Saturday, June 5, 2021

"காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள்." (மாற்கு 12.43)

"காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள்." (மாற்கு 12.43)

நமது முழு மனத்தோடு இறைவனை அன்பு செய்ய வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால்

நாம் நம்மை முழுவதும் இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.

நமது ஆன்மாவையும், நமது உடலையும், அவற்றுக்கு உரியனவற்றையும் நம்மை படைத்தவருக்கு   ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.

நமது சிந்தனை, சொல், செயல் யாவற்றையும் அவருக்கு சேவை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பொருளுக்கும் 
அளவு (Quantity),  தரம் (Quality) என்று இரண்டு குணங்கள் உள்ளன.

அதன் தரத்தை வைத்து தான் அதன் மதிப்பு (value) கணக்கிடப்படுகிறது.

பொதுவாக பொருளின் தரம் பொருளிலேயே இருக்கும்.

ஆனால் இறைவனுக்கு நாம் ஒப்புக்கொடுக்கும் காணிக்கைப் பொருளின் தரம் பொருளில் இல்லை.

நமது மனதில் இருக்கிறது.

இறைவன் காணிக்கையாக எதிர்பார்ப்பது பொருட்களை அல்ல, நமது மனதைத்தான்.

நாம் ஒருவரது வீட்டுக்கு போவதாக வைத்துக்கொள்வோம்.

நமக்கு அவர் கொடுக்கும் வரவேற்பின் தரம் 'வாருங்கள்' என்ற வார்த்தையில் இல்லை.

அந்த வாழ்க்கையின் உற்பத்தி இடமான மனதில் இருக்கிறது.

மனதே இல்லாமல் வேறுவழியின்றி "வாருங்கள்" என்று சொல்பவர்களும் உண்டு.

முழுமனதோடு அன்பு பொங்க  "வாருங்கள்" என்று சொல்பவர்களும் உண்டு.

அகத்தின் அன்பு நமது தொனியிலேயே பிரதிபலித்து விடும்.

கடவுள் நம் எல்லோருக்கும் மனத்தை கொடுத்திருக்கிறார்.

எல்லோருக்கும் அன்பையும் கொடுத்திருக்கிறார்.

நமது உண்மையான சொத்து உலகில்  உள்ள பொருட்கள் அல்ல.


இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள அவரது அன்புதான் நமது உண்மையான சொத்து.

நாம் வாழும் பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன்னால்,

 இறைவனது ஒரே சொத்து அன்பும் அவரது மற்ற பண்புகளும்தான்.

ஒரே கடவுளாகிய தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவருக்கும் இடையில் நிலவிய அளவிடமுடியாத அன்பும் மற்ற பண்புகளும்தான்

 துவக்கமே இல்லாத காலத்திலிருந்து திரியேக தேவனின் ஒரே சொத்து.

அன்பின் காரணமாகத்தான் இறைவன் நம்மைப் படைத்தார்.

நம்மைப் படைக்கு முன் நாம் பயன்படுத்துவதற்காக 
நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

நாம் வாழும் உலகம் நிரந்தரமானது அல்ல.

ஆனால் நமக்குள் உள்ள இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள அன்பு நிரந்தரமானது.

நமது ஆன்மா அழியாதது போலவே நமது அன்பும் அழியாது.

கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள அன்பைத்தான் நம்மிடமிருந்து காணிக்கையாக எதிர்பார்க்கிறார்.

அந்த அன்பையும் முழுமனதோடு கொடுக்க வேண்டும்.

நாம் பயன்படுத்தும் பொருட்களையும் காணிக்கையாக கொடுக்கிறோம்.

காணிக்கைப் பொருள்களின் அளவு எவ்வளவு என்று இறைவன் பார்ப்பதில்லை.

கொடுப்பதை முழுமனதோடு கொடுக்கிறோமா என்றுதான் பார்க்கிறார்.

கோவிலில் காணிக்கை போட்ட கைம்பெண் தன்னிடம் இருந்த மொத்த சொத்தாகிய இரண்டு செப்புக் காசுகளையும் தனது முழு மனதோடு காணிக்கையாக போட்டாள்.

வசதி உள்ளவர்கள் காணிக்கையாக போட்ட  பொருளின் அளவு அதிகமாக இருந்திருக்கலாம்.

ஆனால் அதில் முழுமை இல்லை.

கைம்பெண்ணோ தன்னிடம் இருந்ததை எல்லாம் முழுமனதோடு காணிக்கையாக போட்டாள்.


காணிக்கை என்று சொல்லும்போது கோவில்  உண்டியலில் போடப்படும் காணிக்கையை மட்டும் குறிக்கவில்லை.

நமது அன்றாட வாழ்க்கையில் நம்முடன் வாழும் மனிதர்களில் தேவைப்படுவோருக்கு நாம் கொடுக்கும் உதவியும்   காணிக்கை தான்.

ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும்போது இறைவனைக்கே  கொடுக்கிறோம்.

தேவைப்படுவோருக்கு தாராளமாக கொடுப்போம்.

முழு மனத்தோடு கொடுப்போம்.

நாம் எந்த அளவையால் அளக்கிறோமோ,அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும்.

நாம் கொடுப்பது அழியக்கூடிய பொருள். நமக்கு கிடைக்கப்போவது அழியாத நித்திய பேரின்பம்.

கொடுப்பதை ஆண்டவருக்காக கொடுப்போம்.

நமது மனத் திருப்திக்காகவோ, சுயவிளம்பத்திற்காகவோ கொடுக்கக் கூடாது.

அப்படிக் கொடுத்தால் நமக்கு கிடைக்க வேண்டிய பலன் இங்கேயே கிடைத்துவிட்டது என்று அர்த்தம். விண்ணுலகில் எதுவும் இருக்காது.

கொடுப்போம்.
முழு மனதுடன் கொடுப்போம்.
அன்பைக் கலந்து கொடுப்போம்.
ஆண்டவருக்காகக் கொடுப்போம்.
தாராளமாகக் கொடுப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment