Monday, June 21, 2021

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள்." (மத். 7:13)

 "இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள்." (மத். 7:13)

S.S.L.C தேர்வுக்கு தங்களையே தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு வகுப்பு.

மாணவர்கள் பலர்.

ஒவ்வொருவரும் ஒரு விதம். 

சிலர் ஒரு முக்கியமான குறிக்கோளோடு தேர்வில் முதல்தரமான மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகத் தங்களையே தயாரித்துக்
 கொண்டிருக்கிறார்கள்.

சிலர் அந்த வகுப்பில் படிக்க நேர்ந்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தங்களைத்  தேர்வுக்காக தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


State First மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கோடு ஒருவன் தன்னைத் தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறான். 

பாடங்களை தேர்வுக்காக படிப்பதற்காகவே 

 என்னென்ன பாடத்தை எப்போ எப்போ படிக்க வேண்டும், 

எப்போ படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும், 

ஒவ்வொரு பாடத்தையும் எத்தனை முறை படிக்க வேண்டும், 

எப்போது சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் 

என்பதற்கான கால அட்டவணை போட்டு அதை கண்டிப்பான முறையில் பின்பற்றி வருவான்.

பாடங்களையும் தேர்வுகளையும் தவிர வேறு எண்ணம் அவன் மனதில் இருக்காது.

இரவில் தூங்குவதற்காக படுத்திருக்கும் போது கூட தூக்கம் வருவதற்கு முன்னால் ஏதாவது ஒரு பாடத்தை மனதில் திருப்பி பார்த்துக் கொண்டிருப்பான். 

கடிவாளம் போட்ட குதிரையால் அங்கும் இங்கும் பார்க்க முடியாது.

போகவேண்டிய வழி மட்டும் தெரியும்.

அவனது கால அட்டவணை அவனுக்கு ஒரு கடிவாளம்.

அப்படிப்பட்டவன் தேர்வு எழுதி, எதிர்பார்த்ததைவிட அதிகமான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவான்.

ஆனால், இன்னொருவனுக்கு தேர்வைப் பற்றியோ, மதிப்பெண்களை பற்றியோ கவலை இல்லை.

 அவனுக்கு இருக்கும் கவலையெல்லாம் நேரம் போகவேண்டும்.

புத்தகத்தை கையில் எடுக்கும் நேரத்தை விட  T.V பார்ப்பதற்கும்,
cell phone ஐ நோண்டுவதற்கும் இருக்கும் நேரம் அதிகமாக இருக்கும்.

நேரம் ஜாலியாக போகும்.

ஆனால் தேர்வும் 'அம்போ' என்று போய்விடும்.

இப்படித்தான் ஆன்மீக வாழ்விலும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.

ஒரு வகையினர் மனதில் இறைவனும் விண்ணகமும் தவிர வேறு எதுவும் இருக்காது.

உலகில் செலவிடும் ஒவ்வொரு வினாடியையும் இறைவனுக்காகவே செலவிடுவார்கள்.

தேவ திரவிய அனுமானங்களை பெறுதல்,

 இறைவனைத் தியானித்தல்,

 பிறருக்கு உதவி செய்தல்,

 என்ன துன்பம் வந்தாலும் இறைவனுக்காக தாங்கிக்கொண்டு அதை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தல்,

 இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் 

போன்ற ஆன்மீக காரியங்களுக்கு தங்களது முழு வாழ்க்கையும் அர்ப்பணித்து விடுவார்கள் 

இவர்கள் பயணிக்கும் ஆன்மீகப் பாதை மிக குறுகலானது.

ஜாலியான வாழ்க்கைக்கு இவர்களிடம் ஒரு நொடி கூட இடம் இல்லை.

இவர்கள் ஈட்டும் செல்வம் முழுக்க முழுக்க அருட்செல்வம் மட்டுமே.

தங்களிடம் இருக்கும் பொருள் செல்வத்தை கூட தர்மத்தின் மூலம் அருள்செல்வமாக மாற்றி விடுவார்கள்.

மரணத்தை நினைத்தால் பயப்பட மாட்டார்கள், 

அது இவர்களுக்கு விண்ணகத்தின் வாசல்.

பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கும்போது ஒரு பாடவேளை முடிந்து அடுத்த  பாடவேளை ஆரம்பிப்பதுபோல,

மரணம் முடிவுள்ள உலகப் பாடவேளை முடிந்து, முடிவில்லாத விண்ணகப் பாடவேளை    ஆரம்பிப்பதற்கான மணி மட்டுமே!

பள்ளிக்கூடம் முடிந்து  வீட்டுக்கு போகச் சொல்லும் மணியை மாணவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுபோல் 

இவர்களும் மரணத்தை 
 ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நமது வீடு விண்ணகம் தானே!

இன்னொரு வகையினரின் மனதில் இவ்வுலகமும், இவ்வுலகின்  இன்பங்களை அனுபவிப்பதற்கான ஆசை மட்டுமே இருக்கும்.

இவ்வுலகு நிரந்தரமற்றது என்று தெரிந்திருந்தும் அதன் இன்பங்களை முடிந்த மட்டும் அனுபவித்து விடுவோமே என்ற ஆவலில் 

மறுஉலக பேரின்பங்களை தியாகம் செய்துவிட்டு,  இவ்வுலக வாழ்க்கையை இஷ்டம்போல் வாழ்பவர்கள் இவர்கள்.

கடவுளுடைய கட்டளைகளுக்கு கட்டுப்படாமல்  வாழ்பவர்கள்.

இவர்களில் சிலருக்கு  மறுஉலக பேரின்ப வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.

இவர்கள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்றும், இறை விசுவாசிகளை குருட்டு நம்பிக்கை உள்ளவர்கள்  என்றும் நினைத்துக்கொள்வார்கள். 

சிலருக்கு நம்பிக்கை இருந்தும் அதைப்பற்றி கவலை படுவது இல்லை.

இந்த உலக சிற்றின்பங்களுக்கு கவர்ச்சி அதிகமாகையால் அக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவற்றின் பின்னே செல்வார்கள்.

அவர்கள் பயணிக்கும் பாதை மிக அகலமானது.

ஆட்டம் பாட்டங்கள் நிறைந்தது.

உலக இன்பங்களை அனுபவிப்பதே இவர்களது குறிக்கோளாக இருப்பதால் மரணத்தை நினைத்தாலே பயப்படுவார்கள்.

ஏனெனில் அது அவர்களது சிற்றின்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவதோடு,

பேரிடர் வாழ்வுக்கு ஆரம்பமாகவும் மாறிவிடும்.

ஆகவேதான் ஆண்டவர் விண்ணக வாழ்வுக்கு ஆசைப்படுபவர்கள் எல்லோரும் "இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள்"

என்கிறார்.

ஆண்டவர் சொற்படி நடப்போம்.

செப, தவங்கள் நிறைந்த,

இறைவனது கட்டளைகளுக்கு கட்டுப்பட்ட,

சிலுவைகள் நிறைந்த,

தேவ திரவிய அனுமானங்களால் அருள் வரங்கள் நிறைய பெறுகின்ற,


லௌகீகம் கலவாத ஆன்மீக வாழ்வை தேர்ந்தெடுத்து 

அதன்படி நடந்து நிலைவாழ்வை அடைவோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment