Monday, June 7, 2021

ஏழைகளே உண்மையான செல்வந்தர்கள்.

ஏழைகளே உண்மையான செல்வந்தர்கள்.

 "மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம்.

"விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள்.'
(மத். 6:19, 20)


இந்திய ரூபாய் அமெரிக்காவில் செல்லாது. டாலர்தான் அமெரிக்காவில் செல்லும்.

உலகிலுள்ள பொருட்செல்வம் விண்ணகத்தில் செல்லாது. அருட்செல்வம் மட்டுமே விண்ணகத்தில் செல்லும்.



லட்சக்கணக்கான ரூபாய் வைத்துள்ள இந்தியன் அமெரிக்காவிற்கு செல்லவேண்டுமானால் முதலில் தன்னிடமுள்ள ரூபாயை டாலராக மாற்ற வேண்டும்.

அதே போல் தான்,

உலகில் ஏராளமான பொருள் செல்வம்  வைத்துள்ள ஒரு மனிதன் விண்ணகம் செல்லவேண்டுமானால் முதலில் தன்னிடமுள்ள பொருட் செல்வத்தை அருள்செல்வம் ஆக மாற்ற வேண்டும்.

உலகில் வாழும் காலத்தில் நம்மால் பொருளையும் சம்பாதிக்க முடியும் அருளையும் சம்பாதிக்க முடியும்.

ஆனால் நாம் சம்பாதித்த பொருளை நம்மால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.

அருளை மட்டும் எடுத்துச் செல்ல முடியும்.

நாம் உலகில் வாழப் போவதோ கொஞ்ச நாள்.

ஆனால் விண்ணக வாழ்வு நிலையான வாழ்வு.

இப்பொழுது நாம் சிந்திக்க வேண்டும்.

இவ்வுலகில் வாழும் காலத்தில் பொருட் செல்வத்தை சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டுமா?

 அல்லது 

அருள் செல்வத்தை சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டுமா? 

 பொருள் இல்லாதவர்கள் இவ்வுலகில் வாழ முடியாது என்பது உண்மைதான். அதை மறுக்கவில்லை. 

ஆனால் அருள் இல்லாதவர்கள் விண்ணக வாழ்வில் நுழைய முடியாது என்பதுவும் உண்மை.

ஆகவே பொருளை ஈட்டுவதில் நாம் காண்பிக்கும் ஆர்வத்தை விட

 அருளை ஈட்டுவதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

பொருளுக்கு ஊற்று இவ்வுலகம்.
அருளுக்கு ஊற்று இறைவன்.

இப்பொழுது சிந்திக்க வேண்டும்.

நாம் இவ்வுலகின் மீது அதிகப் பற்று வைத்திருக்க வேண்டுமா?

 இறைவன்மீது அதிகப் பற்று வைத்து இருக்க வேண்டுமா?

சென்னையிலிருந்து பாவூர்சத்திரத்தில் பேருந்தில் வருகிறோம்.

12 மணி நேரம் பேருந்தில் இருக்க வேண்டும்.

நாம் வாழ வேண்டியது பாவூர்சத்திரத்தில்.

நமக்கு அதிக பற்று இருக்க வேண்டியது 

பயணத்திற்கு பயன்படும்  பேருந்தின் மீதா?

நாம் வாழவேண்டிய பாவூர்சத்திரத்தின் மீதா? 

உலகம் நாம் பயணம் செய்யும் இடம் தான்.

 நமது நிரந்தர வாழ்விடம் விண்ணகம்.

ஆகவே  நமக்கு அதிக பற்று இருக்க வேண்டியது விண்ணகத்தில் மீதுதான்.

உலகம் இல்லாமல் நாம்  வாழலாம். 

திடீரென்று உலகம் முழுவதும் அழிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

நமது உடல் உலகைச் சார்ந்தது, ஆகவே அதுவும் உலகோடு சேர்ந்து அழிந்துவிடும்.

 ஆனால் நமது ஆன்மா என்றென்றும் வாழும்.

அதாவது உலகம் அழிந்தாலும் நாம் வாழ்வோம்.

நமது நிரந்தர இல்லம் 
விண்ணகமாகையால் நாம் பொருளை விட, அருளைதான் அதிகம் ஈட்ட வேண்டும். 

உண்மையில் பொருள் நமது உண்மையான செல்வம் அல்ல.

அருள்தான் உண்மையான செல்வம்.

பொருளைப் பொறுத்த மட்டில் நாம் ஏழைகளாக இருக்கலாம்

 ஆனால் அருளைப் பொறுத்த மட்டில் செல்வந்தர்களாக வாழ வேண்டும்.

உலகில் ஏழைகளாக வாழ்ந்தால்தான் அதாவது பொருள் மீது பற்று இல்லாதவர்களாக வாழ்ந்தால் தான்,

விண்ணுலகில் செல்வந்தர்களாக வாழ முடியும்.

ஆகவேதான் ஏழைகளை 

அதாவது 

பொருள் மீது பற்று இல்லாதவர்களை பாக்கியவான்கள் என்று இயேசு அழைக்கிறார்.

 அதாவது 

விண்ணக வாழ்விற்கு உரியவர்களாகையால்  

அவர்கள் பாக்கியவான்கள்.

பொருள் மீது பற்று இல்லாதவர்களாக இருந்தால் மட்டும் போதாது,

இறைவன் மீதும், அவரது அருள் மீதும் முழுமையான  பற்று வைக்க வேண்டும்.

அதாவது இறைவனையும் அவளது அருளையும் மட்டுமே தேட வேண்டும்.

இறைவன்மீது பற்று வைப்பது எப்படி?

இயேசு கூறிய படி 

இறைவனை நமது முழு ஆன்மாவோடும்,
முழு உள்ளத்தோடும்,
 முழு மனத்தோடும்.
 முழு வலிமையோடும் 
நேசிக்க வேண்டும்.

நம்மை நேசிப்பது போல நமது அவலானையும் நேசிக்க வேண்டும்.

இறைவனின் அருளைப் பெறுவது எப்படி?

இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட தேவ திரவிய அனுமானங்களை பெறுவதன் மூலமும்,

ஜெப, தவ முயற்சிகளில் மூலமும்,

நமது அயலானுக்கு உதவிகரமாய் இருப்பதன் மூலமும் இறையருளை பெறலாம்.

நாம் ஈட்டிய  உலகப் பொருள்களை இறைவனுக்காக நமது அயலானுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் இவ்வுலக பொருளையும் இறை அருளாக மாற்றிவிடலாம்.

உலகப் பொருளை ஈட்ட வேண்டியது  

அதன் மேலுள்ள பற்றினால் அல்ல.

 இறைப்பணியில் அதை செலவிட்டு விண்ணக வாழ்விற்கான அருளை ஈட்டுவதற்கே.

ஆன்மீக வாழ்வில் செல்வம் என்பது அருட்செல்வம் மட்டும்தான்.

அமெரிக்காவிற்கு செல்லும்போது ரூபாயை டாலராக மாற்றுவது போல,

உலகப் பொருளை இறையருளாக மாற்றி அதன் மூலம் விண்ணகம் செல்ல வேண்டும்.

இறையருளை சம்பாதிக்க உதவுவதால் இவ்வுலக பொருளை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. பற்று இல்லாமல் இருந்தால் போதும்.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
(லூக்.6:20)

இவ்வுலகின் ஏழைகளே மறு உலகில் செல்வந்தர்கள.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment