Thursday, June 17, 2021

"விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள்."(மத். 6:20)

"விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள்."
(மத். 6:20)

தமிழில் ஒரு பழமொழி உண்டு: 
அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை.

மனிதன் ஈட்டக்கூடிய செல்வங்கள் இரண்டு வகை.

1. அருட்செல்வம்.
2, பொருள் செல்வம்.

மனிதன் உடலும், ஆன்மாவும் சேர்ந்து வாழும் ஒரு உயிரினம்.

உடல் சடப் பொருளாகிய உலகை சேர்ந்தது. கண்ணால் பார்க்கப்பட கூடியது. உலகைப் போலவே அழியக்கூடியது.

ஆன்மா ஆவி பொருள். விண்ணுலகில் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டது. கண்ணால் பார்க்க முடியாதது. அழிவு இல்லாதது.

பொருள் செல்வம் இந்த உலகைச் சார்ந்த உடல் வாழ்வதற்கு இன்றியமையாதது. 

உணவு, உடை, இருப்பிடம், நிலம், பணம் போன்ற உலகப் பொருள்கள்
 பொருள் செல்வ வகையை சார்ந்தவை.

இவை இல்லாவிட்டால் இவ்வுலகில் வசதியுடன் வாழ முடியாது.

ஆனால் இவை எல்லாமே நிரந்தரமானவை அல்ல. எவ்வளவு கஷ்டப்பட்டு இவற்றை ஈட்டினாலும் ஒரு நாள் இவை நம்மை விட்டு போய்விடும்.

உணவு நமது உடலோடு சேர்ந்து,
உடலுக்கு வளர்ச்சியை கொடுத்தாலும், ஒரு நாள் நமது உடலும் மண்ணிற்குள் போய்விடும்.

விண்ணுலகில் வாழும் இறைவனை சேர்ந்த அருட்செல்வம் நமது ஆன்மாவின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

இறைவனையும் அவரது சாயலில் படைக்கப்பட்ட நமது ஆன்மாவையும் கண்ணால் பார்க்க முடியாதது போலவே அருள் செல்வத்தையும் கண்ணால் பார்க்க முடியாது.

உணர மட்டும் முடியும்.

நமது ஆன்மாவை பாவ மாசின்றி காப்பாற்றவும், 
பரிசுத்தத்தனத்தில்  வளரவும், அருட்செல்வம் இன்றியமையாதது.

நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தத்தமாக இருந்தால்தான்,
அதனால் விண்ணக வாழ்வை அனுபவிக்க முடியும்.

விண்ணக வாழ்வு நிலையானது. 
ஆகவே அருள் செல்வமும் நிலையானது.

அருட்செல்வம் ஆண்டவரிடமிருந்து வருவதால் அது நம்மை ஆண்டவரிடமே அழைத்துச் செல்லும்.

ஆண்டவரை   அடைந்தால் 
அவரோடு நிலைவாழ்வு வாழலாம்.

இப்பொழுது சொல்லுவோம் 

முடிவற்ற, பேரின்ப நிலைவாழ்வு தரும் அருள் செல்வம் வேண்டுமா?

 அல்லது,

 அழிந்து போகும் உலகில் வாழ வளம் தருவது போல் தோற்றமளிக்கும் பொருள் செல்வம் வேண்டுமா?

தனது வீரத்தினால் ஐரோப்பா முழுவதையும் வென்று ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பேரரசர் நெப்போலியனை,

அவனது சாம்ராஜ்யத்தினால் காப்பாற்ற முடியவில்லை. 

கிரீசிலிருந்து இந்தியா வரை அனைத்து நாடுகளையும் வென்று 
கிரேக்க சாம்ராஜ்யத்தை நிறுவிய மகா அலெக்சாண்டரால் 

 கொசுக்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் இறந்தது கொசுக்களால் பரவும் மலேரியா நோயினால். 

கொரோனா தொற்றினால்  இறந்தவர்களுள் கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள்.

 அவர்களின் Bank Balanceனால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

இறந்தவர்களுள் பொருள் வளமில்லாத, அருட்செல்வம் மட்டுமே கொண்டிருந்த நல்லவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு இறப்பு ஒரு முடிவு அல்ல. பேரின்ப நிலைவாழ்வின் ஆரம்பம்.

அருள் செல்வத்தினால் வாழ்பவன் இவ்வுலகில் இறப்பு உட்பட எதற்கும் அஞ்ச மாட்டான். ஏனெனில் அருள் வாழ்வுக்கு முடிவே இல்லை.

மண்ணுலகில் இருந்தாலும் விண்ணுலகில் இருந்தாலும், அவன் வாழ்வது ஒரே வாழ்வு தான், அருள் வாழ்வு. 

பாவம் மட்டும் செய்யாமல் இருந்தோமென்றால் நமது அருள் உடமையை நம்மிடமிருந்து யாராலும், எக்காலத்திலும் பிரிக்க முடியாது. 

அருளின்பம் தொடர்ந்து மகிழ்ச்சி அளிக்கும்.

 பொருளின்பத்தினால் தொடர்ந்து மகிழ்ச்சி அழிக்க முடியாது.

ஒரு உதாரணத்திற்கு:

ஒரு பிரியாணி பிரியன். ருசியுள்ள பிரியாணி சாப்பிடுவதற்காக பல மைல்கள் பிரயாணம் செய்து ஒருவன் ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறான்.

இலையில் பிரியாணி வைக்கப்படுகிறது.

ஆசையோடு பிசைந்து அள்ளி வாயில் வைக்கிறான்.

பல மைல்கள் கடந்து வந்து விலை கொடுத்து  வாங்கிய பிரியாணி நாவில் இருக்கும் ஒரு சில விநாடிகள்  மட்டுமே  ருசியாக  உள்ளது.

நாவைக் கடந்தவுடன்  ருசியும் போய்விடுகிறது.


இப்படித்தான் ஒவ்வொரு பொருட் செல்வமும்.

இப்படிப்பட்ட பொருள் செல்வத்தின் பின்னால்தான் உலகில் அநேகர் ஓடுகின்றார்கள்.

அதை ஈட்ட நேர்மையாக முயல்கின்றவர்களும் இருக்கிறார்கள், 


நேர்மையற்ற முறையில் குறுக்கு வழியில் சென்று ஈட்டுகின்றவர்களும் இருக்கிறார்கள். 

குறுக்கு வழியில் செல்பவர்களுக்குதான் நிறைய பொருட்செல்வம் கிடைக்கும்.

நிறைய பொருள் செல்வம் வைத்திருப்பவர்கள்தான் நிறைய இழப்பார்கள். 

பொருளே இல்லாத சன்னியாசி இந்த உலகை விட்டு போகும் போது இழப்பது அவனது உடலை மட்டும் தான். ஆனால் பெறுவது நித்திய பேரின்பம்.

கோடிக் கணக்காய் வைத்திருப்பவன் 
இந்த உலகை விட்டு போகும்போது
கோடிக் கணக்காய் இழப்பான்.

அதோடு நித்திய பேரின்பத்தையும்
இழப்பான்.

இழப்பதற்காகவே சம்பாதித்துக் கொண்டிருக்கும் செல்வத்தின் மீது உள்ள பற்றை விட்டு விட்டு 

அருள் செல்வத்தை தேடிச் செல்பவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தேடும் செல்வம் நித்திய காலமும் அவர்களுடேயே இருக்கும்.

அருட்செல்வம் இறைவனிடம் இருந்து வருவது.

யாரெல்லாம் இறைவனோடு உறவிலிருந்து கொண்டு

 அவருக்காக வாழ்கிறார்களோ அவர்கள் ஒவ்வொரு வினாடியும் அருள் செல்வத்தை ஈட்டிக்கொண்டே இருப்பார்கள். 

இறையுறவு நிலை இருக்கு மட்டும்,
அதாவது, ஆன்மா சாவான பாவம் அற்ற நிலையில் இருக்கு மட்டும்,
நம்மால் அருட்செல்வத்தை ஈட்ட முடியும்.

ஞானஸ்நானத்தில் நமது ஜென்ம பாவம் மன்னிக்கப்பட்ட உடன் நாம்
இறையுறவு நிலைக்குள் நுழைகிறோம்.

அதன்பின் பாவம் செய்யாதபடி நமது ஆன்மாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தேவ திரவிய அனுமானங்கள் மூலமும், ஜெப தவ , தர்ம முயற்சிகள் மூலமும்,  நற்செயல்கள் மூலமும்  அருட்செல்வத்தை ஈட்டுகிறோம்.

திவ்ய நற்கருணை என்னும் தேவ திரவிய அனுமானம் அருள் செல்வத்தை மட்டுமல்ல அதன் ஊற்றாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே நமக்குள் கொண்டு வருகிறது.. 

நமது இதயம் இறைவனோடு ஒன்றித்து இருப்பதுதான் செபம்.
இறைவனை மனதில் நினைத்துக் கொண்டிருந்தாலே அவர் நமக்கு அருள் வளங்களை அள்ளித் தருவார்.

 இறைவனோடு மனதில் ஒன்றித்து இருப்பதற்குதான் தியானம் என்று பெயர்.

தியானிக்கும் போது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது இல்லை. இறைவனை நினைத்து அவரை நமது மனதால் ஆராதிக்கிறோம்.

உறவினர்களிடமிருந்து கடிதம் வந்தால் அதை வாசித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை நினைத்து மகிழ்வது போல

 பைபிளில் இயேசு கூறிய வார்த்தைகளை வாசிக்கும்போது அவரை நினைத்து மகிழ்வது தான் தியானம்.

எரிந்துகொண்டிருக்கும் மெழுகுதிரியின் திரியோடு மற்றொரு மெழுகுதிரியின் திரியை ஒட்ட வைத்தால் அதுவும் எரிய ஆரம்பித்துவிடும்.

அதே போல் தான் அருளின் ஊற்றாகிய இறைவனை மனதில் நினைத்தாலே ஊற்றிலிருந்து அருள் நமது மனதிற்குள் பாயும்.

இறைவனுக்காக நாம் செய்யும் நற்செயல்கள் வழியாகவும் அருட்செல்வத்தை ஈட்டலாம்.

ஏழைகளுக்கு உதவுதல், சுகம் இல்லாதவரைச் சந்தித்தல், அழுவோருக்கு ஆறுதல் கூறுதல்,
பசித்தவர்களுக்கு உணவு ஊட்டுதல் போன்ற செயல்களை இறைவனுக்காக செய்யும் போது அவைகள் அருட்செல்வத்தை அள்ளி வரும் நற்செயல்களாக மாறுகின்றன.

நம்மிடம் இருக்கும் பொருள் செல்வத்தைக்கூட  மற்றவர்கள் நலனுக்காக செலவு செய்யும் போது 

அது அருட்செல்வமாக  மாறுகிறது.

இவ்வுலகில் நாம் சம்பாதிக்கும் அருள்செல்வம் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்லும் போது நம்முடனேயே வரும்.

முடிவில்லா காலம் நமக்கு பேரின்பத்தை தந்து கொண்டிருக்கும்.

அருள் செல்வத்தை தேடுவோம். நித்திய காலம் அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment