Sunday, June 6, 2021

"இதை வாங்கிக்கொள்ளுங்கள். இது என் உடல்"(மாற்கு, 14:22, 23)

"இதை வாங்கிக்கொள்ளுங்கள். இது என் உடல்"
(மாற்கு, 14:22, 23)

இயேசு மனுக்குலத்தின்  பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.

பழைய ஏற்பாட்டில் யூதர்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து  மீட்கப்படுவதற்கு முன்னால் 

ஒவ்வொரு குடும்பத்தினரும்  ஆட்டுக்குட்டியை வெட்டி அதன் ரத்தத்தை வீட்டின் நிலைக்காலில்   தெளித்துவிட்டு 

இறைச்சியை இரவிலேயே உண்டார்கள்.

நிலைக்காலில் தெளிக்கப்பட்ட ரத்தத்தின் காரணமாக அவ்வீட்டாரின் தலைப்பிள்ளைகளுக்கு மரணம் வரவில்லை. 

எதிரிகளின் வீட்டின் தலைப் பிள்ளைகள் எல்லாம் கொல்லப்பட்டார்கள்.

இதனால் பாரவோன் மன்னன் அவர்களுக்கு விடுதலை கொடுத்தான்.
'
ஆட்டுக்குட்டியின் பலி யூதர்களுக்கு எகிப்திலிருந்து விடுதலை பெற்றுக்கொடுத்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. நிலைக்காலில் தெளிக்கப்பட்ட இரத்தம் தலைப் பிள்ளைகளை சாவிலிருந்து காப்பாற்றியது.

2.  பலியிடப்பட்ட ஆட்டின் இறைச்சி உடனே உண்ணப்பட்டது.

3. இஸ்ரயேல் மக்கள் விடுதலை பெற்றனர்.


 புதிய ஏற்பாட்டில் இயேசுவின் இரத்தத்தினால் நாம் ஆன்மீக சாவிலிருந்து காப்பாற்றப்பட்டோம். 

பலியான இயேசுவை நாம் உணவாக  உண்கிறோம். 

பாவத்தின் பிடியில் இருந்து விடுதலை பெறுகிறோம்.

புதிய ஏற்பாட்டின் இந்த நிகழ்வுக்கு முன் அடையாளம்தான் பழைய ஏற்பாட்டில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு.

இயேசு ரத்தம் சிந்தி சிலுவையில் தன்னையே பலியிட்டது வெள்ளிக்கிழமை.

ஆனால் பலிப் பொருளாகிய இயேசுவை அவருடைய சீடர்கள் வியாழக்கிழமை இரவே உணவாக உண்டார்கள்.

இது இயேசுவின் ஏற்பாடு.

இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பாவத்திலிருந்து மீட்பு பெறுவதற்கு  பலிப் பொருளாகிய    இயேசுவை

  நாம் உண்பதும் அவசியம்.

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்"
(அரு. 6:51) 

என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை பலியான அதே இயேசுவின் உடலைத்தான்  வியாழக்கிழமை  சீடர்கள் உணவாக உண்டார்கள்.

திருப்பலியும் திருவிருந்தும் சீடர்களுக்கு மட்டுமல்ல, மீட்புப் பெற விரும்பும் அனைத்து மக்களுக்கும் அவசியம்.

உலகம் முடியும் வரை வாழக்கூடிய அனைவரும்

 இயேசுவின் பலியிலும், அவரை உணவாக உண்பதிலும் பங்கு பெற வேண்டும் என்பதற்காகத்தான்

 அவர் வியாழக்கிழமை அன்று திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

இயேசு தன்னுடைய சீடர்களுக்கு குருப் பட்டம் கொடுத்தார்.

தொடர்ந்து சீடர்கள் மூலமாக குருப் பட்டம் கொடுத்துக் கொண்டிருப்பவர் இயேசு தான்.

இன்றைய குருக்கள் மூலமாக செயலாற்றிக் கொண்டிருப்பதும் இயேசு தான்.

ஆதலால்தான் திருப்பலியின் போது குருவானவர் 

"இது என் உடல்"

"என் இரத்தம் இது."

என்கிறார்.

குரல் வருவது குருவானவர் வாயிலிருந்துதான், ஆனால் சொல்வது இயேசு.

இயேசு அப்பத்தைக் கையிலெடுத்து 

"இது என் உடல்"

என்று சொல்லும்போது அப்பம் இயேசுவின் உடலாக மாறிவிடுகிறது.

திருவிருந்தின் போது குருவானவர் நம்மோடு பகிர்ந்து கொள்வது இயேசுவின் உடலைத் தான்.

நாம் உண்பதும் இயேசுவின் உடலைத் தான்.

நமது நாவில் வருவது  அன்னை மரியாவின் மடியில் தவழ்ந்த அதே இயேசு தான்.

சூசையப்பரோடு சேர்ந்து தச்சுத் தொழில் செய்த அதே இயேசு தான்.

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்த அதே இயேசு தான்.

பாடுகள் பட்டு ரத்தம் சிந்தி சிலுவையில் மரித்த அதே இயேசு தான்.

திவ்ய நற்கருணை மூலமாக இயேசு இன்றும் நம்மோடு இருக்கிறார்.

இந்த உண்மையை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.

அதை உணர வேண்டும்.

அவரை தொடுவதற்கு நம்மை நாமே தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

அதாவது நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று 

பரிசுத்தமான இருதயத்தோடு தான் அவரை நமது நாவில் வரவேற்க வேண்டும்.

வரவேற்ற பின் அவரோடு மனம் விட்டு பேச வேண்டும்.

அவர் நம்மோடு பேசுவதைக் கேட்க வேண்டும்.

நமது வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது அவர்களோடு பேசாமல் இருந்தால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

திவ்ய நற்கருணை வாங்கியபின்,

ஏதோ ஒரு தின்பண்டத்தை வாங்கி வாயில் போட்டு விட்டு நமது வேலையை பார்த்துக் கொண்டிருப்பது போல,

மற்றவர்களோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தால்

இயேசு நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

திருப்பலி நேரத்தில் இயேசுவைப்பற்றிய எண்ணங்கள் மனதில் இருந்தால் 
குருவானவரோடு இணைந்து நாமும் திருப்பலியை ஒப்புக் கொடுப்போம்.

கல்வாரி மலையில் இயேசு தன்னையே தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.

இப்போதும் அதே இயேசுதான் அதே பலியைத்தான் குருவானவர் உருவத்தில் நின்று ஒப்புக் கொடுக்கிறார்.

"இது என் உடல்" என்று குருவானவர் சொல்லும் வார்த்தைகளே இதற்கு சான்று.

இந்த சந்தர்ப்பத்தில் மற்றொரு கருத்தையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

திருப்பலியின்போது மட்டுமல்ல எப்போதுமே குருவானவரில்  நாம் இயேசுவை காண வேண்டும்.

ஏனெனில் அவரில் செயல்படுபவர் இயேசுவே.

குருவானவரை ஆன்மீக வழிகாட்டியாக தேர்வு செய்துகொண்டு 

ஆன்மீக வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவரோடு கலந்து ஆலோசிக்க வேண்டும். 

அவரது ஒவ்வொரு வார்த்தையையும் இயேசுவின் வார்த்தையாகவே எடுத்துக்கொண்டு 
அதன்படி நடக்க  வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment