"இயேசு, "செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்"
(மாற்கு, 12:17)
இயேசுவை பேச்சில் சிக்கவைக்கும்படி, பரிசேயர், ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.
இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் யூதர்கள் ரோமை மன்னர்களால் ஆளப்பட்டு வந்தார்கள்.
மெசியா பிறந்து யூதர்களை ரோமை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு,
தனி ஆட்சி அமைப்பார் என்று இவர்களில் அநேகர் தவறாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
மாந்தரைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கவே மெசியா வருவார் என்ற உண்மை, சில சீடர்கள் உட்பட, அநேகருக்குத் தெரியாது.
புதுமையாக தங்களது நோய்களிலிருந்து குணமடையவும்,
அவரது நற்செய்தியை கேட்கவும் ஏராளமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
இது பரிசேயர்களுக்கு பிடிக்கவில்லை.
எங்கே இயேசு மக்களை அவர்களுடைய அதிகார பிடியிலிருந்து பறித்துக் கொள்வாரோ என்று பயந்தனர்.
ஆகவே மக்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயரை உண்டாக்கவும்,
அவரை பேச்சில் சிக்கவைக்கவும் திட்டமிட்டு
எப்படி பதில் சொன்னாலும் அவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் ஒரு கேள்வியைத் தயாரித்து ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.
ஏரோதியர் யூதர்களுக்கு ரோமை மன்னர்களின் ஆட்சியில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்.
அவர்கள் இயேசுவிடம் கேட்க வேண்டிய கேள்வி:
"செசாருக்கு வரி கொடுப்பது முறையா? இல்லையா? கொடுக்க வேண்டுமா? வேண்டாமா?"
இந்தக் கேள்விக்கு இரண்டே பதில்கள்தான் சாத்தியம்.
1. வேண்டும்.
2.வேண்டாம்.
''வேண்டும்" என்று சொன்னால் இயேசு யூதர்களின் அடிமைத்தனத்தை விரும்புகிறார் என்று குற்றம் சாட்டலாம்.
"வேண்டாம்" என்று சொன்னால் செசார் அவர்மீது நடவடிக்கை எடுப்பான்.
ஏரோதியர் இயேசுவிடம் சென்று அவரை புகழ்வது போல் பேசிவிட்டு கேள்வியை கேட்கிறார்கள்.
இயேசு கூறிய பதிலை கேட்டு வியப்பில் மூழ்கி விட்டார்கள்.
இயேசு சொன்னார்:
"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்"
செசாருக்கு வரி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.
கொடுக்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை.
உரியதை உரியவர்களுக்கு கொடுக்கச் சொன்னார்.
சரியான பதிலை சொன்னதால், அதில் யாராலும் குற்றம் கண்டுபிடிக்க முடியாது.
இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அகில உலகிற்கும் நற்செய்தி இருக்கும்.
அது எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கும்.
Suppose
நாமும் இதேபோன்ற ஒரு கேள்வியை இயேசுவிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
"ஆண்டவரே எங்கள் உடலுக்கு உணவு கொடுக்கலாமா?" கொடுக்கக் கூடாதா?
" உடலுக்கு உரியதை உடலுக்கும் ஆன்மாவுக்கு உரியதை ஆன்மாவுக்கும் கொடுங்கள்"
என்றுதான் சொல்லியிருப்பார்.
இறைவன் நம்மை படைத்தது ஆன்மீக வாழ்விற்காகத்தான்.
ஆனால் ஆன்மாவை மட்டும் படைக்காமல் அதோடு உடலையும் படைத்திருக்கிறார்.
உடல் சடப்பொருள் (matter). சடப் பொருளாகிய மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது. அழிவுக்கு உரியது.
ஆன்மா ஆவி பொருள். (Spirit) இறைவனின் சாயலில் படைக்கப்பட்டது. அழிவு இல்லாதது.
சடப்பொருள் வாழ வேண்டுமென்றால் அதைப் போன்ற சட பொருளைத்தான் உணவாக உட்கொள்ள வேண்டும்.
ஆன்மா வாழ வேண்டுமென்றால் ஆவியாகிய இறைவனின் அருளைத்தான் உணவாக உட்கொள்ள வேண்டும்.
உடலுக்கு உரிய உணவு சடப்பொருள். மண்ணிலிருந்து தான் நமக்கு வேண்டிய உணவுப் பொருளை தாவரங்கள் எடுத்துத் தருகின்றன.
ஆன்மாவுக்கு உரிய உணவு இறை அருள். இறைவனோடு உறவு நிலையில் இருக்கும்போது நாம் கேட்கும் அருளை நமக்கு இறைவன் தருகிறார்.
இரண்டுமே நமக்கு உரியனவாக இருப்பதால் இரண்டையும் பேணி
வளர்க்க வேண்டியது நமது பொறுப்பு.
உடலைப் பேணுவதற்காக தான் நாம் மூச்சு விடுகிறோம், உண்கிறோம், உடுத்துகிறோம், வீடு கட்டுகிறோம், மருத்துவ வசதிகள் செய்து கொள்கிறோம்.
இச்செயல்களை செய்வதற்கான உபகரணங்களையும் இறைவனே தந்துள்ளார்.
ஆன்மாவை பேணுவதற்கு வேண்டிய அருள் வரங்களை நமக்குத் தருவதற்காகத்தான் இறைவன் எப்போதும் நம்முடனேயே இருக்கிறார்.
எப்படி உடல் தனது வளர்ச்சிக்கு உலகையே சார்ந்து இருக்கிறதோ,
அதேபோல்தான்,
ஆன்மா தனது வளர்ச்சிக்கு முற்றிலும் இறைவனை சார்ந்திருக்கிறது.
உடலை எதற்காக பேணுகிறோம்?
ஆன்மாவை எதற்காக பேணுகிறோம்?
இரண்டையுமே நாம் நமது திருப்திக்காக அல்ல, இறைவனுக்காக மட்டுமே பேண வேண்டும்.
நாம் ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத் தான் பூமியில் வாழ்கிறோம்.
நமது திருப்திக்காக வாழ்வது ஆன்மீக வாழ்வு அல்ல,
இறைவனுக்காக வாழ்வதே ஆன்மீக வாழ்வு.
நமது உடலை இறைவனுக்காகப் பேணும் போது அதுவும் ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது.
உணவை நமது உடலைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் உண்டால் அது முற்றிலும் உலக வாழ்வு.
ஆண்டவரது மகிமைக்காக உண்பது ஆன்மீக வாழ்வு .
அதற்காகத்தான் உண்பதற்கு முன்பும் பின்னும் செபம் சொல்கிறோம்.
ஒவ்வொரு வேலையையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆரம்பிப்பதன் நோக்கம் அந்த வேலையை இறைவனின் மகிமைக்காக செய்கிறோம் அவருக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான்.
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் செய்யப்படும் எந்த செயலும்,
அது ஆன்மாவைச் சார்ந்ததாக இருந்தாலும் உடலை சார்ந்ததாக இருந்தாலும்,
நமக்கு அருள் வரங்களை அள்ளித்தரும் ஆன்மீக செயலாக மாறுகின்றது.
ஆன்மாவுக்கு உரியதை ஆன்மாவுக்கு கொடுப்பதும்,
உடலுக்கு உரியதை உடலுக்குக் கொடுப்பதும்
இறைவனுக்கு உரிய நம்மை இறைவனுக்கு ஒப்பு கொடுப்பதற்காகத்தான்.
நாம் முற்றிலும் இறைவனுக்கு உரியவர்கள்.
இவ்வுலகில் அவருக்காகவே வாழ்வோம்.
மறுவுலகில் அவருடனே நித்திய காலமும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment