"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."
(அரு.17:18)
இயேசு தந்தையோடு பேசும்போது கூறும் ஒவ்வொரு வசனமும் தன்னுடைய சீடர்களுக்கு சொல்லவேண்டிய செய்தியை சொல்லுவது போலவே இருக்கிறது.
இயேசு இந்த செபத்தை தனியாக சென்று மௌனமாக செபிக்கவில்லை.
தனது சீடர்களின் காதுகளில் விழும்ம்படியாக சத்தமாக செபிப்பதால்,
தனது தந்தையிடம் சொல்லுவதை யெல்லாம் அவர்களுக்கும் சொல்லுகிறார் என்பது புரிகிறது.
"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."
என்ற வசனத்தின் மூலம் அவர்களுக்கு சொல்லுவது:
"என் தந்தை என்னை உலகிற்கு அனுப்பியது போல
உங்களை நான் உலகிற்கு அனுப்புகிறேன்.''
வசனத்தை கூர்ந்து கவனித்தால்
சர்வ வல்லவரான இயேசு சீடர்களை தன்னோடு ஒப்பிட்டு பேசுவது புரியும்.
"தந்தை 'என்னை' அனுப்பினார்.
அதேபோல
நானும் 'உங்களை' அனுப்புகிறேன்."
"நான் என்ன பணி செய்ய வேண்டும் என்று என் தந்தை என்னை அனுப்பினாரோ
அதே பணியை செய்வதற்காக உங்களை அனுப்புகிறேன்.
நான் செய்யும் அதே பணியைத்தான் நீங்களும் செய்யப் போகிறீர்கள்.
நான் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிறேன்.
அதே சித்தத்தைத்தான் நீங்களும் நிறைவேற்ற போகிறீர்கள்."
தந்தை மகனுக்கு என்ன முக்கியத்துவத்தை கொடுக்கிறாரோ
அதே முக்கியத்துவத்தை மகன் சீடர்களுக்குக் கொடுக்கிறார்.
"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்,
அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்."
மகன் தந்தைக்குள் ஒன்றாய் இருப்பது போலவே
சீடர்களும் அவர்களுக்குள் (கடவுளுக்குள்) ஒன்றாய் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.
மகன் தந்தைக்குள் ஒரே கடவுளாக இருக்கிறார்.
ஆனால் சீடர்கள் கடவுளுக்குள் ஒரே கடவுளாக இருக்க முடியாது.
ஏனெனில் சீடர்கள் மனிதர்கள், எவ்வளவு முயன்றாலும் கடவுளாக முடியாது.
மகன் தந்தைக்குள் ஒரே கடவுளாக இருக்கிறார். ஆனால் சீடர்களால் இயேசுவுக்குள் கடவுளாக முடியாது.
ஆனாலும் இயேசு சீடர்களை எந்த அளவுக்கு உயர்த்த விரும்புகிறார் என்றால்,
அதாவது,
எந்த அளவுக்கு தன்னோடு நெருக்கமாக இருக்க விரும்புகிறார் என்றால்,
சீடர்களைப் பார்ப்பவர்கள் அவர்களுக்குள் வாழும் இயேசுவைப் பார்க்க வேண்டும்.
புனித சின்னப்பர் கூறும் வார்த்தைகள் இங்கே பொருள் பெறுகின்றன.
"வாழ்வது நானல்ல, இயேசுவே என்னுள் வாழ்கிறார்."
நெருக்கத்தின் உச்சக்கட்டம்.
சீடர்கள் தங்கள் பண்புகளில் இயேசுவாகவே மாறிவிட வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.
உலகினர் சீடர்களைத்தான் பார்ப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போது இயேசுவை பார்ப்பது போலவே இருக்க வேண்டும்.
அந்த அளவுக்கு இயேசுவின் பண்புகள் சீடர்களிடம் பிரதிபலிக்க வேண்டும்.
"தாயை தண்ணீர் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் போய் பார்க்க வேண்டியதில்லை."
என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
சீடர்களை பார்ப்பவர்கள் இயேசு வைத்தான் பார்க்கிறார்கள் என்று கூறுமளவிற்கு சீடர்கள் இயேசுவின் பண்புகளை தங்களது பண்புகளாக மாற்ற வேண்டும்.
சீடர்கள் இயேசுவின் பண்புகளை கொண்டிருந்தால்தான்
தந்தை இயேசுவை எந்த நோக்கத்திற்காக உலகிற்கு அனுப்பினாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.
தந்தை மகனை எதற்காக உலகிற்கு அனுப்பினார்?
வாயினால் நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதற்காக மட்டுமல்ல,
உண்மையிலேயே பாடுகள் பட்டு,
சிலுவையில் தன் உயிரையே பலியாகக் கொடுத்து,
பாவிகளின் பாவங்களை மன்னித்து,
அவர்களை நிலை வாழ்விற்கு அழைத்து வரவே தந்தை மகனை உலகிற்கு அனுப்பினார்.
இதே பணியை செய்வதற்காகவே இயேசு சீடர்களில் உலகிற்கு அனுப்பினார்.
"எனக்கு சீடனாக இருக்க விரும்புகிறவன் சிலுவையை சுமக்க வேண்டும்,
உலகோர் கொடுக்கும் அவமானங்களை தாங்கிக் கொள்ள வேண்டும்,
அயலானுக்காக தன் உயிரையே தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
சீடன் குருவை விட பெரியவன் அல்ல.
குரு செய்வதையெல்லாம் சீடனும் செய்ய வேண்டும்."
என்று இயேசு பலமுறை சீடர்களுக்கு சொல்லியிருக்கிறார்.
தான் செய்த
அதே பணியை,
அதேபோல,
சீடர்களும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தன்னுள் வாழும் தூய ஆவியை அவர்களுக்குள்ளும் அனுப்பி வைத்தார்.
"அவர்கள் மேல் ஊதி, தூய ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள். யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை அவர்களுக்கு மன்னிக்கப்படும்."
கடவுளுக்கே உரிய பாவமன்னிப்பு அதிகாரத்தை சீடர்களுக்குக் கொடுத்தார்.
"அப்பத்தையும், ரசத்தையும் தன் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றும் வல்லமையையும் தனது சீடர்களுக்கு கொடுத்தார்."
திருப்பலியின் போது குருவானவர் அப்பத்தை கையில் எடுத்து
''இது என் சரீரம்"
என்று கூறும்போது அப்பம் இயேசுவின் சரீரமாக மாறிவிடுகிறது.
ரசத்தைக் கையில் எடுத்து
"இது என் இரத்தம்."
என்று கூறும்போது அது இயேசுவின் இரத்தமாக மாறிவிடுகிறது.
ஆக இயேசு பாவிகளுக்காக உலகில் வாழ்ந்தது போலவே,
அதே நோக்கத்திற்காகவே,
அவரது சீடர்கள் உலகம் முடியுமட்டும் மக்களோடு வாழ வேண்டும்.
எப்படி உலக முடியுமட்டும்?
பன்னிரண்டு சீடர்கள் மட்டுமல்ல அவரது வாரிசுகளாகிய குருக்களும்
இறைமகன் உலகிற்கு எந்த நோக்கத்தோடு வந்தாரோ அதே நோக்கத்தோடு பணிபுரிய வேண்டும்.
அதாவது இயேசுவின் அத்தனை பண்புகளோடும் அவராகவே மாறி பாவிகளின் மீட்புக்காக
பணிபுரிய வேண்டும்.
அவர்களும் இயேசுவைப் போலவே பாடுகள் பட வேண்டியிருக்கும்.
உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.
இன்று உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த அத்தனை குருக்களும் இயேசுவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இயேசுவுக்குள் இருக்கும் அதே தூய ஆவிதான் இன்றைய இயேசுவின் சீடர்களையும் வழி நடத்துகிறார்.
இயேசுவுக்குரிய பாவமன்னிப்பு அதிகாரம் இவர்களுக்கு உண்டு.
இவர்கள் மூலமாகவே
தம்மையே நமது ஆன்மீக உணவாக தருகிறார்.
ஒரே வரியில்,
இயேசு இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நமது குருக்களில் இயேசுவை பார்க்கிறோமா?
எதற்காக அவர்களில் அவர் வாழ்கின்றாரோ அதை செய்கின்றோமா?
அதாவது,
நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றுக்கொள்கிறோமா?
தகுந்த ஆன்மீக தயாரிப்போடு ஆண்டவரின் திரு உடலையும், திரு இரத்தத்தையும் உணவாகப் பெற்றுக் கொள்கிறோமா?
சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
இயேசு நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நாம் இயேசுவோடு வாழ்கின்றோமா?
சிந்திப்போம்.
செயல் புரிவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment