"இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்."
(மத். 5:19)
கடவுள் மோயீசன் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார்.
இயேசு 10 கட்டளைகளையும் 2 கட்டளைகளில் அடக்கினார்.
1.உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக.
2. உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக.
அடுத்து, தனது பாடுகளுக்கு முந்திய நாள் இரவு இறுதி உணவின்போது
இயேசு ஒரு புதிய கட்டளையை கொடுக்கிறார்.
"நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.
நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
இயேசு கொடுத்த புதிய கட்டளையில் அவர் முதலில் கொடுத்த இரண்டு கட்டளைகளும் அடங்கியிருக்கின்றன.
இறைவனை அன்பு செய்கின்றவர்கள் ஒருவரை ஒருவர் கட்டாயம் அன்பு செய்வார்கள்.
அதாவது
ஒருவரை ஒருவர் அன்பு செய்தால் அவர்கள் இறைவனையும் அன்பு செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இரவில் பல்பு எரிந்தால்தான் வெளிச்சம் தெரியும்.
வெளிச்சம் தெரிந்தால் பல்பு எரிகிறது என்று அர்த்தம்.
"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால்
நீங்கள் என் சீடர் என்பதை,
(அதாவது, நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பதை)
எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
சீடன் என்றாலே குருவை நேசிப்பவன் தான். சீடர்கள் இயேசுவை நேசிக்கிறார்கள். அதாவது இறைவனை அன்பு செய்கிறார்கள்.
இதை நாம் எப்படி அறிந்து கொள்வது?
சீடர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றார்கள். ஆகவே இறைவனை நேசிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
இஸ்ரயேல் மக்களுக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்த கடவுளே,
அவற்றை இரண்டாக மாற்றினார்.
அடுத்து இரண்டையும் ஒரே புதிய கட்டளையாக மாற்றினார்.
அவர் கொடுத்த புதிய கட்டளையில் 10 கட்டளைகளும் அடங்கியுள்ளன.
நமது சொல்லாலும், செயலாலும் இயேசுவையும், அவரது போதனைகளையும், கட்டளைகளையும் மற்றவர்களுக்கு அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
செய்தியை அறிவித்தல் இயேசுவை நேசிக்கும்,
அதாவது,
இயேசுவின் சீடர்களாக இருக்கும் அனைவரின் கடமை.
மற்றவர்களுக்கு அறிவிக்கும் முன்னால் நாம் அவற்றை கடைபிடிக்க
கடமைப்பட்டிருக்கிறோம்.
அன்பே உருவானவர் இயேசு. நாம் அன்பு செய்யாமல் எப்படி அவரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவது?
முதலில் இயேசுவை அன்பு செய்வோம்.
அவரை அன்பு செய்தால் அவரது விருப்பத்தை கட்டாயம் நிறைவேற்றுவோம்.
அதாவது அவரது கட்டளைகளை அனுசரிப்போம்.
அடுத்து அவரது கட்டளைப்படியே அனைவரையும் அன்பு செய்வோம்.
சிந்தனையாலும், சொல்லாலும் மட்டும் அன்பு செய்தால் போதாது.
உள்ளத்தில் உள்ள அன்பு நமது செயலில் வெளிப்பட வேண்டும்.
முதலில் நாம் கட்டளைகளின்படி வாழ்வோம்.
மற்றவர்களும் நம்மைப் பார்த்து வாழ்வார்கள்.
வாழ்வோம்.
வாழவைப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment