Monday, June 28, 2021

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" (மத். 8:20)

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" 
(மத். 8:20)

மறைநூல் அறிஞன் ஒருவன் வந்து, "போதகரே, நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்லுவேன்" 
என்றான்.

இயேசு அவனிடம் "என் பின்னால் வா" என்றோ, " வர வேண்டாம்" என்றோ சொல்லவில்லை.

ஆனால் அவரை பின் சென்றால் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக் காண்பிக்கின்றார்.

 அந்த கஷ்டங்களை அவரோடு சேர்ந்து அனுபவிக்க தயாராக இருந்தால் அவரை பின் செல்லலாம்.

பகலெல்லாம் நற்செய்தி அறிவிப்பிற்காக  நடந்தே நிறைய இடங்களுக்கு சென்று வந்தபின் மாலையில் களைப்பாக இருக்கும்.

இரவில் படுத்து ஓய்வு எடுப்பதற்கு கூட சொந்தமாக ஒரு இடம் அவருக்கு இல்லை.

பெரும்பாலாக இரவு பொழுதை இயேசு ஜெபத்திலேயே செலவழித்தார்.

நரிகளுக்கு கூட தங்குவதற்கு இடம் உண்டு. பறவைகளுக்கு தூங்குவதற்கு கூடுகள் உண்டு.

ஆனால் இயேசுவுக்கு ஓய்வு எடுக்கக்கூட சொந்தமாக எந்த இடமும் இல்லை.

அவருடைய கஷ்டங்களில் பங்கெடுத்துக் கொள்ள தயாராக இருந்த சீடர்கள் மட்டும் அவர் எங்கு சென்றாலும் பின்னாலே சென்றார்கள். 

இயேசுவால் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத போது அவர்களாலும் இரவில் தூங்கி ஓய்வெடுக்க முடியாது.

 இயேசுவோடு சேர்ந்து அவர்களும் அவர் அனுபவித்த கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்தார்கள்.


மறைநூல் அறிஞனும் இயேசுவோடு  கஷ்டங்களை அனுபவிக்க தயாராக இருந்தால் அவரை பின் செல்லலாம்.

தயாராக இல்லாவிட்டால் பின்செல்ல முடியாது.


அவருடைய சீடர்களுள் இன்னொருவன் அவரை நோக்கி, "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர விடை கொடும்" என்றான்.

22 இயேசு அவனைப் பார்த்து, "என்னைப் பின்செல். இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்" என்றார்.

இவர் இயேசுவை பின் செல்ல தயாராக இருக்கிறார்.

 ஆனால் அதற்கு முன் அவரது சொந்த வேலை ஒன்று வீட்டில் காத்திருக்கிறது. அதை முடித்துவிட்டு இயேசுவை பின் செல்ல வேண்டும் என்று 
ஆசிக்கிறார்.

அதற்கும் இயேசு சம்மதம் தெரிவிக்கவில்லை.

வீட்டில் உள்ள வேலையை அங்குள்ள மற்றோர் கவனித்து கொள்வார்கள்.

இயேசுவை பின்பற்றுவதாக இருந்தால், 

முதலிடம் மட்டுமல்ல, 

முழு இடமும் அவருக்காகத்தான் இருக்க வேண்டும்.

உலகத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு இயேசுவை பின்பற்ற நினைத்தால்,

 உலகத் தேவைகளே 
நமது நேரத்தில் பெரும்பகுதியை காலி செய்துவிடும்.

அத்தேவைகள் நமக்கு உரியனவாக இருந்தாலும்,

 அவைகளைப் பற்றி கவலைப்படாமல் 

இயேசு ஒருவரையே  நினைத்து, அவருக்காக மட்டும் நமது நேரத்தை முழுவதும் செலவழித்தால் 

நமது தேவைகள் எப்படியாவது பூர்த்தி செய்யப்பட்டு விடும்.

இயேசுவின் பணியில் நம்மை முழுவதும் அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு.

இயேசு இந்த இருவருக்கும் கூறிய வார்த்தைகள் அவர்களுக்கு மட்டுமல்ல, 

பிற்காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய விரும்பும் எல்லோருக்கும் பொருந்தும்.

 இறைவன் தனது பணிக்கு நம்மை அழைக்க விடுக்கும் அழைப்புக்கு தேவ அழைத்தல் என்று பெயர்.

தேவன் நம்மை அழைக்கிறார்  என்ற உணர்வு நமது மனதில் தோன்றியவுடன் 

அதற்கு பொருத்தமானவர்களாக நம்மையே மாற்றிக்கொள்ளும் வேலையில் இறங்க வேண்டும்.

இறைப்பணி என்பது பஞ்சு மெத்தை போன்றது அல்ல, படுத்து ஓய்வெடுக்க.

முட்கள் நிறைந்த பாதை. அன்று இயேசுவின் தலைக்கு யூதர்கள் முள் முடியைச் சூட்டியது போல,

நமது கால்களுக்கு சூட்டப்படும்.

முட்களின் மேல் நடந்து செல்வது இன்பகரமான காரியமல்ல.

சொட்டும் ரத்தத்தையும்  ஏற்படும் வலியையும் தாங்கிக் கொண்டு உற்சாகமாக நடக்க முடிந்தவர்கள் தான் இறைப்பணிக்கு அருகதை ஆனவர்கள்.

இறைப்பணிக்கு தன்னையே அர்ப்பணித்த அன்னை மரியாள் வாழ்நாளில் வியாகுல மாதாவாகத்தான் வாழ்ந்தாள்.

இயேசு அவளது உதரத்தில் கருத்தரித்த உடனே பிறர்பணி ஆற்றுவதற்காக எலிசபெத்தம்மாள் 
இல்லம் நோக்கி கரடு முரடான பாதை வழியே பல மைல்கள்  நடந்தாள்.

மூன்று மாதங்கள் எலிசபெத்துக்குக்கு சேவை செய்தாள்.

 நாசரேத்து ஊரில் சூசையப்பருக்கு  வீடு இருந்தும், இயேசு தான் பிறப்பதற்கு ஒரு மாட்டுக் குடிலை தேர்ந்தெடுத்து 

தனது அன்னையையும், வளர்ப்புத் தந்தையையும், 

பெத்லகேம் நகருக்கு பல மைல்கள் பிரயாணம் செய்ய செய்தார்.

இயேசு பிறந்த பின் அவரை எடுத்துக்கொண்டு, மாதாவும் சூசையப்பரும் மூன்று ஆண்டுகள் எகிப்தில் நாடோடிகளாக மறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.

திரும்பி வந்தவுடன் நாசரேத்து ஊரில் தச்சு வேலை செய்துதான் உணவு உண்ண வேண்டியிருந்தது.

ஐந்து அப்பங்களை 5000 பேருக்கு பங்கு வைக்க தெரிந்த இறைவன் தனது பெற்றோர்களை தச்சு வேலை செய்துதான் பிழைக்க வைத்தார்.

அது மட்டும் இல்ல தன்னை வளர்த்த தந்தையை வாதநோயினால்தான் மரிக்க இயேசு சித்தமானார்.

பொது வாழ்வின்போது ஆயிரக்கணக்கானோருக்கு நோய்களை குணமாக்கிய இறைமகன் தன்னை  வளர்த்தவரைக் குணமாக்கவில்லை.

இறை பணி என்பது சொகுசான வாழ்க்கை அல்ல என்பதற்கு மாதாவும், சூசையப்பருமே  சான்று.

இறைப்பணி என்றாலே கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை.

பாடுகள் பட்டு மரித்த தேவனுக்கு ஊழியம் செய்வோரும் பாடுகள் பட்டு தான் ஆக வேண்டும்.

 குருத்துவ வாழ்க்கை   சொகுசான வாழ்க்கை என்று நம்மவர்கள் நினைக்கிறார்கள்.

தேவ அழைத்தலை ஏற்று குருவானவர் ஆகிவிட்டால் 

தங்க இடமும், உடுத்த உடையும், உண்ண உணவும் இலவசமாக கிடைக்கும்.

வயலில் வேலை செய்வது போல் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய அவசியமில்லை.

பயணம் செய்ய பைக் கிடைக்கும், கார் கூட கிடைக்கும். வரவேற்று உபசரிக்க ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பார்கள்.

படிப்பதற்கு வெளி
நாட்டிற்கெல்லாம் போகலாம்.

என்றெல்லாம் மக்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

குருக்கள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதைப் பார்த்து அவர்கள் ஏதோ சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக  அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் குருத்துவ வாழ்க்கையைப் போல் கஷ்டமான வாழ்க்கை எதுவும் இருக்க முடியாது.

முதலில் அவர்கள் ஆற்ற வேண்டியது முழுக்க முழுக்க இயேசுவுக்கான பணி.

இறைப்பணியில் உலக சொகுசுகள் எதுவும் கிடையாது.

இயேசு சொகுசாக வாழ்ந்தாரா?
இல்லையென்றால் அவருக்கு பணி செய்பவர்கள் எப்படி சொகுசாக வாழ முடியும்?


இயேசுவின் நற்செய்திப் பணியில் அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது.

அதே பணி தான் குருக்களுக்கும்.

நற்செய்தியை எல்லோருக்கும் அறிவித்தல், 

எல்லோருக்கும் தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல், 

எல்லோருக்கும் ஆன்மீக உணவை அளித்தல்,

எல்லோருக்கும் ஆன்மீக வழிகாட்டுதல், 

ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து, அங்கு நிலவும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்

இவையும், இவையோடு நெருங்கிய தொடர்பு உடையவையும்தான்

குருக்களின் முழுநேரப் பணி.

இந்த ஆன்மீக பணியை நிறைவேற்ற  அவர்கள் உலகில் வாழ வேண்டும்.

உலகில் வாழ்வதே ஆன்மீக பணிக்காகத்தான்.

உலகில் வாழத் தேவையான இருக்க இருப்பிடம்,  உண்ண உணவு, உடுக்க உடை ஆகியவற்றை இறைவனே தனது திருச்சபை வழியாக பூர்த்தி செய்கிறார்.

இயேசு தலை சாய்க்க கூட இடம் இல்லாதிருந்ததை போலவே,

அவருக்கு ஊழியம் செய்பவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் சொந்த வீடே கிடையாது!

நாம் உழைத்தோ, வங்கியில் கடன் வாங்கியோ சொந்தமாக வீடுகள் கட்டி அவற்றில் வாழ்கிறோம்.

ஆனால் ஒரு பங்கு குருவானவருக்கு பங்கு   அறை வீடு சொந்தமானது அல்ல.

நாம் வாங்குகிற சம்பளத்தில் நமக்கு வேண்டியதை நாமே வாங்கி சாப்பிடுகிறோம்.

ஆனால் இயேசு எப்படி பொதுவாழ்வின் போது மக்கள் கொடுத்ததை வாங்கி சாப்பிட்டாரோ,

அதே போல்தான் இறை ஊழியர்களும் எந்த மக்களிடையே ஊழியம் செய்கின்றார்களோ அவர்கள் கொடுத்த உணவைத் தான் சாப்பிட முடியும்!

உண்மையில் இறை ஊழியர்களுக்கு சொந்தமாக எதுவும் இல்லாததினால் தான்

திருச்சபை 

"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்" 

என்று கட்டளையே கொடுத்திருக்கிறது!

வேத போதக நாடுகளில் ஊழியம் செய்வோம் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று அவர்களோடு வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.

 
எவ்வளவு கஷ்டமாக வாழ்ந்தாலும் அவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் அவர்கள் பணிபுரியும் இயேசுவின் வாக்குறுதி.

"என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.

12 அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும்." 
(மத். 5:11,22)

 பாடுகளின் போது இயேசு யூதர்களால் எவ்வளவு வசைக் கூற்றுகளால் அவமானப்படுத்தப்பட்டார் என்று நமக்கு தெரியும்.

அவ்வளவும் அவரது ஊழியர்களுக்கும் கிடைக்கும்.

அந்த வசைகள் உட்பட அவர்களது  வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் 

இயேசுவுக்காக ஏற்றுக்கொள்வதால் வானகத்தில் கிடைக்கப்போகும் கைம்மாறுதான் அவர்களை எப்பொழுதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறது.

தங்களுக்கு உரிய   யாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிய அவரது சீடர்களும்,

அவர்களுக்குப் பின்னால் இயேசுவின் ஊழியத்திற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்களும் 

தங்களது சீடத்துவ வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தோடு,

இயேசுவுக்காக மறைசாட்சிகளாக தங்களது உயிர்களை தியாகம் செய்தார்கள்.

வேதசாட்சிகளின் இரத்தம்தான் திருச்சபையை 
வளர்த்திருக்கிறது.

இயேசுவுக்காக கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு,

அவருக்காக மட்டுமே வாழ விரும்புகிறவர்கள் மட்டுமே அவரது பணிக்கு வருகிறார்கள்.

அவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

குருத்துவ வாழ்க்கை சொகுசான வாழ்க்கை என்று தவறாக எண்ணி அதற்காக வருகின்றவர்களுக்கு

 வாழ்நாளில் மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியாகி விடும்.

ஏனெனில் தங்களது சிலுவையை சுமந்துகொண்டு இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு மட்டுமே விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கும்.

விண்ணக சன்மானமே இறை ஊழியர்களின் உற்சாகத்துக்கு உணவு.


இயேசுவைப்போல வாழ்ந்து, அவருக்காக உழைப்பவர்களே இறை ஊழியர்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment