நோக்கினாள் தான் தெரியும்.
திமிர்வாதக்காரனைக் குணப்படுத்திய புதுமையில் இயேசு,
அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"
என்கிறார்.
ஒவ்வொரு புதுமையிலும் இயேசு விசுவாசத்தை சுட்டிக் காண்பிப்பார்.
குணப்படுத்தியவுடன்
" உனது விசுவாசம் உன்னை குணப்படுத்திற்று."
என்று இயேசு சொல்வது வழக்கம்.
மீட்புக்கு அடிப்படைத் தேவை விசுவாசமே.
விசுவாசம் நமது சுய சம்பாத்தியம் அல்ல. அது இறைவன் நமக்கு இனாமாக தரும் பரிசு.
Faith is God's gift to us.
இப்போது ஒன்றை புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நோயாளியையும் குணமாக்கு முன்பு இயேசு அவனுக்கு விசுவாசம் என்னும் பரிசை முதலிலேயே கொடுத்து விடுகிறார்.
அவர் கொடுப்பது நமது கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். விசுவாசக் கண்கொண்டு பார்த்தால் புரியும்.
விசுவாசத்தை தொடர்ந்து பாவங்களுக்கு மனஸ்தாபம்.
அதன் விளைவாக பாவமன்னிப்பு.
அடுத்து குணமாக்குதல்.
இயேசு சென்றவிடமெல்லாம் நோயாளிகளை குணமாக்கி கொண்டே போனார் என்றால்
சென்றவிடமெல்லாம் விசுவாச விதையை ஊன்றிக் கொண்டே போனார்,
மனஸ்தாபத் தண்ணீரைப் பாய்ச்சிக் கொண்டே போனார்,
பாவங்களை மன்னித்துக் கொண்டே போனார்,
இவற்றின் விளைவாக சீடர்களை உருவாக்கிக் கொண்டே போனார் என்பதுதான் பொருள்.
நோய்கள் குணமானது மக்களின் விசுவாச வாழ்வுக்கு இயேசு அளித்த பரிசு.
திமிர்வாதக்காரனை குணமாக்கிய புதுமையில்
விசுவாசத்தை அடுத்து அவனது பாவங்களை மன்னிக்கிறார்.
அடுத்து தான் இறைமகன்,
தனக்கு பாவங்களை மன்னிக்கவும் அதிகாரம் உண்டு
என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு நோயைக் குணமாக்குகிறார்.
"எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.
அவன் எழுந்து தன் வீடு சென்றான்.
குணமாக்கும் புதுமைகளில் குணமானவன்
ஒன்று அவரை பின் செல்வான்,
அல்லது அவரது புகழை பரப்புவான்.
இந்த புதுமையில் அவன் வீட்டுக்கு சென்று விட்டான்.
ஆனாலும், அங்கிருந்த மக்கட்கூட்டம்,
இத்தகைய வல்லமையை மனிதருக்கு அளித்த கடவுளை மகிமைப்படுத்திற்று.
இயேசுவின் வல்லமையில் நம்பிக்கை வைத்து இன்றும் நாம் நமது நோய்களை குணமாக்கும்படி வேண்டுகிறோம்.
நாம் கிறிஸ்தவர்கள் என்பதால் ஞானஸ்நானம் பெறும் பொழுது விசுவாசத்தையும் சேர்த்துதான் பெற்றிருக்கிறோம்.
இயேசுவிடம் நோயைக் குணமாக்கும்படி கேட்டால் குணமாக்குவார் என்று நம்புகிறோம்.
நோய்களைக் குணமாக்கும்படி இயேசுவிடம் வேண்டும்போது குணமாக்கப் படுவதற்கு வேண்டிய இன்னும் இரண்டு அம்சங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் குணமாக்க வேண்டுவது நமது உடலில் உள்ள நோயை.
உடல் நோய் குணமாக வேண்டும் முன் முதலில் நமது ஆன்ம நோயை குணமாக்கும்படி இறைவனிடம் கேட்க வேண்டும்.
அதாவது நமது பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.
பாவங்களுக்கு மன்னிப்புப் பெறாமல் உடல் நோயை மட்டும் குணமாக்க வேண்டுவது, கடவுளை பார்த்து,
"ஆண்டவரே எனக்கு விண்ணகத்திற்கு வர விருப்பம் இல்லை.
ஆகவே பாவங்களுக்கு மன்னிப்பு பெற வேண்டும் என்ற அக்கறை ஏற்படவில்லை.
ஆனாலும் நான் உலகத்தில் நோய் எதுவுமின்றி உடல் நலத்தோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஆகவே எனது உடல் நோயை மட்டும் குணமாக்குங்கள்.
அதுவே எனக்கு போதும்"
என்று சொல்வதற்கு சமம்.
விண்ணகத்திற்காக மட்டுமே நம்மை இறைவன் படைத்தார்.
அதற்கான முயற்சியை தான் நாம் முதலில் எடுக்க வேண்டும்.
இவ்வுலகம் தற்காலிகமானது.
நமது நிரந்தர வீடு விண்ணகம்தான்.
ஒரு வேலையாக அமெரிக்காவிற்கு சென்றுவிட்டு ஊருக்கு flight மூலம் திரும்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
பறந்து கொண்டிருக்கும்போது வீட்டுக்குப் போவதை விட விண்ணில் பறந்து கொண்டிருப்பது நன்றாக இருக்கிறது.
வீட்டிற்கு போகாமல் பறந்து கொண்டே இருக்கலாம் என்று ஆசைப்பட்டால் எப்படி?
அப்படியேதான் உலகிலேயே தங்க ஆசைப்படுவதும்.
அதற்குரிய நேரம் வந்தவுடன் ஆகாய விமானம் நின்றுவிடும்.
நாம் இறங்கி தான் ஆக வேண்டும்.
விண்ணக வாழ்விற்கு அவசியமானது பாவமற்ற வாழ்க்கை.
பாவ மன்னிப்பு பெற அவசியமானது பாவசங்கீர்த்தனம்.
நண்பர் ஒருவர் கேட்டார்,
"சாவான பாவம் செய்தால்தானே பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். அற்பப் பாவங்கள் மட்டுமே இருந்தாலும் ஏன் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்யச் சொல்லுகிறீர்கள்?"
நான் கேட்டேன்,
"வயலில் வேலை செய்து உடல் முழுவதும் சகதியாக இருப்பவன் மாலையில் கட்டாயம் குளிக்க வேண்டும்.
நீங்கள் அலுவலகத்திற்கு காரில் செல்லுகிறீர்கள். A.C. அறையில் அமர்ந்து பணி செய்கிறீர்கள். தூசி கூட ஒட்டுவது சந்தேகமே. அப்படியிருந்தும் ஏன் தினமும் குளிக்கிறீர்கள்?"
"குளிக்கும்போது உடல் refresh ஆகி, உற்சாகம் ஏற்படும். உடல் வியர்வை கழுவப்படும். உடல் மணமாக இருக்கும். அதற்காகத்தான் தினமும் குளிக்கிறேன்."
"ஆன்மாவை பொறுத்தமட்டில் பாவசங்கீர்த்தனமும் அப்படித்தான்.
ஆற்பப் பாவங்கள் மன்னிக்கப் படுவதால் உத்தரிக்கிற தல வேதனை குறையும்.
பாவசங்கீர்த்தனம் செய்யும்போது அதற்கென்றே சில அருள் வரங்கள் கிடைக்கும்.
அவை ஆன்மாவிற்கு உற்சாகத்தை கொடுக்கும். பாவத்தில் விழாமல் இருப்பதற்காக ஆன்மீக தைரியத்தை கொடுக்கும். (Immunity against sin)
துறவற இல்லங்களில் வாரம் ஒரு முறை பாவ சங்கீர்த்தனம் செய்து விடுவார்கள்.
இது பரிசுத்தத்தனத்தில் வளர உதவும்."
மறக்காமல் ஞாபகத்தில் வைக்க வேண்டியது:
நமது உடல் நோயின்றி இருப்பதைவிட,
நமது ஆன்மா பாவ நோயின்றி இருப்பதே மேல்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment