Wednesday, May 5, 2021

"என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது."(அரு.15:5)

"என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது."
(அரு.15:5)

 இயேசு தன்னை ஒரு திராட்சைக் கொடிக்கும் நம்மை அதன் கிளைகளுக்கும் ஒப்பிடுகிறார்.

திராட்சை கொடியை மட்டுமல்ல எந்த தாவரத்தையும் ஒப்புமைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

ஆனாலும் திராட்சை ரசம் யூதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகித்ததால்  

இயேசு அவர் சொன்னது அவர்களுடைய மனதில் நன்கு பதிய வேண்டும் என்பதற்காக திராட்சைக் கொடியை ஒப்புமையாக  எடுத்துக் கொண்டார்.

திராட்சைக் கொடி சத்துப் பொருள்களையும் தண்ணீரையும் தனது 
 கிளைகளுக்கு அனுப்புகிறது.

கிளை அவற்றைப் பயன்படுத்தி பூத்து, காய்த்து பலன்  தருகிறது.

கொடியிலிருந்து ஏதாவது ஒரு கிளையை வெட்டி எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து விட்டால் 

கொடியிலிருந்து கிளைக்கு  வரவேண்டிய சத்துப் பொருள்களும் தண்ணீரும் வருவது  நின்றுவிடும்.

கிளை வாடி வதங்கிவிடும். அதனால் உயிர் வாழ முடியாது.

திராட்சை கொடியாகிய இயேசுவோடு நாம் சமாதான நல்லுறவோடு இருந்தால்தான் அவருடைய அருள் நமக்கு வரும்.

நம்மால் ஆன்மீகப்   பலன்களைத் தர முடியும்.

பாவத்தினால் நமது உறவு அறுந்து விட்டால் அருள் வரத்து நின்றுவிடும்.

நமது ஆன்மாவின் ஆன்மீக வளர்ச்சியும் நின்று விடும்.

 அருள் வரத்தை இழந்த ஆன்மாவை இறந்த ஆன்மா என்போம்.

இறந்த ஆன்மா நிலை வாழ்விற்கு தகுதி அற்றது.

அதற்குரிய உடல் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியாக இருந்தாலும்

அந்த சொத்தினால் ஆன்மாவிற்கு எந்த பயனும் இல்லை.


திராட்சை கொடியாகிய இயேசுவோடு நாம் சமாதான நல்லுறவோடு இருப்பது எப்படி?

நம்முடைய முதல் பெற்றோர் படைக்கப்பட்ட உடனே அவர்களது ஆன்மா எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் நமது ஆன்மா இருக்க வேண்டும்.

 அதாவது சாவான பாவம் அற்ற நிலையில் இருக்க வேண்டும்.

சாவான பாவம் இறைவனோடு நமக்கு இருக்கும் அருள் உறவைத் துண்டித்து, ஆன்மாவை சாகடித்து விடும்.

அற்பப் பாவங்கள் அருள் உறவை துண்டிக்காது. 

ஓடுகின்ற தண்ணீருக்குள் கற்களை  வீசி எறிந்தால் ஓடும் தண்ணீரின் வேகம் குறைவது போல 

அற்ப பாவங்கள் அருள் வரத்தின் அளவை குறைக்கின்றன.

ஒவ்வொரு நாளும் காலையில் உடலில் அழுக்கு நீங்க குளிப்பது போல 

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஆன்மப் பரிசோதனை செய்து, 

ஆன்மாவில் பாவ அழுக்கு இருக்குமானால் 

உத்தம மனஸ்தாபப்பட்டு இறைவனின் மன்னிப்பைப் பெற்று, இறை அருளால் பாவ அழுக்கைக் கழுவிவிட வேண்டும்.

ஒவ்வொரு நாளையும் பரிசுத்தத் தனத்தோடு ஆரம்பிக்க வேண்டும்.

இரவில் படுக்கச் செல்லும் போது பரிசுத்தத் தனத்தோடு செல்ல வேண்டும்.

எந்த அளவுக்கு  நமது ஆன்மாவில் தூய்மை இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்டவரின் அருள் வரத்து இருக்கும்.

எந்த அளவுக்கு ஆன்மாவிற்குள் அருள் வரத்து இருக்கிறதோ அந்த அளவுக்கு

இறைவனோடு நமது நெருக்கம் அதிகமாகும்.

எப்போதும் இறை உறவோடு இருப்போம்.

நிலைவாழ்வை நிச்சயப் படுத்திக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment