Tuesday, June 22, 2021

"நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்: தீய மரமோ தீய பழம் கொடுக்கும்:" (மத். 7:17)

"நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்: தீய மரமோ தீய பழம் கொடுக்கும்:" (மத். 7:17)

இயேசு தனது போதனைகளை சாதாரண மக்களும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 

அவற்றை உவமைகள், உருவகங்கள், ஒப்புமைகள் மூலமாகக் கொடுத்தார்.

விண்ணகம் செல்வதையே நோக்கமாக கொண்டுதான் இவ்வுலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எப்படிப்பட்டவர்கள் விண்ணகம் செல்வார்கள்?

நல்லவர்கள் விண்ணகம் செல்வார்கள்.

கெட்டவர்களுக்கு அங்கே இடமில்லை.

ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்று எப்படி அறிந்து கொள்வது?

அதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மரம், பழம் ஒப்புமையை இயேசு தந்திருக்கிறார்.

ஒரு மரத்தை பார்த்த உடனேயே அது நல்ல மரமா, கெட்ட மரமா என்று நம்மால் அறிய முடியாது.

அது தரும் கனியை வைத்துதான் அது நல்ல மரமா, கெட்ட மரமா என்பதை அறிய முடியும்.

ருசியான, உடலுக்கு பலன் தரக்கூடிய பழங்களை தரும் மரம் நல்ல மரம்.


ருசியற்ற , உடலுக்கு தீங்கு தரக்கூடிய பழங்களை தரும் மரம் கெட்ட மரம்.

அதுபோல ஒருவரை நல்லவரா அல்லது கெட்டவரா என்று தீர்மானிப்பது அவருடைடைய செயல்களே.

செயல்களைத் தீர்மானிப்பது அவருடைய சிந்தனைகள். சிந்தனைகள் எப்படிப்பட்டவை என்று சிந்திப்பவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சிந்தனைகளிலிருந்து பிறப்பவைதான் செயல்கள்.

ஒருவரது செயல்களிலிருந்ததான் அவரது சிந்தனைகள் எப்படிப்பட்டவை என்று தீர்மானிக்கலாம் 


விண்ணகம் செல்ல ஒருவனது செயல்கள் தான் முக்கியம் என்பதே இயேசுவின் போதனைகளில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

"வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக.

35 ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்.

 தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.

 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

36 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

 நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்.

 சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் " என்பார்

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."

நமது நற்செயல்கள்தான் நம்மை விண்ணகத்திற்கு தகுதி உள்ளவர்களாக  ஆக்குகின்றன  என்று இயேசுவே சொல்கிறார்.

செபம் மட்டும் சொன்னால் போதாது.

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்.

 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."(மத். 7:17)

"ஆண்டவரே, ஆண்டவரே"  - செபம்.

தந்தையின் விருப்பப்படி "நடப்பவனே" - நற்செயல்.

அயலானை நேசித்து, அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்வதுதானே விண்ணக தந்தையின் விருப்பம்! 

 முழுமையான கிறிஸ்தவ வாழ்வுக்கு கிறிஸ்துவை போல் வாழ வேண்டும்.

அதாவது இறைவனுக்காகப் பிறர் பணி செய்து வாழ வேண்டும்.

கிறிஸ்து நமக்கு வாழ்ந்து காண்பித்தது போல நாமும் மற்றவர்களுக்காக வாழ வேண்டும். 

மற்றவர்களுக்காக வாழும்போது இறைவனுக்காக வாழ்கிறோம்.

மற்றவர்களுக்காக வாழ்வதன் மூலம் இறைவனுக்காக வாழ்வதுதான் முழுமையான கிறிஸ்தவ வாழ்வு.

நமது சிந்தனையில் கிறிஸ்து இருந்தால்

நமது செயலிலும் கிறிஸ்து இருப்பார்.

நமது சிந்தனையில் பிறரன்பு இருந்தால்

நமது செயலிலும் பிறரன்பு இருக்கும்.

"நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் உனக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டேன்"

என்று நாம் சொன்னால்,

 "நேசிக்கிறேன்" என்று சொன்னது பொய்.

விசுவாசம் இருக்கும் இடத்தில்தான் அன்பு இருக்கும்.

"விசுவாசமும் இதைப் போலவே செயலோடு கூடியதாய் இராவிட்டால், அது தன்னிலே உயிரற்றதாகும்."(யாக. 2:17)

நற்செயல்கள் இல்லாத விசுவாசம்
உயிரற்றது.

 விசுவாசம்   உயிரற்றதானால், அன்புக்கு எப்படி உயிர் இருக்கும்?


நற்செயல்கள்  புரிவோம்.

 நல்லவர்கள் ஆவோம்.

விண்ணகம் நமக்கே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment