Wednesday, June 23, 2021

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:13)(தொடர்ச்சி)

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:13)
(தொடர்ச்சி)

நேற்று குறிப்பிட்டிருந்த சிறுகதையில் வரும் வாலிபனுக்கு,

 தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய, தன் தாயின் மேல் உண்மையான நம்பிக்கை இல்லை.

நம்பிக்கை இருந்திருந்தால் அவன் தன் தாய் மேல் சந்தேகப் பட்டிருக்க மாட்டான்.

சந்தேகப்பட்ட வினாடியிலேயே அவன் அவளுக்கு மகனாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டான்.

அவனுக்குத் தாயின் மேல்  நம்பிக்கை இருந்திருந்தால்,

 அவள் பேசிக் கொண்டிருந்தது அவனுடைய அப்பா என்ற முடிவிற்கு வந்து இருப்பான். 

நாம் யாரை முழுவதுமாக நம்புகிறோமோ அவரை, எந்த சூழ்நிலையிலும்,  இம்மி அளவு கூட சந்தேகப் பட மாட்டோம்.

நமக்கு இறைவன் மீது முழுமையான விசுவாசம் இருக்குமானால்,

அவர் சர்வ வல்லவர் என்ற உண்மையை நம்புவோமானால்,

அவர் நமது பாசமுள்ள தந்தை என்று நம்புவோமானால்,

அவர நம்மை அளவுகடந்த விதமாய் நேசிக்கிறார் என்று நம்புவோமானால்,

ஒவ்வொரு வினாடியும் நம்முடன்  இருந்து நம்மைப் பராமரித்து வருகிறார் என்று நம்புவோமானால்,

ஒரு அணு கூட அவரது அனுமதியின்றி நகராது என்று நம்புவோமானால்,

நமக்கு என்ன நடந்தாலும் அது அவருடைய சித்தத்தினாலேதான், நமது நன்மைக்காகவே நடக்கிறது என்று நம்புவோமானால், 

நமது வாழ்வில் நமக்கு என்ன நேர்ந்தாலும்,

 நம்மீது அவர் கொண்டுள்ள அக்கரையின் மீது சந்தேகம் வருமா?

சிறிதளவு சந்தேகம் வந்தாலும் நாம் அவரை முழுமையாக விசுவசிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

நாம் நினைப்பது நடந்தாலும், நடக்காவிட்டாலும்,

நாம் அவரிடம் கேட்பது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்,

நமது வாழ்வு இன்பங்களால் நிறைந்திருந்தாலும், துன்பங்களால் நிறைந்திருந்தாலும்

நாம் முழுமனதோடு அவருக்கு நன்றி கூறினால்தான் நம்மிடம் முழுமையாக விசுவாசம் இருக்கிறது என்று அர்த்தம்.

கஷ்டங்கள் வரும்போது, அவை எந்த ரூபத்தில் வந்தாலும்,

கொரோனா ரூபத்தில் வந்தாலும்,

 அவற்றிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்க நம் விண்ணகத் தந்தையிடம் கேட்க நமக்கு முழு உரிமை உண்டு. 

ஏனெனில் நாம் அவரது அன்புக்குப் பாத்திரமான பிள்ளைகள்.

ஆனாலும் அது விசயத்தில் நம் தந்தை என்ன முடிவு எடுத்தாலும் அது நமது நன்மைக்காகதான் இருக்கும்.

கஷ்டங்கள் நம்மை விட்டு முற்றிலும் நீங்கினாலும்,

ஓரளவு நீங்கினாலும், 

 முழுதும் தொடர்ந்தாலும் 

தந்தையின்  முடிவை நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நம் தந்தை நம்மைப் படைத்தது முடிவில்லாத நித்திய பேரின்ப வாழ்வுக்காக,

நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வுக்காக அல்ல.

இவ்வுலக துன்பங்களை அவருக்காக ஏற்றுக்கொண்டால் பதிலுக்கு நமக்கு முடிவில்லா பேரின்ப சன்மானம் கிடைக்கும்.

தனது குழந்தையை பார்க்கப் போகும் சந்தோசத்தில் 

அது தனது வயிற்றில் இருக்கும்  ஒன்பது மாதங்களும் ஏற்படும் கஷ்டங்களை ஒரு தாய் தாங்கிக் கொள்வது போலவும்,

பேறுகாலத்தின் போது ஏற்படும் வேதனைகளை அவள்  தாங்கிக் கொள்வது போலவும், 

நாம் நமக்கு இவ்வுலகில்  ஏற்படும் துன்பங்களை 

மறு உலகில் நாம் பெற இருக்கும் நித்திய பேரின்பத்தை எண்ணி மகிழ்ச்சியோடு தாங்கிக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல அந்த பேரின்பத்தை நாம் பெற நமது ஆண்டவர் பட்ட பாடுகளையும்,

 சந்தித்த மரணத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவர் பட்ட துன்பங்களுக்கு முன் நமது துன்பங்கள் ஒன்றுமே இல்லை.

துன்பப்படவே முடியாத அவர் நமக்காகத் துன்பப் படுவதற்காகவே,

நமக்காக மரிப்பதற்காகவே,

 மனித உரு எடுக்கத் தூண்டிய அவரது அளவுகடந்த அன்பை நினைத்துப்  பார்க்க வேண்டும்.

மரணத்தால் கூட நம்மையும் இறைவனையும் பிரிக்க முடியாது.

 அவரது அன்பில் ஒரு துளியாவது நம்மிடம் இருந்தால் உலகளவு துன்பம் வந்தாலும் அது நமக்கு கடுகளவு போல் தோன்றும்.

உண்மையான விசுவாச வாழ்வு வாழ்வோம்.

உண்மையான விசுவாசத்தோடு செபிப்போம்.

நமது விசுவாசம் நமக்கு நிலைவாழ்வு தரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment