Friday, May 14, 2021

"ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்."(அரு.15:16)

"ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்."
(அரு.15:16)


பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக இயேசுதான் விண்ணிலிருந்து மண்ணிற்கு நம்மைத் தேடி வந்தார்.

நமக்கு நற்செய்தியை அறிவித்து நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார்.

அவர் போதித்த நற்செய்தியை மற்றவர்களுக்கு போதிப்பதற்காக இயேசு தான் நம்மை தேர்ந்து கொண்டார்.

நாம் அவரைத் தேர்ந்துகொள்ளவில்லை,

  நாம் அவரை ஏற்றுக்கொண்டோம்.

 உலகில் நாம் செல்லும் இடமெல்லாம் மற்றவர்கள் பலன் பெறும் படியாகவும், 

பெற்ற பலன் நிலைத்திருக்கும்படியாக நற்செய்தியை  அறிவிக்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறோம்.

 நாம் பெற்ற  நற்செய்தியை நமது வாழ்வாக மாற்றவும், 

நாம் கொடுக்கும் நற்செய்தியை பெற்றவர்கள் தங்கள் வாழ்வாக மாற்றவும் 

நமது தந்தையிடம்,

 இயேசுவின் பெயரால் கேட்பதெல்லாம்  நமக்குத் தருவார்.

நற்செய்தியை வாழ்வாக  தேவையான வரங்களை  தந்தையிடம் கேட்க வேண்டும்.

இயேசுவின் பெயரால் கேட்க வேண்டும்.

ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து ஒரு டஜன் மார்கோ சோப்பு வேண்டும் என்று கேட்டால் நமக்கு என்ன பதில் கிடைக்கும்?

"ஹலோ இது ஹோட்டல். சாப்பிட எது வேண்டுமானாலும் கேளுங்கள். கிடைக்கும்!"

ஒரு ஜவுளி கடைக்குள் நுழைந்து,

" ஒரு பிளேட் மட்டன் பிரியாணி"

 என்று கேட்டால் கடையில் உள்ளவர்கள்   சிரிப்பார்கள்!

ஏனென்று சொல்லத் தேவையில்லை.

ஆங்கில ஆசிரியரிடம் போய் கணக்கு சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கக் கூடாது.

யார் யாரிடம் எது கேட்க வேண்டுமோ அதைக் கேட்டால் நிச்சயமாக கிடைக்கும்.

"நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்."

என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

 "கேட்பதெல்லாம்'' என்றால், எந்த நோக்கத்திற்காக தந்தை மகனை உலகிற்கு அனுப்பினாரோ அந்த நோக்கம் சம்பந்தப்பட்டதை எல்லாம் என்று பொருள்.

பாவமன்னிப்பு சம்பந்தப்பட்ட, நமது ஆன்மீக  வாழ்வோடு தொடர்பு உள்ள எதை கேட்டாலும் தந்தை நிச்சயமாக தருவார். 

முழுக்க முழுக்க உலகியல் சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்டால்

  அவை நமது ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருந்தால் மட்டும் தருவார்.

அப்படியானால் உலகியல் சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்கவே கூடாதா?

தாராளமாக கேட்கலாம்.

இறைவன் நமது தந்தை.

விண்ணக வாழ்வு என்ற நோக்கத்தோடு அவர் நம்மை படைத்தாலும் 

படைத்து, நமக்காக அவரே படைத்த உலகில்தான் முதலில் வாழும்படி விட்டிருக்கிறார்.

இவ்வுலக வாழ்க்கையின் போதுதான் விண்ணக வாழ்வுக்காக நம்மை நாமே அவரது முழுமையான உதவியுடன் தயாரித்துக்கொள்ள  வேண்டும்.

நமது உடல் உட்பட அனைத்து உலக பொருட்களையும் பயன்படுத்திதான் விண்ணக வாழ்விற்கு நம்மை நாம் தயாரிக்க வேண்டும்.

விண்ணக வாழ்வுக்கு நம்மை தயாரிப்பதில் நமக்கு உதவுவதற்காகக்தான் இவ்வுலகையும் அதில் உள்ள பொருட்களையும் இறைவன் படைத்திருக்கிறார்.

  "உன்னை நேசிப்பது போல உனது அயலானை நேசி''

என்று நமக்கு அன்பு கட்டளை கொடுத்துள்ள கடவுள் 

நமது அன்பை சிந்தனையால் மட்டுமன்றி சொல்லாலும், செயலாலும் காண்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமக்கு நமது உடலையே தந்திருக்கிறார்.

நமது உடலை கொண்டும், நம்மிடமுள்ள உலகப் பொருள்களைக் கொண்டுதான் நமது ஆன்மா பிறரன்புப்பணி புரியவேண்டி இருக்கிறது.

பிறர்பணியும் இறைபணிதான்.

ஆக இறைப்பணி முழுமையாக, நல்ல முறையில்  ஆற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஆரோக்கியமான வாழ்வுக்காக வேண்ட வேண்டும்.

அயலானுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்பதற்காகத்தான் உலக பொருள்களையும் தரும்படி வேண்ட வேண்டும்.

நமது உடலையும் நம்மிடமுள்ள உலக பொருட்களையும் ஆன்மீக பணிக்காக பயன்படுத்தும்போது உலக வாழ்வு ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது.

நமது செயல்களின் தன்மையை தீர்மானிப்பது செயல்கள் அல்ல, அவற்றிற்கான நோக்கம்.

நோக்கம் ஆன்மீக நோக்கமாக இருந்தால் நமது செயலும் ஆன்மீகம்தான்.

நாம் உண்பது, உடுத்துவது, வேலைக்குப் போவது, சம்பளம் வாங்குவது, அதை செலவழிப்பது கூட ஆன்மீக செயல்களாக மாறிவிடும், நமது நோக்கத்தில் ஆன்மீகம் இருந்தால்.

ஆசிரியர் கரும்பலகையையும், சாக்பீசையும் போதனா கருவுகளாகப் பயன்படுத்தவில்லை?

புத்தகத்தை மட்டும் அல்ல, கட்டுமானத்திற்கு பயன்படாமல் உடைந்து கிடக்கும் செங்கல்லை கூட போதனா கருவியாகப் பயன்படுத்தலாம், ஆசிரியர் நினைத்தால்.

அதேபோல் எந்த சடப் பொருளையும் ஆன்மீக நோக்கத்திற்காக பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும்.

 விண்ணுலகை அடைவதற்கு நமக்கு உதவிகரமாக இருப்பதற்காக மண்ணுலகு நமக்கு அருளப்பட்டுள்ளது!

சாப்பிட ஒன்றுமில்லாமல் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கூட

 தனக்குக் கிடைக்கும்  உணவை தன்னை விட ஏழைக்கு இறைவன் பெயரால் கொடுத்து   உதவும்போது  ஆன்மீகவாதியாக மாறிவிடுகிறான்.

 கடவுள்  தனது அளவில்லா அன்பின் அடிப்படையிலும், ஞானத்தின் அடிப்படையிலும்

 பல காரணங்களுக்காக நமது வாழ்வில் நோய் நொடிகள், ஏழ்மை போன்ற துன்பங்களை அனுமதிக்கிறார்.

அவரை மறந்து வாழும் நம்மை அவரிடம் திருப்புவதற்காக துன்பங்களை அனுமதிக்கலாம்.

துன்பங்கள் வரும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செய்து நாம் இறைவனை மறந்து வாழ்ந்திருந்தால் 

ஜெபத்தின் மூலம் அவரை நமது நினைவுக்குள் கொண்டு வர வேண்டும்.

"உம்மை மறந்திருந்த  என்னை  உம்மை நோக்கி திருப்புவதற்காக அனுப்பிய துன்பங்களுக்காக   நன்றி கூறுகிறேன்.

உனக்கு விருப்பமிருந்தால், எனக்கு ஆன்மீக நன்மை பயக்கும் என்றால் துன்பத்திலிருந்து எனக்கு விடுதலை கொடும்."


"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: 

எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்ற இயேசுவின்  ஜெபத்தை ஒட்டியே நமது ஜெபமும் இருக்க வேண்டும்.


சில சமயங்களில் ஆண்டவரிடம் ஒப்புக் கொடுப்பதற்காகவே துன்பங்கள் வரும்.

புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு ஐந்து காய வரம் வந்தது போல.


அதை நாம் அறிய வந்தால் இறைவன் அனுமதித்த துன்பங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்து

விண்ணக சம்பாவனையை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில்  நமது பாவங்களுக்கு  பரிகாரமாகவே கடவுள் துன்பங்களை அனுப்பலாம்.

பாவப் பரிகாரமாக அவற்றை பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும்.

இயேசு இவ்வுலகில் நம்மைப்போல வாழ்ந்த காலத்தில் நோயாளிகளிடம் விசுவாசத்தை ஏற்படுத்தி அதை உறுதிப்படுத்துவதற்காக நோய்களை குணமாக்கினார்.

நமது விசுவாசமும் ஆழமாக இருந்தால் எந்த நோக்கத்திற்காக துன்பங்களை அனுப்பினாரோ

 அது நிறைவேறியவுடன் துன்பங்களை நம்மை விட்டு அவராகவே விலக்கி விடுவார்.

இன்றைய காலகட்டத்தில் கொரோனா என்ற பெரிய துன்பம் மனுக்குலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இது தன்னை மறந்து வாழும் மனுக்குலத்தை தன்னிடம் திருப்புவதற்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட துன்பம்.

இதிலிருந்து விடுதலை பெற மனுக்குலம் முழுவதும் இறைவனை நோக்கி மனம் திரும்பவேண்டும்.

"இறைவா நாங்கள் உம்மை மறந்து வாழ்ந்தது எங்கள் தவறுதான்.

ஏற்றுக் கொள்கிறோம்.

உமக்கு சித்தம் இருந்தால் இந்த துன்பத்திலிருந்து எங்களுக்கு முழுமையான விடுதலை கொடும்.

இனிமேல் உம்மை எந்த காரணத்தை முன்னிட்டும் மறக்க மாட்டோம்.

எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்.''

மனுக்குலம் முழுவதும் இறைவனிடம் திரும்ப வேண்டும் இன்று நாமும் வேண்டிக்கொள்வோம்.

நாம் மனம் திரும்பியவுடன் 
வந்த கொரோனாவும் வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

மனுக்குலம் மனம்திரும்பவும்,

கொரோனாவிலிருந்து விடுதலை   கிடைக்கவும்,
 இறைவனை நோக்கி மன்றாடுவோம். 

நமது மன்றாட்டு உறுதியாக கேட்கப்படும்.

உறுதியாக விசுவசிப்போம்.

விசுவாசம் வெற்றி பெறும்.

"ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்."

இது நம் ஆண்டவரின் அருள்வாக்கு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment