Tuesday, June 15, 2021

"அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." (மத். 6:7)

"அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." (மத். 6:7)


நிறைய, அலங்காரமான, வார்த்தைகளைப் பயன்படுத்தி செபிப்பதால் இறைவன் அவற்றை விரும்பி கேட்பார் என்று நினைக்கக்கூடாது.

ஏனெனில் ஆண்டவருக்கு நாம் என்ன கேட்கப் போகிறோம் என்று நாம் கேட்கும் முன்னாலேயே தெரியும்.

வார்த்தைகளை சுருக்கிக்கொண்டு நமது மனதை மட்டும் இறைவனில் நிலைநிறுத்த வேண்டும்.

ஆண்டவர் விரும்புவது நமது மனதை மட்டும் தான்.

இயேசு அதிகமான வார்த்தைகளை பயன் படுத்தாமல் சுருக்கமாக செபிப்பது எப்படி என்று கற்றுத் தந்திருக்கிறார்.

ஆனாலும் நாம் கில்லாடிகள்.

அவர் கற்றுத்தந்த செபத்தை விடுவதில்லை.

நமது சொந்த வார்த்தைகளை பயன்படுத்தி   நீண்ட செபத்தை சொல்லிவிட்டு

 அதற்கு  முடிவுரையாக கர்த்தர் கற்பித்த செபம் சொல்லிவிடுவோம்.

கர்த்தர் கற்பித்த ஜெபத்தில்

1. இறைபுகழ்.
(விண்ணக தந்தையே, உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக,)

2. இறை அரசு வர வேண்டுதல்.
(உமது இராச்சியம் வருக, உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக)

3.நமது தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுதல்.
(எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்,)

4.பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டல்.
(எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்.)

5.சோதனைகளில் உதவ வேண்டுதல்.
(எங்களை சோதனைகளில் விழவிடாதேயும்)

6. தீமையில் விழாதபடி நம்மை பாதுகாத்தல்.
(தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.)

நமது மொத்த ஆன்மீகமே இந்த சிறிய செபத்துக்குள் அடங்கி இருக்கிறது.

பலநூறு ஆண்டுகள் வயதுள்ள ஒரு ஆலமரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது!

அந்த ஆலமரம் பிறப்பதற்கு முன் இருந்த  ஆல விதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது!

அந்த சிறிய விதைக்குள் இவ்வளவு பெரிய ஆலமரம் இருந்தது என்று சொன்னால் தாவரவியல் தெரியாத குழந்தை நம்பாது.

ஆனால் அது உண்மை என்று நமக்குத் தெரியும்.

அதே போல் தான் நமது வாழ்நாள் முழுவதும் நாம் வாழவிருக்கும் மொத்த ஆன்மீகமும் இந்த சிறிய  ஆலவிதை போன்ற செபத்திற்குள் அடங்கி இருக்கிறது!

நமது வாழ்க்கையே இறைவனை புகழ்வதற்கும், இறையரசை பரப்புவதற்கும், இறைவன் சித்தப்படி வாழ்வதற்கும்தானே!

உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக என்று சொல்லும்போது நம்மைப் படைத்த வரை புகழ்கிறோம்!

உமது அரசு வருக என்று சொல்லும்போது உலகோர் அனைவரும் இறை அரசுக்குள் வர அருள் புரியும் ஆண்டவரே என்று வேண்டுகிறோம்!

உமது சித்தம் விண்ணகத்தில் நிறைவேறுவது போல மண்ணகத்திலும் நிறைவேறுக என்று வேண்டும்போது 

உலகோர் அனைவரும் உமது சித்தப்படி வாழ அருள் புரியும் ஆண்டவரே என்று வேண்டுகிறோம்!

இப்படி வேண்டும்போது மொத்த உலகமும் இறைவனை புகழவும், அவர் அரசின்கீழ் வரவும், அவர் சித்தப்படி நடக்கவும் நாம் உழைப்போம் என்று உறுதிமொழி கூறுகிறோம்!

"உணவு" என்ற வார்த்தைக்குள்  நமது ஆன்மீக, உலக சம்பந்தப்பட்ட அத்தனை தேவைகளும் அடங்கி இருக்கின்றன.

 "நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்." என்று ஆண்டவர் கூறுகிறார்.

நமது ஆன்மீக வாழ்வு வளம் பெற இறை அருள் வேண்டும், நற்கருணை வேண்டும், இறைவனின் வழிநடத்துதல் வேண்டும் போன்ற ஆன்மீகத் தேவைகள்  நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

நமது உடல் உயிர் வாழ வேண்டிய சாப்பாடு, வேலை, சம்பளம், வீடு போன்ற எல்லா தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவருக்குத் தெரியும்.

நமக்கு குழந்தைகள் வேண்டும், அவர்களது அன்பு வேண்டும், பராமரிப்பு வேண்டும் என்றும் அவருக்குத் தெரியும்.

ஆகவே தேவைகள் ஒவ்வொன்றையும் ஆண்டவரிடம் விளக்கமாக மணிக்கணக்காக சொல்லவேண்டிய அவசியமில்லை.

"எங்களது அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்" என்ற ஒரே வாக்கியத்தில் நமது வாழ்நாளிற்கான அத்தனை தேவைகளும் அடங்கி விட்டன!

காலையில் அம்மாவிடம்,

"அம்மா நான் பள்ளிக்கூடம் போக வேண்டும்." என்று சொன்னால் போதும். அதற்குத் தேவையான அத்தனை பொருட்களையும் தயாராக வைத்துவிடுவார்கள்.

அதை விட்டுவிட்டு,

"அம்மா பை வேண்டும், 
கணக்கு புத்தகம் வேண்டும், 
தமிழ் புத்தகம் வேண்டும், 
ஆங்கில புத்தகம் வேண்டும்,
வரலாற்று புத்தகம் வேண்டும்,
புவியியல் புத்தகம் வேண்டும், 
சயன்ஸ் புத்தகம் வேண்டும்,
 பென்சில் வேண்டும்,
பேனா வேண்டும்,
மை வேண்டும்" என்று வேண்டிய ஒவ்வொரு பொருளையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதுபோல்தான் நமக்கு என்னென்ன தேவை என்று இறைவனுக்கே தெரிந்திருக்கும் போது அவற்றை நாம் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்" என்ற ஒரு வாக்கியத்தில் நமக்கு வேண்டிய எல்லா தேவைகளும் அடங்கியிருக்கின்றன.

அடுத்து நாம் அன்றாடம் வேண்ட வேண்டியது நமது பாவ  மன்னிப்புக்காக. 

நமக்கு உண்மையிலேயே பிறரன்பு இருந்தால் அவர்கள் நமக்கு விரோதமாக செய்த குற்றங்களை நாமே மன்னித்து விடுவோம்.

இறைவன்மீது அன்பு இருந்தால் அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போம்.

பிறரை மன்னிக்க முடியாதவர்களுக்கு இறை மன்னிப்பு கிடைக்காது.

ஆகவே நமக்கு இறையன்பும் உள்ளது, பிறர் அன்பும் உள்ளது  என்பதை இறைவனிடம் தெரியப்படுத்தி நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறோம்.

"ஆண்டவரே எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம்.

 தயவு கூர்ந்து உமக்கு விரோதமாக நாங்கள் செய்த பாவங்களை மன்னியும்."

என்று வேண்டுகிறோம்.

கர்த்தர் கற்பித்த சிறிய செபத்தை ஒழுங்காக எல்லோரும் சொன்னால், மன்னிப்பின் காரணமாக உலகம் முழுவதும் சமாதானம் நிலவும்!

சண்டைகளுக்கு காரணம் மன்னிக்க முடியாமைதானே.

நமது வாழ்நாளின்போது நம்மை பாவத்தில் விழத் காட்டுவதற்காக நிறைய சோதனைகள் வரும்.

என்னென்ன சோதனைகள் வருமென்று ஆண்டவருக்கு தெரியும்.

ஆகவே ஒவ்வொரு சோதனையாக சொல்லிக் கொண்டிராமல் ஒரே வாக்கியத்தில்,

"சோதனை நேரத்தில் எங்களுக்கு உதவியாக வாரும் ஆண்டவரே"

என்று செபிக்கச் சொல்கிறார் நம் ஆண்டவர்.

தீமை என்றால் பாவம். நமது வாழ்நாள் முழுவதும் நம்மை பாவத்தில் விழுந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் 

"எங்களை தீமையில் விழவிடாதேயும்."

என்று ஒரே வரியில் செபிக்கக் கற்றுத் தந்திருக்கிறார் நம் ஆண்டவர்.

கர்த்தர் கற்பித்த செபத்தை மட்டும் ஒழுங்காக சொல்பவர்கள்,

நிச்சயமாக இரட்சிக்கப்படுவார்கள்.

அப்போ திருப்பலி வேண்டாமா? 
அது அன்றாட உணவிற்குள் வந்துவிடுகிறது.

நிறைய பழங்களை பிழிந்து ஒரே தம்ளரில் Juice ஆக ஊற்றி குடிப்பது போல,

நமது வாழ்விற்கான அத்தனை தேவைகளையும் ஒரே செபத்தில் இயேசு அடக்கி இருக்கிறார்.

நாம் நமது நீண்ட சொந்த செபத்திற்கு முடிவுரையாக பயன்படுத்தும் கர்த்தர் கற்பித்த செபத்தை,

Main செபமாக தியானத்தோடு சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் வேலை எதுவும் இன்றி ஓய்வாக இருக்கும்போது கண்ட கற்பனைகளுக்கு இடம் கொடாமல் 

கர்த்தர் கற்பித்த செபத்தை தியானித்துக் கொண்டிருந்தால்

அதன் வல்லமையை  உணரலாம்.  

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment