Friday, June 11, 2021

"ஆனால், படைவீரன் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்: உடனே இரத்தமும் நீரும் வெளிவந்தன."(அரு19:34)

"ஆனால், படைவீரன் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்: உடனே இரத்தமும் நீரும் வெளிவந்தன."
(அரு19:34)

கல்வாரி மலையில்  சிலுவைகளில் மூன்று பேர் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் இருவர் கள்ளர்கள்.

 அவர்கள் செய்த பாவத்திற்காக  சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,
 
நமக்காக, நாம் செய்த பாவங்களுக்காக சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் அங்கு தொங்க 
வேண்டியவர்கள் நாம்தான்.

நாம் நிலைவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக 

தனது இவ்வுலக வாழ்வைப் பலியாக்குகிறார் இயேசு.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை.

மறு நாள் ஓய்வு நாள் என்பதால் அன்று சிலுவையில் யாரும் தொங்கக் கூடாது என்பது யூதர்களின் விதி.

சிலுவையில் தொங்குகிறவர்கள் இறக்கும் முன்

 அவர்களை இறக்க முடியாது.

ஆகவே இறக்காமல் தொங்கிக்கொண்டிருந்த கள்ளர்களின் கால்களை முறித்து அவர்களை கொன்றார்கள் படைவீரர்கள்.

ஆனால் இயேசுவை சோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை அறிந்தார்கள்.

ஆகவே கால்களை முறிக்கவில்லை.

ஆனால் ஏதோ ஒரு வக்கிரம குணமுள்ள பாவிப் படைவீரன் தேவை இல்லாமல இயேசுவின் விலாவை ஒரு ஈட்டியால் குத்துகிறான்.

நெஞ்சில் எவ்வளவு வக்கிரமம் இருந்திருந்தால், 
குரோதம் இருந்திருந்தால், 
வெறுப்பு உணர்வு இருந்திருந்தால் ஏற்கனவே மரித்தவரை ஈட்டியால் குத்தியிருப்பான்! 

பூங்காவனத்தில் இயேசு ஜெபிக்கும்போது பயத்தில் அவரது உடலிலிருந்து நிறைய ரத்தம்  வியர்வையாக வெளியேறிவிட்டது.

 கல்தூணில் கட்டி அடிக்கப்படும் போது உடலெங்கும் கிழிக்கப்பட்டு நிறைய ரத்தம் வெளியேறிவிட்டது.

முள் முடி சூட்டி அடிக்கப்படும் போது தலையில் உள்ள ரத்தம்  நிறைய வெளியேறிவிட்டது.

சிலுவையை சுமந்து கொண்டு சென்றபோது, வீரர்கள் சாட்டையால் அடித்துக் கொண்டே போனார்கள். அதிலும் நிறைய ரத்தம் வெளியேறிவிட்டது.

ஆணிகளால் இயேசுவை சிலுவையில் அறைந்தபோது மீதி ரத்தமும் வெளியேறிவிட்டது.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது உடலில் ஓடுவதற்கு ரத்தமே இல்லாததால் இயேசு சீக்கிரமே இறந்து விட்டார்.

இறந்த பின்னும் ஒரு பாவி ஈட்டியை கொண்டு குத்தியதால் 

விலாவின் ஒரு ஓரத்தில் ஓட முடியாமல் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச ரத்தமும் தண்ணீரோடு வெளியேறிவிட்டது!

ஆக இயேசு நமக்காக ரத்தம் சிந்தி மரித்தது மட்டுமல்ல, மரித்த பின்பும்  இரத்தம் சிந்தினார்!

ஒரு சொட்டு ரத்தத்தை கூட தனக்கென்று வைத்துக்கொள்ளவில்லை.

இயேசு பிறந்தது நமக்காக.

இயேசு வாழ்ந்தது நமக்காக.

இயேசு பாடுகள் பட்டது நமக்காக.

இயேசு இரத்தம் முழுவதையும் சிந்தியது நமக்காக.

இயேசு மரித்தது நமக்காக.

 உண்மையில் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றது நமது பாவங்கள்தான்!

இயேசு கடவுள் என்று நமக்குத் தெரியும்.

நம்மை படைத்தவர் அவர்தான் என்று நமக்குத் தெரியும்.

நம்மை படைத்தவரைதான் கொன்றிருக்கிறோம் என்றும் நமக்குத் தெரியும்.

நமது பாவங்களால் தான் அவரைக்
கொன்றிருக்கிறோம் என்றும் நமக்குத் தெரியும்.

அவர் இறந்துவிட்டார் என்றும் நமக்குத் தெரியும்.

நமது பாவங்களால்தான் அவர் இறந்தார் என்று தெரிந்த பின்பும் நாம் தொடர்ந்து பாவங்கள் செய்தால் அதற்கு எந்த அர்த்தம்?

அவர் இறந்து விட்டார் என்று தெரிந்த பின்பும் அவரது விலாவில் ஈட்டியால் குத்திய போர் வீரனை போல் 

நாமும் இயேசுவை ஈட்டியால் குத்தி கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

ஒருபுறம் "இயேசுவே, இயேசுவே" என்று அன்புடன் அழைப்பது போல சொல்லிக் கொண்டே, மறுபுறம் அவரை ஈட்டியால் குத்தி கொண்டிருக்கிறோம்!

இயேசுவை ஈட்டியால் குத்திக் கொண்டே அவரைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுகிறோம்!

இயேசுவை ஈட்டியால் குத்திக் கொண்டே அவரிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கிறோம்.

அவரைக் குத்திய படைவீரனுக்கு இயேசு இறைமகன் என்ற உண்மை தெரியாது.

ஆனால் நாம் இயேசு இறைமகன் என்பது தெரிந்திருந்தும் 

பாவம் என்ற ஈட்டியால் 

அவரைக் குத்திக்கொண்டே இருந்தால்

 நாம் அந்த படை வீரனை விட மோசமானவர்கள்!

படைவீரன் செய்ததையும் தியானிப்போம்.

 நாம் செய்து கொண்டிருப்பதையும் தியானிப்போம்.

நான் செய்யும் தியானம் நமது வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக்  கொண்டு வர வேண்டும்.

சிறிய  தியானங்கள்தான் நமது வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.

தியானிக்க தியானிக்க நமது ஒவ்வொரு செயலின் கனாகனமும் தெரியும்.

என்னென்ன செயல்கள் நம்மைப் படைத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்
என்பதும் புரியும்,

என்னென்ன செயல்கள் அவரை ஈட்டியால் குத்திய படை வீரனைப்போல் ஆக்கும் என்பதும் புரியும். 

நமது வாழ்வும் திருந்தும்.

இயேசுவுக்குப் பிடித்தமானவர்களாக மாறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment