Wednesday, June 30, 2021

" அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்."(மத்.8:34)

" அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்."
(மத்.8:34)

இயேசு கதரேனர் நாட்டிற்கு வந்தபோது, பேய்பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தனர்.

அவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்றால், அவ்வழியே யாரும் போகமுடியாது.

அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பன்றிகள் பல கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.

பேய்கள் அவரை நோக்கி, "நீர்  எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பும்"  என்றன.

இயேசுவும்  "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே, கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் மடிந்தது.


பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடிப்போய் நகருக்குச் சென்று எல்லாவற்றையும், பேய்பிடித்தவர்களைப்பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள்.

நகரினர் அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்.

இந்த நிகழ்ச்சியில்,  கதரேனர் நாடு யூதர்கள் வாழ்ந்த பகுதி அல்ல.


யூதர்களாய் இருந்திருந்தால் அவர்கள் பன்றிகள் வளர்த்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில்  யூதர்களின் மதச் சட்டப்படி பன்றிக் கறி உண்ணலாகாது.

பேய்கள்  பிடித்திருந்த இருவருமே யூதர்கள் அல்லர்.

  இயேசு அவர்களைக் குணமாக்கினார்.

இப்பகுதியை நாம் தியானிக்க ஆரம்பித்தால் நம்முள் எழும் சில வினாக்களுக்கு நமக்கு விடை கிடைக்காது.

ஏன் பேய்கள் பன்றிகளுக்குள் போக ஆசைப்பட்டன?

தெரியவில்லை.

எப்படியும் பன்றிகள் இறந்துவிடும். அப்போது  வெளியேறித்தான் ஆக வேண்டியிருக்கும்.

ஏன் பன்றிகள்  வளர்த்த கதரேனர் நகரினர் இயேசுவை தம் நாட்டை விட்டு அகலுமாறு  வேண்டினர்?

தெரியவில்லை.

முறைப்படி பார்த்தால் தங்கள் ஊரைச் சேர்ந்த இருவரைக் குணமாக்கியதற்காக அவர்கள் இயேசுவுக்கு நன்றி கூறியிருக்க வேண்டும்.

தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றிருக்க  வேண்டும்.

ஆனால் அவர்கள் இயேசுவை தங்களை விட்டு அகலுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஏன்?

"இயேசு பரிசுத்தர், தாங்கள் பாவிகள், பரிசுத்தரோடு பேச தாங்கள் அருகதையற்றவர்கள் என்று நினைத்து சொன்னார்களா?

தெரியவில்லை.

ஒரு முறை இராயப்பர் கூட இதே வார்த்தைகளை தாழ்ச்சியின் காரணமாக சொன்னார்.

கெனேசரேத்து ஏரியில் நிறைய மீன்களை பிடிக்க புதுமை செய்த இயேசுவின் காலில் விழுந்து, இராயப்பர் "ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" என்றார். ( லூக்.5:8)


"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்." என்று செந்தூரியன் கூட ஆண்டவரிடம் கூறினான். (மத்.8:8)

இராயப்பரும், செந்தூரியனும்  கூறியது தாழ்ச்சியின் நிமித்தமாக என்று ஆண்டவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.

ஆனால் கதரேனர் கூறியது தாழ்ச்சியின் நிமித்தமாக அல்ல.

இருவர் பேய்கள் நீங்கி குணமானதால், குணமானவர்களோ, ஊரினரோ மகிழ்ச்சி அடைந்ததாக தெரியவில்லை. 

நகரினரின் பேச்சை பார்க்கும் போது, தங்களுள் இருவர் குணமானதில் அவர்கள்  மகிழ்ச்சியடையவில்லை. 

மாறாக இருவரை குணமாக்குவதற்காக தங்களது பன்றிகளை இயேசு காலி பண்ணி விட்டாரே என்று நினைத்து இயேசுவின் மேல் கோபப்பட்டது போல் தான் தெரிகிறது.

அவர்கள் மனிதர்களை விட பன்றிகளை அதிகமாக நேசித்தது போல் தெரிகிறது.

பிள்ளையின் நோயைக் குணமாக்குவதற்காக  தனது உடமையை இழக்க தயாராக இருப்பவன் உடமைகளை விட பிள்ளையை அதிகம் நேசிக்கிறான்.

ஆனால் உடமைகளை காப்பாற்றுவதற்காக பிள்ளையை இழக்க தயாராக இருப்பவன்  எப்படிப்பட்டவன்?

அப்படிப்பட்டவர்கள்தான்   அந்நகரினர்.

மற்ற இடங்களில் நோயிலிருந்து குணமாக்கப்பட்டவர்கள் இயேசுவைப் பின்பற்றி போவதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் இங்கு அதற்கு மாறாக குணமாக்கியதற்காக இயேசுதான் அகன்று போக வேண்டியிருக்கிறது!

இந்த நகரினரின் நடத்தையிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

"உன்னை நேசிப்பது போல் உனது அயலானையும் நேசி"

 என்பது தான் இயேசு கொடுத்த கொடுத்த கட்டளை.

"உன்னை நேசிப்பது போல் உனது உடமைகளையும் நேசி." என்று இயேசு சொல்லவில்லை.

 நாம் சொன்னதைச் செய்கிறோமா?

 சொல்லாததைச் செய்கிறோமா?

நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.

திருமணம் ஒரு தேவத் திரவிய அனுமானம்.

ஒரு கத்தோலிக்க குருவானவர் முன்நிலையில்,

இதை நிறைவேற்றுபவர்கள் பெண்ணும், மாப்பிள்ளையும்.

அத்தியாவசியமானவை:

பெண்ணும், மாப்பிள்ளையும்.
அவர்களின் சம்மதம்.
அவர்களோடு எப்போதும் இருக்கவேண்டிய அன்பு.

அத்தியாவசியம் இல்லாதவை.

பணம்.
நகைகள்.
விருந்து.
படிப்பு.
வேலை.
சம்பளம்.

நாம் திருமணத்திற்கு  ஏற்பாடு செய்யும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

அத்தியாவசியமானவைகளுக்கா?
அத்தியாவசியம் இல்லாதவைகளுக்கா?

நம்மில் அனேகர் முக்கியத்துவம் கொடுப்பது மணமக்களுக்கு அல்ல, பொருட்களுக்கே என்பது நமக்குத் தெரியும். 

கதரேனர் மக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

அவர்கள் குணமான அவர்களது அயலான்களுக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைப் பன்றிகளுக்குக் கொடுத்தார்கள்.

நாம் மணமக்களுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைப்
பணத்திற்குக் கொடுக்கிறோம்.

எட்டு மணிக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி

அதே நேரத்தில் ஒரு business meeting.

meeting குக்குப்  போனால் பல  இலட்சங்கள் வருமானம். 
போகாவிட்டால் வருமான இழப்பு.

அநேக business people எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

திங்கட்கிழமை அரசு பொதுத்தேர்வு.

ஞாயிற்றுக்கிழமை மாணவன் திருப்பலிக்கு போவானா?
Tution class க்குப் போவானா?


மதிய உணவுக்கு ஓட்டலுக்கு போவதாக வைத்துக் கொள்வோம்.

மட்டன் பிரியாணி சாப்பிட ஆசை.

ஓட்டலுக்குப் போய்க் கொண்டிருக்கும் போது வழியில் ஒருவன் சாப்பாட்டிற்காக கையேந்துகிறான்.

 மட்டன் பிரியாணி சாப்பிட 500 ரூபாய் ஆகும்.

நமக்கு பிறர் அன்பு இருந்தால்  கையேந்துபவனுக்கு ஒரு சாதாரண சாப்பாட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு,

நாமும் பிரியாணிக்கு பதில் சாதாரண சாப்பாடு சாப்பிடலாமே!

அப்படி செய்தால் பிரியாணியை விட  அயலானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அப்படிச் செய்யாவிட்டால் அயலானை விட சாப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அதுமட்டுமல்ல, ஆண்டவரைவிட பிரியாணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

 ஏனெனில் அயலானுக்குக் கொடுப்பது ஆண்டவருக்குக் கொடுப்பது.

 அயலானுக்குக் கொடுக்காதது ஆண்டவருக்கும் கொடுக்காதது!

 நமது வாழ்நாள் முழுவதிலும் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இறைவனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஓய்வு கிடைக்கும்போது சில சமயங்களில் ஏதாவது கற்பனைகளில் நமது மனதை ஈடுபடுத்துவது நமது வழக்கம், நேரப் போக்கிற்காக.

'வீண் கற்பனைகள் எதற்கும் பயன்படாது.

ஆனால் ஆண்டவரைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தால் இறைவனோடு உள்ள உறவு
நெருக்கமாகும்.

விண்ணகத்தில் பேரின்பம்  அதிகமாகும்.  

அதேபோல பேசும்போதும் பயன் படாத காரியங்களைப் பற்றி அரட்டை அடிப்பதை விட 

ஆன்மிக வாழ்வைப் பற்றி பேசினால் பேசியவருக்கும் பயன், கேட்பவருக்கும் பயன்.

நமது ஒவ்வொரு செயலின் நோக்கமும் இறைவனாக இருக்க வேண்டும்.

இறைவனை விட்டு விட்டு இந்த உலக காரியங்களை பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தால் நமது செயல்பாடுகளும் உலகை சார்ந்தவையாகவே இருக்கும்.

அழியாத விண்ணக  செல்வத்தை விட்டுவிட்டு, அழியக்கூடிய உலக செல்வத்தை ஈட்டி என்ன பயன்?

அயலானது நன்மைக்காக உலக செல்வங்களை தியாகம் செய்ய வேண்டும் என்ற பாடத்தை   கதரேனர் நாட்டினரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

அயலானுக்குச் செய்வதையெல்லாம் இறைவனுக்கே செய்கிறோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment