Thursday, June 3, 2021

"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல்"( மாற்கு. 12:31)

 "உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல்"
( மாற்கு. 12:31)

கடவுளை 
 நமது முழு உள்ளத்தோடும்,
 நமது முழு ஆன்மாவோடும்,
  நமது முழு மனத்தோடும்
 நமது முழு வலிமையோடும் 
அன்பு செய்ய வேண்டும். 

இது இறைவன் நமக்கு அளித்துள்ள முதல் கட்டளை.

அடுத்து நம்மை நாம் அன்பு செய்வது போல நமது அயலாரை அன்பு செய்ய வேண்டும்.

இது இறைவன் நமக்கு அளித்துள்ள இரண்டாவது கட்டளை.


உங்கள் கையில் 5 மிட்டாய்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்.

இரண்டு நண்பர்கள் உங்களிடம் வருகின்றார்கள்.

ஒரு நண்பர்  உங்களிடம் 

 "உங்கள் கையில்  உள்ளதை முழுவதும் என்னிடம் தந்து விடுங்கள்"

 என்று கூறுகிறார்.

நீங்களும் அவர் கேட்டபடி முழுவதையும் அவரிடமே கொடுத்து விடுகிறீர்கள்.

இப்போது அவர் உங்களிடம்,

" நீங்கள் எத்தனை மிட்டாய்கள்  சாப்பிட விரும்புகிறீர்களோ  அத்தனை மிட்டாய்கள் இவருக்கு கொடுங்கள்."

என்கிறார்.

இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்றுமே செய்ய முடியாது.

ஏனெனில் உங்கள் கையில் ஒன்றுமில்லை.

இது ஒரு உலக அனுபவத்தைப் பற்றிய கற்பனை.

இனி ஆன்ம அனுபவத்திற்குள் வருவோம்.

இறைவன் நாம் அவரை

நமது முழு உள்ளத்தோடும்,
 நமது முழு ஆன்மாவோடும்,
  நமது முழு மனத்தோடும்
 நமது முழு வலிமையோடும்
 அன்பு செய்ய வேண்டும்

என்று சொல்லிவிட்டு,

அடுத்து நம்மை நாம் அன்பு செய்வது போல நமது அயலாரை அன்பு செய்ய வேண்டும்

என்று சொல்கிறார்.

உலகியல் கண்ணோக்கிலிருந்து இந்த இரண்டு கட்டளைகளையும் பார்த்தால்,

நமக்கு இருப்பது ஒரே ஆன்மா, ஒரே மனம்.

நமது ஆன்மாவையும் மனத்தையும் வலிமையையும் முற்றிலுமாக இறைவனுக்கு கொடுத்துவிட்டால்

நம்மிடம் எதுவும் இருக்காது.

நம்மிடம் இல்லாததை நமக்கோ, அயலானுக்கோ எப்படி கொடுப்பது என்ற கேள்வி எழும்.

இது உலக பார்வையில்.

நாம் ஆன்மீகப் பார்வையோடு பார்த்தால் இறைவனது கட்டளைகளில் ஒரு மிகப்பெரிய இறையியல் உண்மை இருப்பது நமக்கு புரியும்.

இறைவன் தன்னுள் திரியேக கடவுளாய் வாழ்கிறார்.

தன்னையே அளவுகடந்த விதமாய் நேசிக்கிற அவர் தனது அன்பை பகிர்ந்து கொள்வதற்காகவே மனிதர்களைப் படைத்தார்.

படைக்கப்பட்ட நாம் 
ஒன்றுமில்லாதவர்களாக இருந்தோம்.

ஆகவே நம்மைப் படைத்த அவருக்கு நாம் முற்றிலும் சொந்தம்.

நாமே நமக்கு சொந்தமானவர்கள் அல்ல.

ஆனாலும் நம்மை படைத்தவர் தன்னை தந்தையே என்று அழைக்க நமக்கு முழு உரிமையையும் கொடுத்திருக்கிறார்.

தந்தை என்ற முறையில் அவர் மீது உரிமை கொண்டாட நமக்கு உரிமையும் தந்திருக்கிறார்.

மக்கள் என்ற முறையில் நாம் அவருக்கு முழுவதும் சொந்தமாக இருப்பது போல தந்தை என்ற முறையில் அவர் நமக்கு முழுவதும் சொந்தமாக இருக்கிறார்.

அளவுகடந்த அவரது அன்பின் அடிப்படையில் அவருக்கு உரியன யாவும் நமக்கும் உரியன.

இது அவரே நமக்குத் தந்த உரிமை.

இந்த வகையில் நாம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்

 நமது ஆன்மாவும், உள்ளமும் முற்றிலும் அவருக்கே சொந்தம்.

அவருக்குச் சொந்தமான நம்மை முழுவதும் மனம் உவந்து  அவருக்கு கொடுப்பதாக சொல்லும்போது நாம் அவரது உறவை மனதார ஏற்றுக் கொள்கிறோம்.

நாம் அவருக்கு சொந்தமானவர்களாக இருப்பதால் நாம் அவருக்கு கொடுப்பவை யாவும் நமக்கும் சொந்தமாகவே இருக்கின்றன.

ஆகவே அவரை முழுமனதோடு நேசிக்கும்போது அவருக்குச் சொந்தமான  நம்மையும் நேசிக்கிறோம் நமது அயலானையும் நேசிக்கிறோம்.

"இறைவனை மட்டும் நேசிக்கிறேன், அயலானை அல்ல"

என்று ஒருவன் சொன்னால்  அவன் பொய்யன்.

அவ்வாறே

அயலானை மட்டும் நேசிக்கிறேன்,
இறைவனை அல்ல

என்று சொல்பவனும் பொய்யன்.

இறைவன் கொடுத்திருக்கிற இரண்டு கட்டளைகளும் 
ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு உடையவை. ஒன்றில்லாமல் இன்னொன்று  இல்லை. 

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

இயேசு மனிதர்களை தன்னுடைய சகோதரர்கள் என்கிறார்.

அப்படியானால் தந்தை இறைவனின் மக்கள்.

நாம் அவர்களுக்குச்   செய்வதை இயேசுவுக்கே செய்கிறோம். அதாவது தந்தைக்கே செய்கிறோம்.

அயலானை நேசிப்பவன் இறைவனை நேசிக்கிறான்.

இறைவனை நேசிப்பவன் அயலானை நேசிக்கிறான்.

ஆகவே நாம் நமது முழு ஆன்மாவையும் முழு உள்ளத்தையும் இறைவனுக்கு கொடுக்கும்போது 

நாமும்,  நமது அயலானும் இறைவனுள் இருப்பதால்,

நாம் நம்மை 
இறைவனுக்கு மட்டுமல்ல 

நமக்கும், நமது அயலானுக்கும் சேர்த்து தான் கொடுக்கிறோம்.

Whatever we give God we give give ourselves and our neighbours.

நாம் நமது அயலானை வெறுத்தால், இறைவனையும் அவருக்குள் இருக்கும் நம்மையும் சேர்த்துதான் வெறுக்கிறோம்.

நாம் நமது அயலானுக்கு ஏதாவது கொடுத்தால் அதை இறைவனுக்கு மட்டுமல்ல நான் நமக்கும் சேர்த்து தான் கொடுக்கிறோம்.

அயலானுக்கு கொடுக்கும்போது  பதிலாக    நமக்கு விண்ணகமே கிடைக்கிறதே!

"வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக.

35 ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.
36 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள். சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள்."

அயலானுக்குக் கொடுத்ததற்காக இறைவனது அரசு முழுவதுமே  நமக்கு உரிமையாகிறதே! 

தான் படைத்த மக்கள் அனைவரையும் தன் உள்ளத்தில் வைத்து 

அளவுகடந்த விதமாய் அவர்களை நேசிக்கிறார் என்ற இறையியல் உண்மையை முதல் கட்டளை நமக்கு உணர்த்துகிறது.
 
நம்மை நாம் நேசிப்பது போல அயலானை எப்படி நேசிப்பது?

மூவொரு கடவுள் நித்திய காலமாக தன்னை நேசிக்கிறார். அவர் தன்னை தானே நேசிப்பது அவரது இயல்பு.

தனது சாயலாக மனிதனை படைக்கும்போது அந்த இயல்பையும் பகிர்ந்து கொண்டார்.

நம்மை நாமே நேசிப்பது நமது இயல்பு.

நம்மை நாமே நேசிப்பதால்தான்  இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுகிறோம். நமது வாழ்வில் நன்மைகள் நிகழ வேண்டும் என்று விரும்புகிறோம். நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 

எப்படி தன்னை தானே நேசிக்கும் கடவுள் தான் நன்றாக இருப்பது போல் தன்னால் படைக்கப்பட்ட மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாறோ

அதேபோல 

நாம் எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நமது அயலானும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

இதைத்தான் நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையாக இறைவன் தந்திருக்கிறார்.

 நித்திய காலமாக விண்ணகத்தில் வாழும் கடவுள் அவரது
 படைப்புகளாகிய நாமும் அவரோடு விண்ணகத்தில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

 அந்த ஆசையின் விளைவுதான் அவர் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு, மரணமடைந்து நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தது.

நாம் நித்திய காலம் இறைவனோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர் தன்னுயிரை நமக்காக பலியாக ஒப்புக்கொடுத்தார்.

தனது மரணத்தின் மூலமாக நமக்கு நித்திய வாழ்வைத்  தந்தார்.

 நாம் வாழ்வதற்காக அவர் மரித்தார்.

அவர் நமக்கு செய்தது போல நாமும் நமது  அயலானுக்கு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவது போல நமது அயலானும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதோடு, அதற்கான உதவிகளையும் செய்ய வேண்டும்.

நாம் விண்ணகம் செல்ல ஆசைப்படுவது போல நமது அயலானும் விண்ணகம் செல்ல ஆசைப்பட வேண்டும்.

விண்ணகம் செல்வதற்காக நாம் எப்படி வாழ்கிறோமோ அதேபோல் நமது அயலானும் வாழ அவனுக்கு உதவ வேண்டும்.

அதற்காகத்தான் அவனுக்கு நற்செய்தியை நாம் போதிக்க வேண்டும்.

அயலானுக்காக நமது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகின்றோமோ

 அப்படியே அவர்களை நாம் நடத்த வேண்டும்.

மற்றவர்கள் நமக்கு என்ன செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ

 அதை நாம் மற்றவர்களுக்கும் செய்யக்கூடாது.

இறைவனை முழுமனதோடு நேசிப்பவர்களுக்கு அவரது பிள்ளைகளை எல்லாம் நேசிக்காமல் இருக்க முடியாது.

இறைவனுக்காக எல்லோரையும் நேசிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment