Tuesday, June 29, 2021

திருச்சபையின் இரண்டு தூண்கள்.

திருச்சபையின் இரண்டு தூண்கள்.

எதிர் எதிர் திசைகளில்  ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு பெரிய ஆறுகளை ஒரே கடலில் விழும்படி திருப்பிவிட முடியுமா? 

நம்மால் முடியாது.
 ஆனால் இறைவனால் முடியும்.

இராயப்புரும், சின்னப்பரும் எதிரெதிர் குணங்கள் உள்ளவர்கள்.

இராயப்பர் படிப்பறிவு இல்லாத ஒரு சாதாரண மீனவத் தொழிலாளி.

சின்னப்பர் யூதச் சட்டத்தை மிக நுணுக்கமாகக் கற்றவர்.


இராயப்பரின் இயற்பெயர் சீமோன்,
முதல் சந்திப்பிலேயே இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். - கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.

 கலிலேயாக் கடலோரமாய் நடந்த அடுத்த சந்திப்பின் போது, மீன்பிடித்துக் கொண்டிருந்த இராயப்பரையும், பெலவேந்திரரையும் 

"என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.

 உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

ஆக ஆரம்பத்திலிருந்தே இராயப்பரை  இயேசு  நற்செய்தி அறிவிக்க  அனுப்ப திட்டமிட்டு விட்டார்.

சின்னப்பரின்  ஆரம்ப  பெயர் சவுல். அவரின் ஆரம்ப திட்டம் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபையை முற்றிலும் அழித்து விடுவதுதான்.

ஆக, இராயப்பரின் ஆரம்ப திட்டமும், சின்னப்பரின் ஆரம்ப திட்டமும் எதிர் எதிரானவை.

இயேசு பூமியில் வாழும்போது இராயப்பருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் விண்ணகம் சென்ற பின்புதான் சின்னப்பருக்கு
 அழைப்பு விடுத்தார். 

விடுத்த அழைப்பை  இருவருமே ஏற்றுக்கொண்டார்கள்.

இருவருமே நற்செய்தி பணிக்காக தங்களை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

இருவரும் திருச்சபையைத் தாங்கும் தூண்கள் (Pillars of the Church) என்று அழைக்கப்படுகிறார்கள்.

சின்னப்பர் தான் மனம் திரும்புமுன் திருச்சபையை அழிக்க எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அதைவிட பன்மடங்கு ஆர்வத்தை திருச்சபையை பரப்புவதில் காண்பித்தார்.

புற ஜாதியினரை மனம் திருப்புவதில் அதிக ஆர்வம் காட்டியமையால் புறஜாதியினரின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார்.
 

" உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."
(மத்.16:18)

என்ற வார்த்தைகளின் மூலம் இயேசு இராயப்பரைத் தனது திருச்சபையின் தலைவராக  நியமித்தார்.

அவர்  தனது  மேற்றிராசனத்தை உரோமையில் நிறுவியதால் உரோமை கத்தோலிக்க திருச்சபையின் தலைநகர் ஆயிற்று.

அப்போது வேதகலாபனை காலம்.
நீரோ மன்னன் கிறிஸ்தவர்களைப் பிடித்து, வதை செய்து கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.

   கிறிஸ்தவர்கள் குகைகளில் ஒளிந்திருந்துதான் திருப்பலி வழிபாட்டில் கலந்து கொண்டார்கள்.

ஒரு நாள் மக்கள் இராயப்பரிடம் வந்து, "இராயப்பரே, மன்னன் கிறிஸ்தவர்களைக் கொன்று கொண்டிருக்கிறான்.

நாம் எல்லோருமே கிறிஸ்துவுக்காக உயிர் கொடுக்க தயார்தான்.

ஆனால் நீங்கள் திருச்சபையின் தலைவர். 

ஆகவே நீங்கள் உயிரோடு இருந்தால்தான் திருச்சபையை தொடர்ந்து வழிநடத்த முடியும்.

 ஆகவே தயவு செய்து கொஞ்ச நாளைக்கு உரோமாபுரியை விட்டு வெளியே தங்குங்கள்." என்றார்கள். 

அதில் உண்மை இருப்பதை உணர்ந்து இராயப்பரும் கொஞ்ச நாளைக்கு வெளியே தங்குவதற்காகப் போய்க்கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு தன் எதிரே வருவதைப் பார்த்தார்.

" ஆண்டவரே, எங்கே போகிறீர்கள்?"

"இராயப்பா, நீ கொஞ்ச நாளைக்கு சாகாமல் இருப்பதற்காக வெளியே போகிறாய்.

உனக்குப் பதிலாக சாவதற்காக நான் உள்ளே போகிறேன்."

"ஆண்டவரே திரும்பவும் சிலுவையில் மரணமா?"

"உனக்காக நான் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிலுவையில் மரிக்க தயாராக இருக்கிறேன். சரி, வழியை விடு."

" ஆண்டவரே,  வேண்டாம். நானே போகிறேன்." 

என்று கூறிவிட்டு திரும்பினார்.

மன்னனுடைய ஆட்கள் அவரைக் கைது செய்தார்கள்.

அவரை சிலுவையில் அறைந்து கொல்ல  திட்டமிட்டார்கள்.

"என் ஆண்டவரைப் போலவே சாக நான் அறுகதை அற்றவன். ஆகவே என்னை சிலுவையில் தலைகீழாக அறைந்து கொல்லுங்கள்." என்றார்.

அவ்வாறே சிலுவையில் தலைகீழாக அறைந்து கொல்லப்பட்டார்.

சின்னப்பர் மனம் திரும்பிய பின் சிறிய ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பயணம்செய்து 

புற இனத்தாரிடையே நற்செய்தியை அறிவித்து திருச்சபையைப் பரப்பினார்.

அவர் தான் மனம் திருப்பிய மக்களுக்கு எழுதிய கடிதங்கள் நற்செய்தி நூலில் இடம்பெற்றுள்ளன.  

அவர் ஜெருசலேமுக்கு வந்தபோது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உரோமைக்கு அழைத்துவரப்பட்டார்.

தலை வெட்டப்பட்டு வேத சாட்சியாக மரித்தார்.

இராயப்பரும், சின்னப்பரும் 
இயேசுவுக்காகவே வாழ்ந்து, அவருக்காகவே வேத சாட்சிகளாக மரித்து அவரிடமே சென்றார்கள். 

நாம் புனிதர்களின் திருவிழாக்களை கொண்டாடுகிறோம்.

எதற்காக?

வெறும் ஞாபகார்த்தத்திற்காகவா?

வெறும் ஞாபகார்த்தத்தால் எந்தவித பயனும் இல்லை.

யாருடைய விழாக்களை கொண்டாடுகிறோமோ

 அவர்களைப்போல் நாமும் நடக்க ஆரம்பித்து, 

அவர்களைப்போல் நாமும் வாழ்ந்தால்தான் விழாக்களால் நமக்கு பயன். 

இராயப்பரைப் போலவும், சின்னப்பரைப் போலவும் நாமும் ஆர்வத்தோடு நற்செய்தி பரப்பும் பணியில் ஈடுபடுவோம்.

வாழ்வாலும், மரணத்தாலும் இயேசுவுக்கு சாட்சிகளாக விளங்குவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment