Monday, May 31, 2021

நமது முதல் வேலை.

நமது முதல் வேலை.


தேர்வுகள் முடிந்து, அடுத்து விடுமுறையும் முடிந்து, பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள் மனதில் ஆசை ஒன்று இருக்கும்.

தேர்வின்போது தாங்கள் எழுதிய விடைத்தாள்கள் விடுமுறையின் போது திருத்தப்பட்டிருக்கும்.

பள்ளிக்கூடம் சென்றவுடன் ஆசிரியர் திருத்தப்பட்ட விடைத்தாள்களை நமது பார்வைக்குத்  தருவார்.

நமது விடைத்தாள்கள் எத்தனை மதிப்பெண்கள் ஈட்டித் தந்திருக்கின்றன என்பதை வறிய மாணவர்களுக்கு ஆசை இருக்கும்.

ஆசிரியர்கள் ஆய்வு செய்து மதிப்பெண் கொடுத்த பிறகு மாணவர்கள் அவரவர் விடைகளை அவரவரே ஆய்வு செய்து ஆசிரியர் மதிப்பெண் கொடுத்ததில் குறை காண்பது மாணவர்களின் பழக்கம்.

இப்படித்தான் ஒரு மாணவன் மதிப்பீடு செய்யப்பட்ட தன் விடைத் தாளை எடுத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றான்.

"சார், நான் எல்லா கேள்விகளுக்கும் சரியானபடிதான் விடை எழுதி இருக்கிறேன்.

நீங்கள் மதிப்பெண்ணே போடாமல் அடித்து அடித்து வைத்துருக்கிறீர்கள்.

இன்னா பாருங்கள்.

நான் எழுதியுள்ள ஒவ்வொரு  விடையும் நீங்கள் நோட்டில் எழுதி போட்டதுதான். ஒரு வார்த்தை மாறாமல் எழுதியிருக்கிறேன்.

ஏன் அடித்து வைத்திருக்கிறீர்கள்?"


"வினாத்தாளை எடுத்து வா."

"இந்தாங்க, சார்."

"வினாத்தாளில் உள்ள எந்த வினாவுக்காவது பதில் எழுதி இருக்கிறாயா?''

" தேர்வு எழுதப்போகுமுன் நீங்கள் என்ன சொன்னீர்கள்?"

"என்ன சொன்னேன்?"

"வினாத்தாள் வந்தவுடன் வினாக்களை வாசியுங்கள். முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை அளியுங்கள்.

நான் அப்படித்தானே செய்திருக்கிறேன்!"

"எப்படித்தானே?"

".வினாத்தாளில் உள்ள எல்லா வினாக்களையும் வாசித்தேன். ஒரு வினாவுக்கு கூட விடை தெரியவில்லை.

நான் படித்து விட்டுப் போன வினாக்களையும் எழுதி அவற்றிற்கான விடைகளையும் எழுதி இருக்கிறேன்."

"அதாவது வினாத்தாளில் உள்ள ஒரு வினாவிற்கும் பதில் எழுதவில்லை!"

"ஆமா. நீங்கள் தானே சொன்னீர்கள், வினாக்களை  வாசித்துவிட்டு தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுங்கள் என்று.

எல்லா வினாக்களையும் வாசித்துவிட்டு தான் அவை ஒன்றும் தெரியாததால் எனக்குத் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதி இருக்கிறேன்."

"ஏல, வினாத்தாளில் உள்ள வினாக்களில் தெரிந்தவற்றுக்கு விடை எழுதச் சொன்னேன்.

நீ  செய்திருப்பது 

"நான் நன்கு தேர்வு எழுதியிருக்கிறேன், ஆனால் வினாத்தாள் முழுவதும் தவறானது." 

என்று சொல்வது போல் இருக்கிறது.

கேள்வித்தாளையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறாய்.

பொதுத்தேர்வு எழுதும் போது இதை நினைவில் வைத்துக் கொள்."

ஆன்மீக வாழ்வில் அநேக சமயங்களில் நாமும் இந்த மாணவனை போல்தான் நடந்து கொள்கிறோம்.

நாம் வாழும் உலகம் தேர்வு நடக்கும் இடம். நாம் வாழும் சூழ்நிலையில் ஏற்படும் பிரச்சனைகள் நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற வினாக்கள்.

கொடுக்கப்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான் நாம் செய்ய வேண்டியது.

 தான் கொடுத்திருக்கும் பிரச்சனைகளுக்கு  தீர்வு காண நமக்கு உதவி செய்ய இறைவன் எப்போதும் நம் அருகிலே தான் இருக்கிறார்.

அதற்காக உதவியை ஆண்டவரிடம் கேட்கலாம். பிரச்சனைகளே தவறு என  ஆண்டவரிடம் வாதாடக் கூடாது.

அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டுமே தவிர கேள்விகள் கேட்டது தவறு என்று இறைவனிடம் சொல்லக்கூடாது.

நாம் எந்த காலத்தில் பிறக்க வேண்டும்,

 எந்த சூழ்நிலையில் பிறக்க வேண்டும்,

 எந்த பெற்றோரிடம் பிறக்க வேண்டும்,

 எங்கு வளரவேண்டும்,

 நாம் வளரும் இடத்தில் சூழ்நிலை எப்படி இருக்க வேண்டும்

 என்றெல்லாம் நித்திய காலமாக இறைவனே தீர்மானித்திருக்கிறார்.


அந்தந்க காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலை, அதிலிருந்து எழும் பிரச்சனைகள் ஆகியவை தான் அப்போது வாழ்பவர்களுக்கு வினாக்கள்.

அந்த வினாக்களுக்கு ஆன்மீக ரீதியாக பதில் அளிக்கத்தான் அப்போது வாழும்படி நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

காலங்கள் மாறும் போது வினாக்களும் மாறும். பதில் அளிக்க வேண்டியவர்களும் மாறுவார்கள்.

இயேசுவோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு படைக்கப்பட்ட 12 சீடர்களில் கூட ஒரு சீடர் பண ஆசை காரணமாக தேர்வை நல்ல முறையில் எழுதவில்லை.

கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி கிறிஸ்தவர்களுக்கு வைக்கப்பட்ட தேர்வில் ரோமையின் மன்னர்கள் மூலம்  கேட்கப்பட்ட கேள்வி:

"உங்களுக்கு கிறிஸ்து வேண்டுமா? உங்கள் உயிர் வேண்டுமா?"

கிறிஸ்தவர்கள் உயிரைக் கொடுத்து கிறிஸ்துவைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.

16 ஆம் நூற்றாண்டில் சமய சீர்திருத்த   இயக்கம் என்ற பெயரில் ஏற்பட்ட பிரச்சனைகளில் பிரிவினை சபைகள் உருவான வரலாறு நமக்குத் தெரியும்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் 

கொரோனா என்ற நுண்ணுயிரால்  ஏற்பட்டவை.

இறைவன் நமக்கு வைத்திருக்கும் மிகக் கடினமான தேர்வு இது.

இந்த பிரச்சனைகளுக்கு ஆன்மீக ரீதியாக நாம் காணும் தீர்வுதான் இதில் நாம் பெறப்போவது வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிக்கும்.


பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமுன் அவற்றின் தன்மையை
(Nature) புரிந்து கொள்ள வேண்டும்.


பிரச்சனைகள் உலகைச் சார்ந்தவையாக இருக்கலாம், ஆனால் அவற்றின் தன்மை  ஆன்மீகத்தைச் சார்ந்தது.

நாம் அனுபவிக்கும்  துன்பங்கள் நமது உடலைச் சார்ந்தவை.

ஆனால் அவற்றிற்கு  காரணமான 
பாவமும், ஆண்டவருக்காக அவற்றை பொறுமையாக சகித்துக் கொண்டால் கிடைக்கும் விண்ணுலக பேரின்பமும் முழுக்க முழுக்க ஆன்மீகத்தை சார்ந்தவை.

தனது உடலினால் துன்பங்களை அனுபவித்துதான் இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து  நமது ஆன்மாவை மீட்டார்.

மனுக்குலம் தனது பாவங்களை உணர்ந்து திருத்துவதற்காகத்தான் அவ்வப்போது இறைவன் துன்பங்களை ஏதாவது ஒரு உருவில் அனுப்புகிறார்.

இன்றைய மனுக்குலத்தின் மிகப்பெரிய பாவங்களின் பின்னணியில் இருப்பது அவனது அளவுக்கு மிஞ்சிய விஞ்ஞான வளர்ச்சி.

தனது விஞ்ஞான அறிவின் மூலம் மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தூரம் பரவிக்கிடக்கும் இந்த பிரபஞ்சத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் எந்த என்று எண்ண ஆரம்பித்துவிட்டான் மனிதன்.


ஆக்கத் தொழிலுக்காக தனது அறிவைப் பயன்படுத்தாமல் 

அழிவு வேலைக்கான ஆயுதங்களை உற்பத்தி பண்ண ஆரம்பித்துவிட்டான்.

அவனது அறிவு திமிரை உணர வைப்பதற்காகத்தான் கண்ணுக்குத் தெரியாத வைரஸ்  ஒன்றை இறைவன் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆயுத குவிப்பினால் உலகப் போர் ஏற்பட்டால் கொரோனாவினால் ஏற்படும் உயிர் சேதத்தை விட அதிகமான சேதம் போரினால் ஏற்படும்.

நாம் நமது  பாவ நிலையை உணர்ந்து நல்லவர்களாக மாறி இறைவனிடம் திரும்ப வேண்டும் என்ற ஒரே நோக்கிற்காகத்தான் கொரோனா உலகிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

கொரோனாவினால் என்றோ ஒரு நாள் அழிய போகிற உடலுக்கு மட்டுமே ஆபத்து.

 ஆனால் பாவத்தினால் என்றென்றும் அழியாத ஆன்மாவிற்கு ஆபத்து.

இதை உணர்ந்து  மனுக்குலம் முதலில் மனம் திரும்பவேண்டும்.

முதலில் ஆன்மாவிற்கு ஆபத்து ஏற்படாமல் கவசம் அணிவித்துவிட்டு கொரோனாவைப் பற்றி  கவலைப்பட ஆரம்பிக்க வேண்டும்.

மனுக்குலம் மனம் திரும்பிவிட்டால் கொரோனா தானாகவே பின் வாங்க ஆரம்பித்து விடும். 

மனம் திரும்பியபின் நாம் எதற்கும் பயப்படாமல் வாழவேண்டும்.

அதை அழிக்க விஞ்ஞானரீதியாக முயற்சி எதுவும் எடுக்க வேண்டாமா?

எடுக்க வேண்டும். ஆனால்  ஆண்டவர் துணை இருந்தால்தான் நமது முயற்சி நிரந்தர பலன் தரும்.

நாம் சாப்பிடும் மருந்து கடவுள் கருணை இருந்தால்தான் வேலை செய்யும்,

ஆண்டவரின் கருணையை வேண்டி
இடைவிடாது செபம் சொல்வோம்.
 
மனம் திரும்பியவுடன் நினிவே நகரை காப்பாற்றிய இறைவன் நம்மையும் காப்பாற்றுவார்.

ஆண்டவரிடம் அசையாத விசுவாசம் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment