மெசியாவும், யூதர்களும், நாமும்.
"மெசியா தாவீது வம்சத்தில் பிறந்து வருவார், யூதர்களை ரோமை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு சுதந்திர இஸ்ரேல் ஆட்சியை அமைப்பார்" என்று இயேசுவின் காலத்திய யூதர்களில் அநேகர் நம்பினார்கள்.
அவரை ஒரு மன்னர் என்று நம்பினார்களேயொழிய,
மனுக்குலத்தின் பாவங்களுக்காக தனது பாடுகளின் மூலமும் சிலுவை மரணத்தில் மூலமும் பரிகாரம் செய்து,
நம்மை பாவத்திலிருந்து மீட்பார் என்று எண்ணவில்லை.
அவருடைய சீடர்களில் கூட சிலர் அவர் இஸ்ரயேலர்களை அரசாள்வார் என்றுதான் நம்பினார்கள்.
ஆகவேதான் அருளப்பரும், யாகப்பரும் அவரது அரசாட்சியில் தங்களுக்கு உயர்ந்த பதவிகள் தரவேண்டும் என்று கேட்டார்கள்.
இயேசுவை இறைமகன் என்று உறுதியாக நம்பிய இராயப்பர் கூட
இயேசு தான் பாடுபடப் போவதாக சொன்னபோது "வேண்டாம்" என்றார்.
அப்படி சொன்னதற்காக இயேசு அவரை நோக்கி "சாத்தானே அப்பாலே போ" என்றார்.
ஆரம்பம் முதல் அவரை மீட்பர் என்று நம்பியவள் அன்னை மரியாள், அடுத்து சூசையப்பர்.
சீடர்களுக்கு அந்த நம்பிக்கை இருந்திருந்தால் இயேசுவின் பாடுகளின் போது அவரை விட்டுவிட்டு ஓடியிருக்க மாட்டார்கள்.
மரித்த மூன்றாம் நாள் தான் உயிர்க்கப் போவதை சீடர்களிடம் சொல்லியும் கூட அவர்கள் அதை விசுவசிக்கவில்லை.
மூன்று ஆண்டுகள் அவருடனேயே இருந்து அவரது நற்செய்தியை கேட்டும் கூட அவர்களுக்கு போதிய விசுவாசம் இல்லை.
ஒன்றே ஒன்று அவர்களுக்கு நிறைய இருந்தது. இயேசுவின் மேல் அன்பு.
இயேசுவின் காலத்திய யூதர்களும்,
அவருடைய சீடர்களும் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை.
நாம் எப்படி?
இயேசுவை சரியாக புரிந்து கொண்டிருக்கிறோமா?
இயேசுவை இறைமகன் என்று விசுவசிக்கிறோம்.
அவர் தனது பாடுகளில் மூலம் நம்மை மீட்டார் என்று விசுவசிக்கிறோம்.
நல்லவர்களாக நடந்தால் நமக்கு விண்ணக வாழ்வைத் தருவார் என்று விசுவசிக்கிறோம்.
ஆனால் நமது நடைமுறை வாழ்க்கை நமது விசுவாசத்தோடு ஒத்து வருகின்றதா?
அதாவது,
நமது விசுவாசத்தை வாழ்கின்றோமா?
நமது ஆன்மீக நலனுக்காக மட்டுமே சர்வ வல்லப இறைமகன் மனுமகன் ஆகி பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, தன்னையே பலி ஆக்கினார்.
நம்மை மீட்க வந்த தேவன் நம்மிடம்
"கேளுங்கள், கொடுக்கப்படும்" என்றார்.
English Grammar பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் "சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" என்று சொன்னால் நாம் எதைப்பற்றி கேட்க வேண்டும்?
விஞ்ஞான பாடத்தைப் பற்றியா?
ஆன்மாவை மீட்க வந்தவர் "கேளுங்கள்" என்று சொன்னால்
நாம் எதைப் பற்றி கேட்க வேண்டும்?
ஆன்மீக மீட்புக்கு உதவக் கூறியவற்றை கேட்க வேண்டுமா
அல்லது
சம்பள உயர்வு கேட்க வேண்டுமா?
கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் கேட்பகும் உதவிகளில் உலக சம்பந்தப்பட்டவை அதிகமா ஆன்மீக சம்பந்தப்பட்டவை அதிகமா என்று.
அப்போது புரியும் நாம் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்கிறோமா
அல்லது
வெறும் உதவி செய்பவராக ஏற்றுக் கொள்கிறோமா என்று.
சாப்பிட உட்கார்ந்தால் சோறு வைத்தபின் கூட்டு, சாம்பார், ரசம், மோர் ஆகியவை வாங்கி சோற்றோடு பிசைந்து சாப்பிட வேண்டும்.
சோறே வாங்காமல்
கூட்டையும், சாம்பாரையும், ரசத்தையும், மோரையும் வாங்கி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
ஆன்மாவிற்கு உதவியாக இருப்பதற்காகத்தான் உடல் தரப்பட்டிருக்கிறது.
நாம் ஆன்மாவையும் கவனிக்கவேண்டும்,
அதற்கு உதவியாக உள்ள உடலையும் கவனிக்க வேண்டும்.
நமது ஆன்மா சம்பந்தப்பட்ட எந்த உதவியும் கேட்காமல்,
உடல் சம்பந்தப்பட்ட உதவிகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால்
இயேசு உதவிகளைச் செய்வார்,
ஏனெனில் உடலையும் தந்தவர் அவர் தானே!
ஆனால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?
நமது ஆன்மாவின் மீட்பிற்காகத் தானே இயேசு பாடுகள் பட்டு மரணம் அடைந்தார்.
என்றைக்காவது ஒருநாள் அவரிடம்,
"ஆண்டவரே எனது பாவங்களுக்கு பரிகாரமாக நீர் பாடுகள் பட்டீர்' சிலுவையில் அறையப்பட்டீர், மரித்தீர்.
பாவம் செய்தது நான்தானே.
எனது பாவத்திற்கு நான் பரிகாரம் செய்வதற்கு உதவியாக எனக்கு துன்பங்களை அனுப்பும்.
அவற்றை பாவப்பரிகாரமாக அனுபவிக்க எனக்கு ஆற்றலைத் தாரும்."
என்று கேட்டிருக்கிறோமா?
"தனது சிலுவையை சுமந்து வராத எவனும் எனது சீடனாக இருக்க முடியாது என்று
சொல்லியிருக்கிறீரே, .
நான் சுமப்பதற்கு எனக்கு சிலுவையைத் தாரும்.
நான் சுமக்கக்கூடிய சிலுவையாகத் தாரும்."
என்று என்றாவது ஒருநாள் கேட்டிருக்கிறோமா?
"உமக்கு ஊழியம் செய்வதற்காக ஒரு குழந்தையை தாரும்."
என்று கேட்டிருக்கிறோமா?
"மற்றவர்களுக்கு உதவுவதற்காக எனக்கு கொஞ்சம் வருமானத்தை தரும்''
என்று கேட்டிருக்கிறோமா?
மீட்பரை மீட்பராக மட்டும் ஏற்றுக் கொள்வோம்.
பொருளாதார உதவியாளராக அல்ல.
இயேசு பிறந்த அன்று,
"இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்."
என்றுதான் வானவர்கள் செய்தி சொன்னார்கள்.
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் 'மீட்புப்' பெறுவான்,"
என்று சொல்லித்தான் இயேசு சீடர்களை போதிக்க அனுப்பினார்.
இயேசு நமது மீட்பர்.
மீட்பராகவே அவரை ஏற்றுக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment