கேளுங்கள், தரப்படும்.
" ஆண்டவரே!"
"தம்பி, சொல்லு."
"ஆண்டவரே, நான் உங்கள் தம்பியா?"
"நம் இருவருக்கும் விண்ணகத் தந்தைதானே தந்தை!
அப்போ நீ என் தம்பிதானே!"
"என்ன இருந்தாலும்
நீர் காலங்களுக்கு எல்லாம் முந்தியவர் .
நான் நேற்றுப் பிறந்தவன்.
நீங்கள் சர்வ வல்லப கடவுள்,
நான் ஒன்றுமில்லாத மனிதன்"
"இப்படி எல்லாம் நினைத்து என்னை கண்டு பயப்பட கூடாது என்பதற்காகத்தான் நானும் உன்னை போல மனிதனாக பிறந்து, மனிதனாக வாழ்ந்து, மனிதனாக மரித்தேன்."
" உங்களைப் பார்த்து பயப்பட கூடாதா?"
"பாவம் செய்ய பயப்பட வேண்டும். அன்புக்கு ஏன் பயப்பட வேண்டும்?"
"அப்போ பயப்படாமல் ஒரு கேள்வி கேட்கட்டுமா?"
"என்னை உனது சகோதரராக எண்ணி பயப்படாமல் கேள். அதற்காகத்தானே இரவும் பகலும் உனக்காக இங்கே நற்கருணைப் பேழையில் காத்துக் கொண்டிருக்கிறேன்."
"கேளுங்கள், தரப்படும் இன்று சொன்னீர்கள். ஆனால் நான் எதைக் கேட்டாலும் உங்களுக்கு இஷ்டமானதைத்தான் தருகிறீர்கள், எனக்கு இஷ்டமானதை அல்ல."
"ஆமா. எனக்கு இஷ்டம் ஆனதை, அதாவது உனது ஆன்மீக மீட்புக்கு உதவக்கூடிய எதை கேட்டாலும் கட்டாயம் தருவேன்.
இவ்வுலக உதவிகளை கேட்கும்போது அவை உனது ஆன்மீக மீட்புக்கு உதவக்கூடியதாய் இருந்தால் அவற்றையும் கட்டாயம் தருவேன்."
"அப்போ நான் ஆசைப்படுவதை எல்லாம் கேட்கக் கூடாதா?
"உன் மகன் உன்னிடம் வந்து விளையாடுவதற்கு ஒரு பாம்பை பிடித்து தரச் சொன்னால் கொடுப்பாயா?"
"கொடுக்க மாட்டேன். பாம்போடு விளையாடினால், அது கடித்துவிடும். உயிருக்கு ஆபத்து."
"ஆனால் கேட்டது உனது மகனல்லவா?"
"அதனால் தான் கொடுக்க மாட்டேன். அவனுக்குப் பாம்பைப் பற்றித் தெரியாது. எனக்கு தெரியும்."
"அவனுக்கு அதைக் கொடுக்க விடாதபடி தடுப்பது எது?"
"அவன்மீது நான் கொண்டுள்ள அன்பு."
"எனக்கு உன் மீது அளவற்ற அன்பு இருக்கிறது.
நீ ஆன்மாவிற்கு கெடுதி விளைவிக்கும் பொருளைக் கேட்டால் நான் கொடுக்க மாட்டேன்.
ஆனாலும் உனது ஆன்மாவிற்கு நன்மை விளைவிக்கும் பொருளை நீ கேட்காமலேயே தருவேன்.
நீ கேட்டது கிடைக்காவிட்டால் அது எனக்கு விருப்பம் இல்லாதது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்."
"எனக்கு பிரியமுள்ள ஒருவருக்கு சுகம் இல்லாமல் போய்விட்டது.
அவருக்கு சுகம் கிடைக்கும்படி வேண்டுகிறேன்.
ஆனால் என் வேண்டுதல் கேட்கப்படவில்லை. ஏன்?"
" நீ நேசிப்பவர்களை நானும் நேசிக்கிறேன்.அவர்களுக்காக எது வேண்டினாலும் அது அவர்களுக்கு நன்மை பயக்குமா, பயக்காதா என்று அவர்களுக்கு தெரியாது, எனக்கு தெரியும்.
அவர்களுக்காக நீ என்ன வேண்டினாலும் அவர்களுக்கு நன்மை பயப்பதை அவர்களுக்கு கொடுப்பேன்.
நான் அவர்களுக்கு கொடுப்பதெல்லாம் அவர்களுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.
"உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக"
என்று தந்தையை நோக்கி ஜெபிக்க உனக்கு கற்றுக் கொடுத்தவன் நான்.
அந்த ஜெபத்தை தினமும் சொல்லுகிறாய் அல்லவா?"
"சொல்லுகிறேன்."
"பொருள் உணர்ந்து சொல்கிறாயா?"
"தந்தை என்ன நடக்க வேண்டும் என்று ஆசிக்கிறாரோ அதுவே நடக்க வேண்டும்.
விண்ணுலகில் அப்படித்தான் நடக்கிறது.
மண்ணுலகிலும் அப்படியே நடக்க வேண்டும்."
"பூவுலகில் நான் பிறக்கும்போது என்னை பெறுவதற்கு ஒரு அன்னையையும், வளர்ப்பதற்கு ஒரு தந்தையையும் நானே தேர்ந்தெடுத்தேன்.
தந்தையின் விருப்பமும் தூய ஆவியும் விருப்பமும் அதுவேதான்.
நாங்கள் ஆள் வகையில் மூவராய் இருந்தாலும் ஒரே கடவுள்.
ஆகவே மூவருக்கும் இருப்பது ஒரே விருப்பமே.
எனது தாய்க்கு துணையாகவும் என்னை வளர்ப்பதற்காகவும் நான் தேர்ந்தெடுத்த சூசையப்பர்
நான் திரு குடும்பத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்போதே மரிக்க வேண்டும் என்பதுவும் எனது விருப்பம்.
எனது விருப்பத்தை எனது தாய் மரியாளும், வளர்ப்புத் தந்தை சூசையப்பரும் முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.
எனது மடியிலேயே தலையை வைத்து சூசையப்பர் மரித்தார்.
அதன் பிறகு 30 வயது வரைக்கும் நான் தனியாகவே தச்சுத் தொழில் செய்து அன்னையைக் காப்பாற்றினேன்.
எனது பொது வாழ்வின்போது நிறைய பேரின் நோய்களைக் குணமாக்கியிருக்கிறேன்.
இறந்தோருக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் எனது வளர்ப்புத் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவரை குணமாகவில்லை.
மரித்தபோது உயிர் கொடுக்கவும் இல்லை.
ஏனெனில் அதுவே தந்தையின் சித்தம், எனது சித்தம்.
எப்படி செபிக்க வேண்டும் என்பதற்கு கெத்சமனி தோட்டத்தில் நான் செய்த செபமே முன்மாதிரிகை.
''தந்தையே எனது விருப்பம் , உமது விருப்பமே நிறைவேறட்டும்"
நீயும் அப்படியே செபிக்க கற்றுக்கொள்.
உனது ஆசைகளை எல்லாம் தந்தையிடம் எடுத்து சொல்.
ஆனால் செபத்தை முடிக்கும் போது,
"தந்தையே எனது ஆசைகளைக் கூறிவிட்டேன்.
ஆனாலும் உமக்கு எது விருப்பமோ அதையே என்னில் நிறைவேற்றும். நான் உனது அடிமை."
உனது செபம் கட்டாயம் கேட்கப்படும்.
புரிகிறதா?"
"புரிகிறது, ஆண்டவரே.
செபிப்பது எனது விருப்பமாக இருந்தாலும்,
நிறைவேறுவது உமது விருப்பமாகவே இருக்கட்டும்.
உமது அறிவுரைப்படியே நடப்பேன்.
நன்றி, ஆண்டவரே."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment