"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத். 6:1)
நாம் நேசிப்பவர்களுக்காக ஒரு காரியம் செய்யும்போது அது அவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக மட்டுமே செய்வோம்,
தெருவில் வருகிறவர்கள், போகிறவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக அல்ல.
உதாரணத்திற்கு, மனைவியின் பிறந்தநாள் அன்று பிறந்தநாள் பரிசாக கொடுப்பதற்காக ஒரு சேலை வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அவளுக்கு பிடித்த கலர், பிடித்த
Designல் அவளது மகிழ்ச்சிக்காக மட்டுமே வாங்குவோம். மற்றவர்களது மகிழ்ச்சிக்காக அல்ல.
வாங்கும்போது பார்க்கின்ற ஒருவர் இந்த Design நன்றாக இல்லை என்று சொன்னால்அதைப்பற்றி நாம் கவலைப்பட மாட்டோம்.
மனைவிக்குப் பிடிக்க வேண்டும்! அவ்வளவுதான்!
இறைவன் தனது அன்பின் காரணமாக
நம்மைப் படைத்திருக்கிறார்.
உலகிலுள்ள மற்ற எல்லாவற்றையும்விட நாம் இறைவனை மட்டுமே அதிகமாக அன்பு செய்ய வேண்டும்.
அவருக்காக மட்டுமே நாம் வாழ்கிறோம்.
நமது வாழ்வின் ஒவ்வொரு செயலும் அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்.
அவருக்காக வாழ்வதால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அவருக்காக மட்டுமே செய்ய வேண்டும்.
அவருக்காக வாழும் நமக்கு விண்ணரசை பரிசாக தரவிருக்கிறார்.
அவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விண்ணரசில் சன்மானம் தரவிருக்கிறார்.
நமது திருப்திக்காக,
நமது சுய விளம்பரத்திற்காக, மற்றவர்கள் முன் நாம் நல்ல பெயர் வாங்குவதற்காக
நாம் செய்யும் எந்த நிகழ்ச்சியும் நமக்கு விண்ணகத்தில் சம்பாவனை எதையும் சம்பாதிக்கப் போவதில்லை.
நமது திருப்தியும்,
நமது சுய விளம்பரமும்,
நாம் பெற்ற நமது சுய விளம்பரமும்,
நாம் பெற்ற நல்ல பெயருமே நமக்கு இவ்வுலகில் கிடைக்கும் அழிந்து போகும் சம்பாவனை.
அழிந்து போகும் சம்பாவனையால் நமக்கு என்ன பயன்?
அழியாத சம்பாவனையைப் பெற வழி இருக்கும்போது, அழிந்து போகும் சம்பாவனையைப் பெற ஏன் முயற்சிக்க வேண்டும்?
ஆகவேதான் ஆண்டவர் சொல்கிறார்
"நீ தர்மம் கொடுக்கும்போது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம்.
நீ செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்: மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.
நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் மற்றவர்களின் பார்ப்பதற்காகவே செய்ய வேண்டாம்.
உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய்.
மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்."
இப்படி சொல்லும்போது ஆண்டவர்,
" கோவிலுக்கு போக வேண்டாம்,
பொது செப வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டாம், வீட்டிலிருந்து செபம் சொன்னால் போதும்"
என்று சொல்லவில்லை.
தனிப்பட்ட முறையில் வீட்டிலிருந்து செபம் சொன்னாலும்
சமூக உறுப்பினர் என்ற முறையில் கோவிலில் நடைபெறும் சமூக வழிபாட்டிலும் கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பலி திருச்சபை என்னும் குடும்ப சமூகத்தின் பொது வழிபாடு. இதில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்.
ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது, திருப்பலியில் கலந்து கொள்வது மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல.
இறைவன் நம்மை பார்த்தால் போதும்.
புதிய ஆலயம் கட்டுவதற்காக ஒருவர் நன்கொடை பிரித்துக் கொண்டிருந்தார்.
நண்பர் ஒருவரிடம் சென்று நன்கொடை கேட்கும்போது,
"ஒரு ஆயிரம் ரூபாய் எழுதிக் கொள்ளுங்களேன்" என்றார்.
நன்கொடை பிரிப்பவர்,
"5000 ரூபாய் கொடுத்தால் உங்களது பெயரை புதிய ஆலய அர்ச்சிப்பிற்கான அழைப்பிதழில் போடுவோம்.
பத்தாயிரம் ரூபாய் கொடுப்பவர்களின் பெயர்களை கல்வெட்டில் எழுதிக் கோவில் முகப்புச் சுவரில் பதிப்போம்." என்றார்.
" எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அவர்களின் பெயர்கள் கல்வெட்டில் அழியாமல் இருக்கும். வருவோர் போவோர் எல்லாம் வாசிப்பார்கள். அப்படித்தானே?" நண்பர் சொன்னார்.
நன்கொடை பிரிப்பவரும்,
"ஆமாம்" என்றார்.
நண்பர் உடனே
"அப்போ பத்தாயிரம் எழுதிக்கொள்ளுங்கள்."
என்றார்.
இந்த நன்கொடை சுவருக்கு மட்டும்தான் போகும், இறைவனுக்குப் போகாது!
ஒரு சின்ன கதை.
கதை கற்பனைதான்,
ஆனால் கருத்து உண்மை.
ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க.
அந்தப் பாட்டிக்கு அந்த ஊர்ல "பரோபகார பாட்டி" என்று பெயர்.
ஏனெனில் அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டக் கூடியவர்கள்.
அவர்களால் இயன்ற எல்லா உதவிகளையும் கேட்டவர்களுக்கு எல்லாம் செய்வார்கள்.
அதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
90 ஆண்டுகள் வாழ்ந்தபின் ஒரு நாள் விண்ணகம் சென்றார்கள்.
விண்ணக வாழ்வை வாயிலை அடைந்தவுடன் அங்கு நின்று கொண்டிருந்த இராயப்பர்,
"பாட்டி கொஞ்சம் இந்த பக்கம் வாருங்கள்!"
"வாயில்தான் திறந்திருக்கிறதே நான் உள்ளே போவதற்கு என்ன தடை?"
"தடை ஒன்றும் இல்லை. இங்கு வந்து கொஞ்சம் உட்காருங்கள்."
பாட்டியும் உட்கார்ந்தார்கள். அவர்கள் முன்னால் ஒரு மேஜை இருந்தது.
ஒரு சம்மனசு மூடியிருந்த ஒரு பெரிய பானையை கொண்டு வந்து பாட்டியின் முன்னால் மேஜையின்மேல் வைத்தார்.
"இராயப்பரே, என்ன இது பானை?"
"இதற்குப் பெயர் பரோபகார பானை."
"என் பெயரை இதற்கு யார் வைத்தது? ஊரில் எல்லோரும் என்னை பரோபகார பாட்டி என்று தான் அழைப்பார்கள்."
"பாட்டி, நீங்கள் உலகில் இருக்கும் போது மற்றவர்களுக்கு உதவி செய்தால், ஒவ்வொரு உதவி செய்யும் போதும் ஒரு ரோஜா பூ வந்து இந்த பானைக்குள் விழும்.
அப்படி விழுந்த பூக்களெல்லாம் இந்த பானைக்குள்தான் இருக்கும்.
எத்தனை பூக்கள் விழுந்தன என்று யாருக்கும் தெரியாது.
இப்பொழுது ஒரு சம்மனசு பானையை திறந்து பூக்களை எண்ணுவார்.
பூக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி மோட்சத்தில் உங்களுக்கு சம்பாவனை கிடைக்கும்.
புரியுதா?"
"நன்றாகவே புரிகிறது. நான் கோடிக்கணக்கான உதவிகளை செய்திருக்கிறேன். அப்படியானால் எனக்கு சம்பாவனை நிறைய கிடைக்கும்."
"கோடிக்கணக்கான உதவிகளா?
பூக்களை எண்ணிப் பார்த்து விடுவோமே.
ஹலோ! சம்மனசு! பானையைத் திறந்து பூக்களை எண்ணுங்கள்."
சம்மனசு பானையைத் திறந்தார்.
பாட்டி பானைக்குள் எட்டி பார்த்தாள். ஒரே ஒரு பூ தான் கிடந்தது.
"என்ன இராயப்பரே! ஒரே ஒரு பூ தான் கிடக்கிறது! என் கணக்குப்படி கோடிக்கணக்கான பூக்கள் கிடக்க வேண்டுமே! இங்கேயும் திருடன் வருவானா?"
"இங்கேயும் ஒரு திருடன் இருக்கிறான். அவன் நல்லவன், இயேசுவுடன் வந்தவன்.
ஆமா, பாட்டி, மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது பதிலுக்கு புகழ்ச்சியை எதிர் பார்த்தீர்களா?"
''சந்தேகம் இல்லாமல். எல்லோருமே புகழ்வார்கள். பாராட்டு கூட்டங்கள் கூட போட்டிருக்கிறார்கள். நான் புகழ்ச்சிக்காகவே உதவி செய்வேன்! அதில் என்ன தப்பு?"
''அப்போ அதற்கான சம்பாவனை உலகத்திலேயே கிடைத்துவிட்டதே!"
"என்ன சம்பாவனை?"
"மற்றவர்கள் செய்த புகழ்ச்சியும் உங்கள் சந்தோசமும்தான்!
ஆண்டவரின் மகிமைக்காக செய்த உதவிகளுக்கு மட்டும்தான் பூக்கள் வரும்.
ஒரே ஒரு உதவியை மட்டும் ஆண்டவரின் மகிமைக்காக செய்திருக்கிறீர்கள்.
அதற்கான சம்பாவனை உள்ளே காத்துக் கொண்டிருக்கிறது.
உள்ளே போகலாம்!"
பிறருக்கு உதவி செய்வோம்,
நமது திருப்திக்காக அல்ல.
ஆண்டவரது மகிமைக்காக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment