Friday, June 18, 2021

"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."(மத். 6:33)

"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33) 

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஆண்டுக்கு ஒரு முறை உவரி புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்வது வழக்கம்.

உவரி திருநாள் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது 

பத்து, பதினைந்து குடும்பங்கள் சேர்ந்து ஊரிலிருந்து கோவில் வரை மாட்டு வண்டி பயணம்,

உவரி கடற்கரையிலும் கடலிலும் ஆடிய விளையாட்டுக்கள்,

 கடைகளில் பண்டம் வாங்கித் தின்றது,

 கொடிக்கம்பத்தில் பார்த்த பேய்களின் ஆட்டம், 

மீன் சாப்பாடு, etc. etc இவைதான்.

திருவிழாவின் மையம் திருவிழா திருப்பலி.

திருப்பலிக்குப் போவோம்.

 ஆனால் சிறுவர்களாகிய எங்களுக்கு உவரி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது அங்கு ஆடிய ஆட்டங்கள்தான்.

இப்போதுகூட திருமண வீடு என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது 
சாப்பாடு தானே.

பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் ஒரு பெரியவரிடம் சென்று அவரது கடந்த கால வாழ்க்கை பற்றி கேளுங்கள்.

பிறந்த ஊர், பெற்றோர்கள், படித்த படிப்பு, எழுதிய தேர்வுகள், பெற்ற மதிப்பெண்கள், கிடைத்த வேலை,  வாங்கிய சம்பளம், வரவு செலவு,  திருமணம், பிள்ளைகள், வாங்கிய நிலபுலன்கள், கட்டிய வீடு ஓய்வு பெற்று வாங்கும், பென்சனில் ஆகும் செலவு  ஆகியவை பற்றியும் அவற்றை சார்ந்தவை பற்றியும் பேசுவார்.

அவரை பொறுத்தமட்டில் இவைதான் வாழ்க்கை.

முக்கியத்திற்கு  முக்கியம் கொடாமல், முக்கியம் இல்லாததற்கு முக்கியம் கொடுப்பது மனித சுபாவம்.

நாம் சாப்பிடுவதற்கோ, படிப்பதற்கோ, தேர்வுகள் எழுதுவதற்கோ, வேலை செய்வதற்கோ, சம்பளம் வாங்குவதற்கோ, பென்சன் வாங்குவதற்கோ உலகில் பிறக்கவில்லை.

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:"

இதற்காக மட்டுமே உலகில் பிறந்தோம்.

ஒன்றும் இல்லாமையிலிருந்து 
இறைவன் நம்மைப் படைத்தது அவரது அரசில், அவருக்காக வாழ்வதற்கு மட்டுமே. 

ஆனால் நாம் அவரையும், அவரது அரசையும் மறந்து நமக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்படியே அவரே நினைத்தாலும் அதுவும் நமக்காகத்தான் நினைக்கிறோம்.

நாம் வசதியுடன் வாழ வேண்டும், சுகத்தோடு வாழ வேண்டும், புகழோடு வாழ வேண்டும் 

போன்ற நமது தேவைகளுக்காக மட்டுமே அவரை நினைக்கிறோம். 

அவருக்காக நம்மை பயன்படுத்துவதை விட ,

அவரை நமக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அதனால் தான் இயேசு நம்மிடம் சொல்கிறார்:

"முதலில் இறைவனின் அரசை தேடுங்கள்."

அவரைத் தேடுவதற்கு முதலிடம் கொடுத்தால்,

அதாவது நமது ஆன்மிக வாழ்விற்கு முதல் இடம் கொடுத்தால்,

அதற்காகவே வாழ்ந்தால்,

உலகில் வாழ தேவையானவற்றை அவரே நமக்கு தருவார்.


கடவுள் மனிதனை படைக்கு முன்பு அவன் வாழ்வதற்கு சகல வசதிகளையும் கொண்ட உலகை முதலில் படைத்தார்.

நாம் வாழ்வதற்கு தேவையானவற்றை படைத்த பின்புதான் நம்மை படைத்தார்.

நமக்காக எதையும் நாமே உருவாக்கிக் கொள்ளவில்லை.

நாம் பிறக்க வேண்டிய ஊரைத் தேர்ந்தெடுத்தவர் அவர்.

நமது பெற்றோரைத் தேர்ந்தெடுத்தவர் அவர்.

நாம் படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்தவர் அவர்.

நாம் செய்யவேண்டிய வேலையை
தேர்ந்தெடுத்தவர் அவர்.

நாம் வாங்க வேண்டிய சம்பளத்தை
தேர்ந்தெடுத்தவர் அவர்.

இவற்றையெல்லாம் நாம் ஏற்பாடு செய்துகொண்டு பிறக்கவில்லை.

பள்ளிக்கூடம், வேலை, சம்பளம் ஆகியவற்றை நாம் தேர்ந்தெடுத்தது போல் தெரியும், ஆனால் அவரது நித்திய திட்டத்தின்படியே நமது தேவைகள் பூர்த்தியாகின்றன.

நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது அவரையும், அவரது அரசையும்தான்.

ஒரு ஒப்புமை.

குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளிப்பது என்று தீர்மானித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.

குற்றாலத்திற்கு எப்படி செல்ல வேண்டும், குளிப்பதை ஒட்டி என்னென்ன செய்ய வேண்டும், எப்படி வீடு திரும்ப வேண்டும் 

போன்ற திட்டங்கள்  குற்றால குளிப்பை மையமாக வைத்து தீர்மானிக்கப்பட வேண்டும்.

அதேபோல,

இவ்வுலகில் நாம் படைக்கப் பட்டிருப்பது இறையரசில், இறைவனின் கட்டளைகளின்படி வாழ்வதற்காகதான்.

எவ்வளவு காலம் வாழ்வோம் என்று தீர்மானிப்பது இறைவன்.

நாம் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்க்கை. அதற்கு உதவியாகத்தான் தான் நமது உடல். ஆன்மீக வாழ்க்கை  வாழ்வதற்காகத்தான் உடலையும் வாழ வைக்கிறோம்.

ஆன்மாவிற்காக உடல் எப்படி வாழ வேண்டும் என்பதை நமது ஆன்மீகம் தான் தீர்மானிக்க வேண்டும்.

உடல் வாழ்வதற்காக நாம் உலகில் என்ன செய்தாலும் நமது ஆன்மிக வாழ்விற்கு இடையூறாக இருக்கக் கூடாது.

எனவே ஆன்மீக வாழ்விற்கு இடையூறு இல்லாத உலக வாழ்க்கை முறையை தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாம் பார்க்கிற வேலை ஆன்மீக வாழ்வுக்கு இடையூறாக இருந்தால் நமது வேலையை விட்டுவிட வேண்டும்.

ஆன்மிக வாழ்வுக்கு உதவக்கூடிய வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

''உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு.

 உன் உடல் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.

30 உன் வலக்கை உனக்கு இடறலாயிருந்தால், அதை வெட்டி எறிந்துவிடு. 

உன் உடல் முழுவதும் நரகத்துக்குச் செல்வதை விட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்."
(மத். 5:29,30)

நாம் ஆன்மீகத்தையும் கடவுளையும் உறுதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டால்,

அதற்கு எதிராக எது இருந்தாலும் அதை அகற்றிவிடவேண்டும்.

ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருக்கக்கூடிய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 அதற்கு ஆண்டவருடைய துணை இருக்கும்.

நம்பிக்கையோடு ஜெபிக்கும்போது எது நடந்தாலும் அது இறைவன் சித்தத்தினால் நமது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமாகத்தான் இருக்கும்.

சில சமயங்களில் துன்பங்களே நமது ஆன்மீக வாழ்விற்கு உறுதுணையாய் இருக்குமானால் ஆண்டவர் துன்பங்களை அனுமதிப்பார், தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நமது ஜெபங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட உதவிகளுக்கே.

நமது முழுமையான முக்கியத்துவத்தையும் ஆன்மீகத்திற்கே,

 அதாவது,

 இறை அரசுக்கே கொடுத்து விட்டால்

 உலக சம்பந்தப்பட்ட நமது தேவைகளை இறைவனிடம் கேட்காமலேயே அவரே பூர்த்தி செய்வார்.

அவர் எத்தகைய உலக வாழ்க்கையை நமக்கு தருகிறாரோ

 அதை அவருடைய சித்தம் என்று விசுவாச உணர்வோடு நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனிதனான அவரை வளர்ப்பதற்கு தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த திருக் குடும்பத்திற்கு

 அவர் அளித்த உலக வாழ்வு ஏழ்மையும் உழைப்பும் மட்டுமே.

அதையே அவர்கள் ஆன்மீக வாழ்வாக வாழ்ந்தார்கள்.

நாமும் திரு குடும்பத்தையே பின்பற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment